ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 3
1965-ல் பெரியவா மெட்ராஸ் பக்கத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் முகாம். அப்போது இரவில் கொஞ்சம் விஶ்ராந்தியாக ஒரு சில பக்தர்கள் மட்டுமே பெரியவாளுடன் இருந்தபோது, ஏதோ ஒரு நாட்டில் ராணுவப் புரட்சி நடந்த போது, அந்நாட்டு மன்னரையோ அல்லது ஜனாதிபதியையோ ராணுவ ஸிப்பாய்கள் துரத்திவிட்டு, நாட்டை தங்கள் வஸம் கொண்டு வந்ததைப் பற்றி பெரியவாளிடம் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
பெரியவா தனக்கே உரிய நமுட்டு சிரிப்புடன்
“நம்ப மடம் கூட ரெண்டு தரம் அரெஸ்ட் ஆயிருக்கு. தெரியுமோ?…”
யாருக்கு தெரியும்? அருமையான வாக் வர்ஷத்துக்காக எல்லாரும் காதைத் தீட்டிக் கொண்டிருந்தனர்.
“அரெஸ்ட் பண்ணினது யார் தெரியுமோ? ஶிவாஜி மஹாராஜா!…இந்தக் கதையெல்லாம் சொன்னவ, ஒரு பாட்டி! ஹிஸ்ட்ரி ஸ்காலர்ஸ் கூட தோத்துப் போறா மாதிரி, அத்தன எலாபரேட்டா அந்தப் பாட்டி சொல்லியிருக்கா! அவளே அந்தக் கதைல ஒரு பாத்ரம் வஹிச்சவ! பாத்ரம் வஹிச்சு அம்பது வர்ஷத்துக்கப்புறமும், ஒரு வெவரமும் மறக்காம, தன்னோட பேரக் கொழந்தேளுக்கு சொல்லியிருக்கா. ஆதியில நடந்த கதையை, இன்னிக்கும் புதுஸ்ஸா அனுபவிக்கறா மாதிரி சொல்லியிருக்காளாக்கும்…”
எல்லாரும் தங்கள் தங்கள் ஆஸன ஸௌகர்யத்தை அட்ஜஸ்ட் செய்து கொண்டு, பெரியவா போட்ட பீடிகைக்கு மேல், இனி என்ன கதை? என்று ஆவலாக காதைத் தீட்டிக் கொண்டார்கள்.
“மஹாராஷ்ட்ர ராஜ பரம்பரைல வந்த ஸரபோஜி ராஜா, தஞ்சாவூர்ல பட்டத்துல இருந்த காலம். அதாவுது, போன 19th ஸெஞ்சுரியோட ஆரம்பக் காலம்ன்னு வெச்சுக்கலாம். அவருக்கும், அவரோட சித்தப்பா அமரஸிம்ஹ மஹாராஜாவுக்கும் கட்சி-ப்ரதிகட்சி சண்டைகள் நடந்து….நடுவுல வெள்ளைக்கார தொரைகள் “கொரங்கு மத்யஸ்தம்” [குரங்கு, பூனைகளை ஏமாத்தின கதை] பண்ணி, ஸரபோஜியை ராஜா ஆக்கினா…! ராஜான்னு பேர்தானேயொழிய, ராஜ்யத்ல தஞ்சாவூரும், வல்லமும் மட்டுந்தான் அவர் கைக்கு வந்துது! பாக்கியெல்லாம் வெள்ளக்காரா ஆட்சில இருந்த, “மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி”க்கு போய்டுத்து!
இந்த மாதிரி “கபளீகரம்” பண்றச்சே, வெள்ளைக்காரா பண்ணினது [பெரியவா தன் தலையில் விரலை வழித்து “மொட்டை” அடித்ததை அபிநயம் பண்ணுகிறார்] ….ராஜாக்களுக்கு நெறைய பென்ஷன் குடுத்து ஸாமர்த்யமா அவா வாயை அடைச்சுடுவா! [சிரித்துக் கொண்டே] அந்த ரீதீல, இப்போ ஸரபோஜி, அமரஸிம்ஹன் ரெண்டு பேருக்குமே பென்ஷன் குடுத்து ஸெரி கட்டிட்டா! ரெண்டு பேருக்குமே “மஹாராஜா” பட்டமும் குடுத்தா!
ரெண்டு பேருக்கும் நடுவுல எத்தனை ஸொந்த சண்டைகள் இருந்தாலும், ரெண்டு பேருமே மஹா படிப்பாளிகள்; ஸகல கலா வல்லவர்கள்; வேத ஶாஸ்த்ர வித்வான்களை நன்னா போஷிச்சவா! ஸரபோஜி, தஞ்சாவூர்ல இருந்துண்டு ஶாஸ்த்ரங்களை, கலைகளை போஷிச்சார்..ன்னா, அமரஸிம்ஹன் திருவிடைமருதூர்-ல இருந்துண்டு அதே கார்யத்தை செஞ்சார்.
அவர் தஞ்சாவூர்லேர்நது, பட்டத்தை விட்டுட்டு திருவிடைமருதூர் வந்தப்போ, அவரோடேயே அநேக மஹாராஷ்ட்ர பண்டிதாளும் குடும்பத்தோட இங்க வந்து குடியேறினா. சுத்துப்புறத்துல இருக்கற “லோக்கல்“வித்வான்களையும் சேத்துண்டு அமரஸிம்ஹ ராஜா ஶாஸ்த்ரத்தை, கலாச்சாரத்தை நன்னா வ்ருத்தி பண்ணிண்டிருந்தார்.
அந்த ஊர்ல ஒரு ப்ராஹ்மணர், கன்னட தேஸத்து ஹொய்ஸள க்ரூப்பை சேர்ந்தவர். மஹாராஷ்ட்ர ஆட்சிக்கு முன்னால, தஞ்சாவூர்ல நாயக்கர்கள் ராஜ்யத்தை ஸ்தாபிச்சு, அதோட மொதல் மூணு ராஜாக்களுக்கும் குருவாயும், முக்ய மந்த்ரியாவும் இருந்த கோவிந்த தீக்ஷிதர், ஹொய்ஸள ப்ராஹ்மணர்தான்! 13th ஸெஞ்சுரிலேயே அகண்ட காவேரி ஸீமைல ஸெட்டில் ஆகி, அப்றம் மத்த எடங்களுக்கு பரவின ஹொய்ஸள குடும்பங்கள்ள ஒண்ணை சேர்ந்தவர்தான், நா… சொன்ன இந்த திருவிடைமருதூர் ப்ராஹ்மணர்!
அங்க… மஹாலிங்கஸ்வாமி வடக்கு கோபுர வாஸல் ஸன்னதி தெருவுல ஶங்கர மடம் ஒண்ணு இருக்கே! அது நம்மளோட மடத்தை சேர்ந்ததுதான்! அதுல அந்த ஹொய்ஸள ப்ராஹ்மணர் பூஜை பண்ணிண்டிருந்தார். அதோட, அப்போ கும்மாணத்ல இருந்த நம்மளோட மடத்ல, முத்ராதிகாரியாவும் இருந்துண்டு, திருவிடைமருதூர்லயும், சுத்து வட்டாரத்லயும் ஸிஷ்யாள் செய்யற ஆச்சார்ய ஸம்பாவனைகளை கலெக்ட் பண்ணி, தெனோமும் கும்மாணம் போய், அப்போ இருந்த ஆச்சார்ய ஸ்வாமிகளுக்கு ஸமர்ப்பிச்சிண்டு இருந்தார்.
அப்போ பீடத்ல இருந்தவர், 64-வது பட்டம்.
ஸ்ரீமடத்து முத்ராதிகாரி, உள்ளூர் மடத்து பூஜகர்ங்கறதால, அவரோட குடும்பத்தை அமரஸிம்ஹ ராஜாவை சேர்ந்த மஹாராஷ்ட்ர பண்டிதாள்ளாம் ரொம்ப அபிமானிச்சிண்டிருந்தா. அதுனால, அவராத்துல, சின்ன பஸங்ககூட, மராட்டில சக்கை போடு போடுமாம்! ஏற்கனவே வம்ஸ பரம்பரையா தமிழ்நாட்டுலேயே இருந்ததால, தமிழ் பாஷை, தமிழ்நாட்டுப் பழக்க-வழக்கம் எல்லாம் நன்னா ஊறியிருந்துது.
கும்மோணத்துக்கு வடகெழக்குல அஞ்சு மைல் தூரத்ல திருவிடைமருதூர். மடத்ல காலேல பூஜை ஆரம்பிக்கறச்சே பேரிகை அடிப்பா…அந்த ஶப்தம் திருவிடைமருதூர்ல கேக்கும்! அது கேட்டதும், அந்த ப்ராஹ்மணர் கும்மோணத்துக்கு கெளம்பிடுவார்! மடத்தோட “பேரி ” மொழக்கம் பத்தி interesting-கா கொஞ்சம் சொல்றேன்……
நகாரா, டங்கா..னு ரெண்டு தினுஸா தோல் வாத்யங்கள் மடத்ல அடிப்பா. நகாரா….ஸுமார் ரெண்டடி டயாமீட்டர் இருக்கும். அடிபாகம் சப்பட்டையா இருக்கும். ஒரு பெரிய உருண்டைக் கொடத்தை குறுக்க பேர்பாதியா வெட்டின மாதிரி, இரும்புல செஞ்ச தண்ணீர் இறவைசால் மாதிரி இருக்கும்.
டங்கா….அதவிட சின்னது. ஒரடி டயாமீட்டர் இருக்கும். இந்த ரெண்டையும் குச்சியால அடிச்சு வாஸிக்கணும். அதோட ஒரு பெரிய்ய வெண்கல ஜால்ராவும் தட்டுவா. இந்த….நகாரா, டங்கா, ஜால்ராக்கள லயவின்யாஸத்தோட, ஸ்ருதி ஶுத்தமா வாஸிக்கறதுக்குன்னே ஒரு குடும்பம் உண்டு. அவாதான் நம்ம மடத்லயும் கைங்கர்யம் பண்ணினவா!
அவா யாருன்னா…..கேட்டாலே ஆஸ்சர்யமா இருக்கும்! – துலுக்காதான்! உருது, ஹிந்துஸ்தானிதான் பேசுவா! உடையார்பாளையம் ஸமஸ்தான ராஜாதான் இந்த துலுக்காளை நமக்கு அனுப்பினார். அவருக்கு நம்ம மடத்து மேல விஸேஷ ஈடுபாடு, அபிமானம். மடத்தோட பவனி ஸமயங்கள்ள, குதிரை ஸவாரி பண்ணினவாளும் இந்த துலுக்காதான்!
[ஸெக்யூலரிஸம் என்றால் இதுதான்! என்பதை இன்றைய மேதாவிகள் புரிந்து கொள்ளட்டும்]
நா… இப்போ சொல்ற கதையோட காலத்ல, கும்மோணம் மடத்து வாஸல்ல பேரிகை மண்டபம்னு ஒண்ணு ஒஸரமா இருந்துது. நல்ல ஒஸரத்ல அடிச்சதாலயும், இப்போ மாதிரி பஸ், லாரி சத்தங்கள் இல்லாததாலயும், இங்க அடிச்ச பேரிகை, அங்க திருவிடைமருதூர் ப்ராஹ்மணர் வரை போயி, அவரைக் கெளப்பியிருக்கு !
தீபாராதனை ஸமயத்துக்கு மடத்துக்கு வந்துடுவார். ஆச்சார்யாள் பூஜை முடிச்சு, தீர்த்தம் குடுத்ததும் நாள் தவறாம வாங்கிண்டு, மடத்தோட ஸமாராதனைல த்ருப்தியா போஜனம் பண்ணுவார். அப்றம் கொஞ்சம் ஸ்ரம பரிஹாரம்; அப்றம் மடத்துக் கார்யம் எதாவுது குடுத்தா, பண்ணிட்டு ஸந்த்யாவந்தனத்துக்கு திருவிடைமருதூர் திரும்பிடுவார்……….
[வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில், திருச்செந்தூர் கோவில் மணி அடிக்கும் ஶப்தம் பாளையங்கோட்டை அரண்மனையில் கேட்குமாம்! அந்த மணி ஶப்தம் கேட்ட பின்தான், ராஜா மதிய உணவை ஸாப்பிடுவாராம்! என்ன ஒரு அமைதியான, தெய்வீகமான, கட்டுப்பாடான, ஸிம்பிளான வாழ்கை முறை!……அந்த நாளும் இனி வந்திடாதுதான்! நாம் நினைத்தால், நம் வாழ்க்கையை ஓரளவாவது அப்படி அமைத்துக் கொள்ளலாம்]
No comments:
Post a Comment