Sunday, July 12, 2020

மாறிவிட்ட படலங்கள்

மாறிவிட்ட படலங்கள் (சிறுகதைகள் சீ2 – 47)
#ganeshamarkalam

யார்தான் இப்படின்னு வச்சாளோ? துளிக்கூட பிடிக்கலை. இன்னைக்கு என்னை 17ஆவது வாட்டி பொண் பாக்க வரா.

இது என்ன, ஹைதரலி காலத்துக் கதையா, பையனைப் பெத்து வச்சுட்டு பொண் கிடைக்காதான்னு நாயா பேயா அலையற சமுதாயத்துக்கு இந்த மனுஷர் இப்போ ட்விட்டர் யுகத்தில் இப்படி எழுதராரே? கேக்கலாம்.

அப்படித்தான். 1990இல் நடந்தது. இப்போ ஏன் சொல்லணும்? இன்னுமா கல்யாணம் ஆகலை? எல்லாம் ஆச்சு. நான் கதையை என் பொண்ணுக்கு சொல்லிண்டிருக்கேன். கேட்டா கேளுங்கோ, இல்லைன்னா பேசாம போயிடுங்கோ.
என் பொண்ணுக்கு 28 வயசாச்சு. எந்த வரன் வந்தாலும் வேண்டாம்கிரா. “நீ கல்யாணம் செஞ்சுண்ட போது பையனை எப்படிம்மா தேர்ந்தெடுத்தாய்?” கேள்வி. அதான் என் கதையை சொல்ல ஆரம்பிச்சேன். திரும்ப முதல் பாராவை படிச்சுட்டு அப்புரம் கீழே படிக்கவும்.

“17ஆவதா?” ஆச்சர்யப்பட்டு முகத்தை சுழிச்சவளை பாத்து “வாயை மூடிண்டு கதையைக் கேளு, என்னை பிடிச்சதுன்னு சொன்னவன் 19ஆவதா வந்தவன்.” “அப்போ 17ஆவதா வந்தவன் கதை எதுக்கு?” “அவனைத்தான் எனக்குப் பிடிச்சது.” “அப்படீன்னா நீ கடைசீயா பாத்து கல்யாணம் செஞ்சுண்ட அப்பாவை பிடிக்கலையா?” மடக்கினா. “அமாம்டீ, இத்தனை நாளாச்சு, நீயும் கேட்டுட்டாய், இப்போ சொல்ரத்துக்கு என்ன, #17தான் ரொம்பவே பிடிச்சிருந்தது. பிராப்தமில்லை.”

திரும்ப திரும்ப ஒருத்தியை பொண் பாக்கர படலம்னு ஒண்ணை ஏற்பாடு பண்ணி, சீவி சிங்காரிச்சு வரச்சொல்லி “எல்லொருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு போ, காபி எடுத்துண்டு வந்து எல்லொருக்கும் கொடு”ன்னு ஏன் வச்சாளோ?

9க்கு அப்புரம் பழகிப்போச்சு. சீக்கிரம் ட்ரெஸ் செஞ்சுண்டுடுவேன். எங்கம்மாவொட ஒட்டியாணம் வரைக்கும் மாட்டிண்டு அவா வரத்துக்கு முன்னாடியே ரெடியாகிடுவேன். “அவாள்ளாம் உக்காந்தாச்சே நான் போய் நமஸ்காரம் செஞ்சுட்டு வந்துடட்டுமான்னு அவசரப்படுத்துவேன். “பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ”ன்னு சிக்னல் வராதான்னு காத்திண்டிருப்பேன். ஏன்னா கழுத்திலும் காதிலும் தொங்கறதை, இடுப்பை நெறிக்கரதை சீக்கிரம் கழட்டி வீசணும். வரவா என்ன முடிவெடுப்பான்னு 7ஆம் அறிவும்பாளே அது சொல்லிடும்.

சில சமையம் மத்தாநாளும் ஒருத்தர் வரான்னு தரகன் சொல்லுவான். அப்போ நகையெல்லாம் போட்டுண்டே தூங்கினால் கார்த்தாலே எழுந்து மூஞ்சி அலம்பிண்டு பொட்டு வச்ச்சிண்டுட்டா போதுமேன்னு தோணும். இல்லை எல்லாத்தையும் போட்டுண்டு வாசலில் போய் நின்னுட்டா ஒவ்வொருத்தரா வந்து பாத்துட்டு அப்படியே போகப்பிடாதோன்னு படும். ஒவ்வொரு தடவையும் 8 அல்லது 10 பேர் வரா. ஆளுக்கு ரெண்டு பஜ்ஜீன்னா 20. ஆக 400 பஜ்ஜி. சிலதுகள் இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி திங்கும். கூடை நிறைய பண்ணி வாசத்திண்ணையில் வச்சுட்டு நானும் பக்கத்துலேயே சிங்காரிச்சுண்டு நின்னா ஆச்சே!

அப்பா கோவில் குருக்கள். திருச்சீலேந்து திருவையாறு போர வழீலே காவேரிக்கரையில் திருக்காட்டுப்பள்ளி எங்கூர். அக்னீஸ்வரர் கோவில் சன்னிதி தெருவில் எங்காம். ஒரே பொண். சித்தே குண்டாயிருந்தேன். கல்யாண வயசுன்னு வந்ததும் சித்தே இளைச்சேன். அப்போ தமிழ் சினிமா ஹீரோயின் குண்டாத்தான் இருந்தா, வாயப் பொளந்துண்டு பாத்ததுகள். கல்யாணம் செஞ்சுக்கன்னா மட்டும் பொண் இளைச்சிருக்கணுமாம். சில இடத்தில் மட்டும் சதை நிறைய வேணும். 

ஆம்பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும்னு எங்கம்மா ஜாடை மாடையா சொல்லி கொடுத்தா. “உவ்வே”ன்னு வந்தது. “என்னடீ உவ்வேங்கரே, எல்லாம் எல்லொரும் பண்ரதுதான், நன்னாத்தான் இருக்கும்.” உண்மையில் “உவ்வே”யா இல்லை “புளகாங்கிதமா”ன்னு தெரிஞ்சுக்க கல்யாணம் திகையணும்.

வந்த எல்லொரும் பேசி வச்சுண்டா மாதிரி ஊருக்குப் போய் கலந்து பேசி லெட்டர் போடரோம்னு சொன்னா. “அதுவும் ஒரு சம்பிரதாயம்டீ!” - அப்பா. ஒரு வரன் “பிடிச்சிருக்கு”ன்னு ஒரே வாரத்தில் லெட்டர் போட்டா. ஆனால் ரொம்பவே எதிர்பார்த்தா. கையில் காதில் மாட்டிண்டு காமிச்சுட்டேனோன்னோ, அதுக்கும் மேலே எதிர்பாத்தா. அப்பாகிட்டே சொன்னேன், இருக்கரது 40 பவுன். எல்லாத்தையும் டிஸ்ப்ளே வேண்டாம் ஒரு 12 எடுத்து வச்சுடலாம்னு. ஒவ்வொருத்தரா கூப்டு சீன் போடரத்துக்கு பதிலா “பெண் பாக்கும் வாரம்”னு ஒண்ணு வச்சிண்டு டைம் ஸ்லாட் கொடுத்து டைட்டா கோவார்டினேட் செஞ்சு ஒட்டுக்க காமிச்சுட்டு முடிச்சுடலாம். 

ஒவ்வொரு வரனும் கிளம்பிப்போனதும் இப்படி புதுப்புது ஐடியா வரும். பெத்தவா வருத்தப்படரச்சே விட்டேத்தியா பேசறது நன்னா இல்லைதான். என் துக்கத்தை மறைக்க எனக்கே சிரிப்பு வராத ஜோக்கையெல்லாம் அடிச்சுப்பேன். 

அப்பாவே திண்ணையில் பஜ்ஜிக்கூடை ஐடியாவை கேட்டுட்டு லேசா சிரிச்சர். அவருக்கும் பொண் குழந்தைகளை படித்தி எடுக்கும் இந்த கூத்து பிடிக்கலைன்னுதான் சொல்லணும். ஒருதடவை என்ன தோணித்தோ, :ஒரு வரன் இருக்குன்னு வந்த வடக்குத்தெரு மாமாவை “வரனும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்”னு வள்ளுன்னு விழுந்தர். அம்மா கோவிச்சுண்டா. அம்மா கோவிச்சுண்டதுக்கு என்ன காரணம்? எனக்குத்தெரியும். என்மேல் உள்ள கரிசனம்னு நினெச்சுடப்பிடாது. அப்பாதான் முதல்ல அம்மாவை பொண் பாக்க வந்தாராம். பிடிச்சிருக்குன்னு சொன்னதால் சட்டுன்னு கல்யாணம் ஆச்சாம். இவளுக்கு இன்னும் அஞ்சாறு பாத்திருக்கலாம்னு தோணித்தாம். நல்ல அப்பாவை அவள் அப்படி நினெச்சதுதான் என்னை இப்படி வாட்டி வதைக்கிறதோ?

“பொண் பாக்கன்னு நீ யாரையாவது அழைச்சிண்டு வந்தாயான்னா ஒத்துக்க மாட்டேன்.” என் பொண் இப்போ சொல்ரா. “பொண்ணும் புள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க வேண்டாமாடீ?” கேட்டா, “அதுக்கெல்லாம் எத்தனையோ வழி இருக்கு. முதல்ல நீ காமிக்கரவனைத்தான் கட்டிக்கணும்னு விதியா?” அதுவும் சரிதான். அவளே பாத்துட்டாள்னா, அப்புரம் பொண் பாக்கிர சம்பிரதாயமே தேவையில்லையே! “நீ பாத்துட்டா, பையனாத்தில் எல்லாரும் பாக்கவேண்டாமா? நம்பகம் எப்படி இருக்கு, நாம எப்படிப்பட்ட மனுஷா அந்தஸ்து எல்லாத்தையும் ஒருத்தராத்துக்கு போனாத்தான் கணிக்க முடியும்டீ.” “அப்படீன்னா பிள்ளையாத்தை நாம எப்போ கணிக்கறது?” “அதுக்கு சில வழிகள் இருக்குடி.” “அதையும் நானே கணிச்சுக்கரேன்!”

கதைக்கு வரலாம். 17ஆ வந்தவனை எனக்கு எல்லாவிதத்திலும் பிடிச்சிருந்தது. ராஜா மாதிரி. என் உடல் பாங்குக்கு ஏத்தவனா. நல்ல படிப்பு. கும்பகோணத்தில் நல்ல உத்யோகம். ஒரே தங்கை, அம்மா அப்பா பார்க்க நல்லவர்களாய் தெரிந்தார்கள். இவன் மட்டும்தான் நான் நடந்து வரச்சே என் கண்களைப் பார்த்து தன் கண்களால் சிரித்தான். மத்ததுகள் நேர பார்வையை என் கழுத்துக்கு கீழே கொண்டுபோனா. “பொண்ணோட தனியா பேசலாமா?” அப்பாகிட்டே நேரவே கேட்டான். ரொம்பவே யோசிச்ச அப்பா “சரி அங்கே போய் பேசுங்கோ”ன்னு மித்தத்துக்கு அந்தப்பக்கம் ரேழி மாதிரி இருந்த இடத்தை காட்டினர். ஆனா எங்களை ஒரு 12ஜோடிக்கண்கள் பாத்துண்டிருந்ததை உணரமுடிஞ்சது. அதிகம் பெச முடியலை. 

“நீ இன்னும் படிக்கணும்னு ஆசைப்படரையா?” கேட்டான். இன்னும் படிக்க்கணுமான்னு மலைப்பா இருந்தது. இவனே பாடம் எடுப்பானோ, இல்லை இவன் அப்பா காலேஜ் நடத்தராரா? சும்மா ஏதோ கேக்கணும்னு கேட்ட மாதிரியும் என் குரல் கேட்டால் போதும்னு கேட்டான்னு புரிஞ்சது. “நீ ஏதாவது கேக்கணுமா?” அடுத்த கேள்வி.
சட்டுன்னு தெரியலை. “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?” டக்குன்னு கேட்டுட்டேன். அப்போ இன்னொரு தடவை பொண் பாக்கன்னு யாரும் வரப்பிடாதுங்கிறது மட்டும்தான் மனசில் இருந்த கவலை.

“பிடிச்சிருக்கு, ஆனால் ஆத்தில் மத்தவாளுக்கு எப்படீன்னு தெரியலை”. அம்மா சொன்ன உவ்வே விஷயங்கள் இவனுக்கும் பிடிக்குமான்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அதை எப்படி கேக்கரது? தைரியம் இல்லை. அதுக்குள்ள அவன் அம்மா “என்ன பேசியாச்சா?” கூப்பிட்டா. “இதோ வரேன்” எங்கிட்டே ஒண்ணும் சொல்லாம போயாச்சு. சரியான அம்மா கோண்டு போலேருக்கு, மனசில் இந்த 2 நிமிஷம் 36 செகன்ட் நடந்த சம்பாஷணையில் இவன் எனக்கு மாப்பிள்ளையா வந்தா நன்னாயிருக்கும்னு பட்டது.

அம்மாக்கோண்டை மாத்திக் காமிக்கணும்னு ஒரு ஆசை. அப்படிப்பட்ட எண்ணமே மின்னாடி வந்த பசங்கள் கிட்டே வரவேயில்லை.

“அப்பாகிட்டே உனக்கு என்ன பிடிச்சது?” திடீர்னு பொண் கேட்டா. “இப்போ எதுக்குடீ, அதெல்லாம் கிடக்கட்டும் உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா, காதல் கீதல்னு, சொல்லு அவனையே பார்க்கலாம்.” “தேவலையே நீ கூட முற்போக்கு சிந்தனையா வச்சிருக்காயே!” ஆச்சர்யப்பட்டா. “ஏண்டி இன்னைக்கு நேத்தா நான் சொல்ரேன், எல்லா அம்மாவும் தனக்கு நேர்ந்த அசம்பாவிதங்கள் கொடுமைகள் தான் பெத்த பொன்ணுக்கு நடந்திடக் கூடாதுன்னுதான் நினெப்பா. உன்னை கட்டுப் பெட்டியாவா வளர்த்தேன்? உன்னை நல்ல ஒரு பையன் கையில் பிடிச்சுக் கொடுத்துடணும், அப்புரம் நிம்மதி, பொண்ணைப் பெத்தவா இப்படித்தான் கவலைப்படுவா, என்னதான் காலம் மாறினாலும் இதுதான் உண்மை”

“நானா என் வாழ்க்கையை அமைச்சுக்க கூடாதாம்மா?” “நிச்சயமா அமைச்சுக்கலாம், அப்போவும் உன் வாழ்க்கை நன்னா அமையணுமேன்னு கவலைப்படுவேன். அதுக்கு எனக்கு ரைட்ஸ் இருக்கு.” அடிச்சுச்சொன்னேன்.

“சரிம்மா, என் ஆபீஸில் கணேஷ்னு ஒருத்தர். எனக்குப் பிடிக்கும் நீயும் அப்பாவும் அவரை பாருங்கோ.” ஒரு சீட்டில் விவரம் எழுதித்தந்தா. “ஏண்டி முன்னாடியே சொல்லலை?” “எனக்கே ஒரு மாசமாத்தான் அவரைப் பிடிக்கரதுன்னு தெரிஞ்சது அதான்.” “அவனுக்கு உன்னை பிடிக்கரதா?” “என்மேல் வெறியா இருக்கான். நான் சொன்னா தலைகீழே நடப்பான். நான் அவாத்துக்கு போயீருக்கேன். நீ சரீன்னா அழைச்சிண்டு வரேன்” “முதல்ல இதை உங்கப்பாவுக்கு சொல்லணும்டீ. அவர் ஒத்துக்கணுமே!” “ஓத்துக்க வைக்கரது உன் வேலை.” கிளம்பிப் போயிட்டா.

என்னை 19ஆவது தடவையா பொண்ணு பாத்துட்டு ஆத்துக்கு போய் சரின்னு லெட்டர் போட்ட அந்த மஹானுபாவன் முதல் ராத்திரியில் அவரே “நான் பார்த்த 7ஆவது பொண்ணு நீ”ன்னு கழண்டு விழுந்த மெட்டியை என் கால் விரலில் மாட்டி விட்டுண்டே சொன்னார். இன்னும் ஞாபகம் இருக்கு. அவர் கிட்டே நம் பொண் அவளே மாப்பிள்ளை பாத்துட்டாள்னு எப்படி சொல்லி புரிய வைக்கிரது? காதல் கல்யாணத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லைன்னு தெரியும். ஏதாவது செய்யணும். அப்படியே பொண் பாக்கரதுன்னு வச்சிண்டாலும் கணேஷ் ஆத்திலேந்து வரசொல்லி காரியத்தை காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிடணும்னு நினெச்சிண்டேன்.

“கூட வரேளா, சித்தே பெருமாளை செவிச்சுட்டு வரலாம்”னதும் நொட்டு சொல்லாம கூட வந்தார். பிரசாதம் வாங்கிண்டு உக்காந்ததும் பேச்சை எடுத்தேன். 

“வருஷம் ஆகிண்டே இருக்கு, பொண்ணுக்கு வரன் பாக்கிர ஐடியா இருக்கா இல்லையா?” அது என்னன்னு தெரியலை கன்ஃப்ரென்ட் செய்யரா மாதிரி வார்த்தை வந்துடுத்து. ஆச்சர்யமா என்னை பார்த்தவர், “ஏன் நான் பாத்திண்டிருப்பது உனக்கு தெரியாதா, ரெண்டுபேரும் சேர்ந்து போய்த்தானே ஜோஸியரைப் பாத்தோம், முதல்ல உன் பொண் என்ன சொல்ரான்னு கேட்டியா?” “இப்போ வேண்டாம்னு சொல்லிண்டிருந்தவள் போன வாரம் சரின்னா.” “அப்படியா, பேஷ் பேஷ், அப்போ சீக்கிரம் பண்ணிடணும். ஒரு பாரம் மனசுலேந்து இறங்கும்.” “ஆத்துக்கு போனதும் நீங்க அவகிட்டே பெசரேளா?” “பெசரேன். ரெண்டு மூணு வரனும் போட்டோவும் வச்சிண்டு பேசலாம் – என்ன திடீர்னு?.” “இல்லை, அவளே யாரையோ விரும்பரான்னு பட்டது. அதான். நீங்க கோவிச்சுக்க போரேள்னு பயத்தில் சொல்லாமல் இருக்கலாம்”

தீர்க்கமா ஒரு பார்வை பாத்துட்டு, “நேரே விஷயத்துக்கு வா, உனக்கு என்ன தெரியும்? உங்கிட்டே ஏதாவது சொன்னாளா?” ஆமாம்னு விவரங்களை தந்தேன். “அப்படீயா, எங்கிட்டேயே சொல்லியிருக்கலாமே. நான் ஒண்ணும் காதலுக்கு எதிரியில்லையே. நல்ல குடும்பமும், உத்யோகமும் இருந்துட்டா ஜாதகத்துக்கு கூட அலட்டிக்காம பண்ணிவச்சுடலாம். நாளைக்கே பெசரேன்.” எனக்கே ஆச்சர்யமா இருந்தது. இந்த மனுஷரை நாமதான் 30 வருஷம் ஆகியும் சரியாப் புரிஞ்சுக்கலையோன்னு பட்டது. ஆத்துக்கு திரும்பி நடந்து வரச்சே “உங்களுக்கு காதல் கல்யாணம்னா பிடிக்குமா?” கேட்டேன்.

“பிடிக்காம என்ன, கல்யாணத்துக்கு முன்னாடியோ, இல்லை பின்னாடியோ காதல் அவசியம். நான் உன்னை பொண் பார்த்துட்டு போய் அப்புரம் காதலிக்க ஆரம்பிக்கலையா?. என் குழந்தை பொண் பாக்கரத்துக்கு முன்னாடி காதலிக்கரா. அவ்ளோதான்”. கேட்டதும் முதல்தடவையா இவர்மேல் எனக்கும் காதல் வந்தது. மனுஷர் சொல்லவேயில்லை! நான் இன்னும் #17 ஐயே நினெச்சிண்டு.

ஒரே வாரத்தில் எல்லாம் ஃபிக்ஸ் ஆயிடுத்து. போனில் கணேஷ் அப்பாவோட இவர் பெச, “எங்களுக்கெல்லாம் விஷயம் தெரியும். நாங்க பொண்ணை பாத்துட்டோம். நீங்க வேணும்னா பையனைப்பாக்க வாங்கோ”ன்னுட்டா. போனோம். என் பொண்ணு சுவாதீனமா உள்ளே போய் எல்லாருக்கும் டிபன் காபி எடுத்துண்டு வந்தா.

எல்லாருக்கும் பிளேட்டில் ரெவ்வெண்டு வாழைக்காய் பஜ்ஜீ!

No comments:

Post a Comment