# (19) தினம் ஒரு திவ்ய
தேசம்.
திருநாகையென்னும்
நாகப்பட்டினம்!
நாயகியாக தன்னை
பாவித்து பெருமானின்
அழகில், மயங்கிய,
திரு மங்கை ஆழ்வார்,
பெருமாளிடம் மையல்
கொண்டு பாடுகிறார்.
மயிலாடுதுறையில்
இருந்து நாகப்பட்டினம்
செல்லும் பேருந்துகள்,
கோயில் அருகாமை,
வரை செல்கின்றன.
திரேதாயுகத்தில், ஆதி
சேடன்,பெருமாளை, தவமிருந்து,அவர் காட்சி
கொடுத்து, எப்போதும் ஆதிசேடனை,தனது
சயனமாக ஏற்று
கொள்வதாக அருளிய
க்ஷேத்திரம்.
இத்தலம் நான்கு
யுகங்களில் பெருமை
பெற்று திகழ்ந்தது.
ஆதிசேடன் ஆகம விதி
படி,அஷ்டாங்க விதான
முறையில் பெருமாளை
ஆராதிதித்ததால்,
அவன் பெயரால் நாகன்
பட்டினமாகி பிறகு
நாகப்பட்டினமாயிற்று.
திரேதா யுகத்தில், பூமா
தேவியும், துவாபர யுகம்,
மார்க்கண்டேயனும்
பகவானை தவம் இருந்து சேவித்த தலம்.
துருவன் தவமிருந்து,
அதன் பயனாக பெருமாளை, சேவித்ததும்,கேட்க வந்த, ராஜயோகம்
மறந்து, அவரையே
எப்பொழுதும் சேவிக்க
வேண்டுமென அவரது
அழகில் லயித்து வரம்
கேட்டானாம்.அது படியே
சௌந்தர்ய கோலத்தில்
இன்றும் காட்சி கொடுத்து வருகிறார்.
மூலவர் நீலமேக பெருமாள்.
உற்சவர் சௌந்திர
ராஜ பெருமாள்.
தாயார் சௌந்தர்ய வல்லி.( கஜ லட்சுமி)
கைங்கர்யம் செய்தவர்
களில் முதலிடம் பெற்ற
நாகர்கள், சோழர்கள்
முற்பட்டவர்கள்.
நின்ற, இருந்த, கிடந்த
மூன்று திருக்கோலமும்
இங்கே உண்டு.
திரு மங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களால்,
அச்சோ ஒருவர் அழகிய
வா என இப்பெருமான்
அழகில் வியந்து, மயங்கி, மையல் கொண்டு, மாந்தி மகிழ
மகிழ பாடி உருகுகிறார்.
அந்த அழகனை நாமும்
சென்று சேவித்து
மகிழ்வோம்.
ரமா ராஜகோபாலன்.
Thursday, October 24, 2019
"நவரத்திரி நாளின் சுண்டல் விநியோகம்
"நவரத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல்என்பது பெரியவரால் விளங்கியது."
(குடிகாரக் கணவனை திருத்திய சம்பவம்)
நவராத்திரி ஸ்பெஷல் கட்டுரை.
நவராத்திரியும் கொலுவும் மேல்தட்டு மக்களுக்காக என்று சில காலம் இருந்தது. குச்சு வீட்டுக்கும்கொலுவுக்கும் சம்பந்தமில்லாத படி, ஒரு இடைவெளியும் இருந்தது. அதற்கு சில வலுவான காரணங்களும் இருந்தன.
கொலு வைக்க முதலில் ஒரு பெரிய ஹால் வேண்டும். அதாவது இடம். அடுத்து, தினசரி வருகிறவர்களுக்கு வெற்றிலை – பாக்கு வைத்து தருவதோடு, சுண்டல் விநியோகம் இதில் முக்கியம். இது போக, தினசரி லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நைவேத்யம், பாகவதம் படிப்பது என்கிற கட்டங்கள் வேறு. இதை எல்லாம் ஒருவரால் செய்ய முடியாது. ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம்.
அன்றாடம் வேலைக்கு போனால்தான் வீட்டில் அடுப்பெரிய முடியும் என்பவர்களுக்கு துளியும் சாத்தியமில்லை என்கிற ஒரு நிலையை, இது உருவாக்கிவிட்டது. தன்னால் தான் கொலு வைக்க முடிய வில்லை – யாராவது வைத்திருக்கும் கொலுவுக்காவது போய் வணங்கி வரலாம் என்பதற்கும் சாதி, ஏழ்மை என்கிற குறுக்கீடுகள்.
மொத்தத்தில், மிகுந்த பொருட் செறிவுள்ள நவராத்திரி என்பது மேல் தட்டு மக்களுக்காக மட்டுமே என்று இருந்த ஒரு நிலையில்தான், பெரியவர் ஒரு ஏழைப்பெண் மூலம், ‘அது அனைவருக்குமானது. மனம் பக்தியோடு விரும்ப வேண்டியதே முக்கியம்’ என்பதை உலகத்துக்கு உணர்த்தினார்.
ஒரு குடிகார கணவனோடு அல்லாடிய அந்தப் பெண்ணும், வரிசையில் நின்று பெரியவரை சந்தித்தபோது அவள் கண்களில் அப்படி ஒரு சோகம். மனமும் தற்கொலை செய்து கொண்டுவிடும் எண்ணத்தில் எல்லாம் இருந்தது.
இவ்வேளையில்தான் பெரியவர் அவள் அவலத்தை, அவள் கூறாமலே புரிந்து கொண்டார்.
இந்த நாட்டில் பெண்களின் வாழ்வு என்பதே ஒரு சூதாட்டம் போலத்தான் இருக்கிறது. நல்ல கணவன் என்னும் தாயம் எல்லோருக்கும் விழுந்து விடுவதில்லை. அவளாலும் சுயமாக ஒரு மனம் நிறைந்த கணவனை தேர்வு செய்ய வாழ்வின் வழிமுறைகளில் இடமில்லை. இது என்ன கொடுமை அல்லது சோதனை என்பதுதான் அவளுக்குள் இருந்த கேள்வி.
அதற்கு பெரியவர் சொன்ன பதில், அவளுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; அது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்துக்கும் சேர்த்துதான்…
‘நம்ம சமூகத்துல வீட்டுப் பொண்ணு கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்வா. அதுக்கு உண்மையான அர்த்தம், அவ சந்தோஷமாய் புருஷனோட பிள்ளை குட்டிகள்னு வாழணுங்கறது மட்டுமில்லை. அப்படி அவ வாழற மாதிரி, அந்த வீட்டு ஆண்மக்கள் நடந்துக்கணும். எந்த ஒரு பெண்ணை ஒரு ஆண்மகன் அழ வெச்சாலும் சரி; அதுக்கான பதில் விளைவு, அவன் சகோதரி மூலமாவோ இல்லை; அவன் பெத்தெடுக்கப் போற பெண் மூலமாவோ வந்தே தீரும்.
அம்மா, அக்கா, தங்கைகள் மேல பாசமாய் ஒரு பவ்யத்தோட இருக்கறது பெருசேயில்லை. எல்லாப் பெண்கள் கிட்டயும் இந்தப் பாசமும் பவ்யமும் இருக்கணும். சாபங்கள்ள பெண் சாபத்துக்கு வேகம் அதிகம். ஆகையால, அந்த சாபத்துக்கு ஆளாகாம வாழறதுதான் உத்தமமான ஆண்மை’ என்று, ஆண் மைக்கு பொருள் கூறிய பெரியவர், எங்காவது ஒரு பெண் கண்ணீர் சிந்து கிறாள் என்றால், அதற்கு பின்னாலே நிச்சயம் அவளது வினைப்பாடு மட்டு மல்ல; அவளது குடும்பத்து ஆண்களின் வினைப்பாடுகளும் இருக்கும் என்று கூறியதுதான் இதில் முக்கியம்.
இதனால்தான் நம் சமூகத்தில் பல பெண்களின் திருமண வாழ்க்கை என்பது அமைந்தால்தான் உண்டு, இல்லாவிட்டால் சாகும் வரை சுருதி பேதத்தோடே வாழ வேண்டி வந்துவிடுகிறது. அதனால் பாதகமில்லை. எப்பேர்பட்ட அழுக்கையும், தோக்கிற விதமாக தோத்தால் நீக்கி விடமுடியும் என்னும்போது, இந்த வினைப்பாடுகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை.
மனித வாழ்க்கை என்பதே ஒரு மாயா விளையாட்டுதானே? ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்கு பிடிக்காமல் போகிறது; ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித ரசனை. எல்லாமே மாயையால்தானே?
அப்படி இருக்க, இங்கே பாவமே செய்யாமல், புண்ணியம் மட்டுமே செய்தபடி வாழ்ந்துவிட எத்தனை பேரால் முடியும்? தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியமாலும், புரிந்தும் புரியாமலும் தவறுகள் செய்வதும், பின் வருந்தித் திருந்துவதும்தானே, மனிதர்களின் வழக்கமாக உள்ளது.
தவறுகளிலேயே மூழ்கிவிடக்கூடாது. அறச்செயல்களையும் அவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், திருநாள் கொண்டாட்டங்கள் வருகின்றன. மகாமகம், கும்ப மேளா என்று நடப்பதெல்லாமே பாவமூட்டையின் கனத்தை குறைப்பதற்குதானே?
அதெல்லாம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் விசேஷங்கள். வருடாவருடமே ஒரு ப்யூரிஃபயரை, ஒரு ரெக்டிஃபிகேஷனை, ஒரு ப்ரிவென்ஷனை செய்து கொள்ளத்தான் நவராத்திரமே வகுக்கப்பட்டது.
விஷ்ணுவுக்கும், ஈஸ்வரனுக்கும், மற்றுமுள்ள முருகன், கணபதி போன்றோருக்கெல்லாம் ஒன்றிரண்டு நாள்தான் இம்மட்டில் கணக்கு.
அம்பாள் தாய்மை கொண்டவளல்லவா? அதனால்தான், வஞ்சனை இல்லாமல் மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் ஒன்பது ரசங்களுக்கும் ஆதாரமான ஒன்பது சக்தியை வாரி வழங்கி, தன் பிள்ளைகளை ரட்சிக்க ஒன்பது நாட்களுக்கு நவராத்திரியை நமக்கு கொடுத்துவிட்டாள்.
இப்படிப்பட்ட நவராத்திரியை அந்த ஏழைப்பெண்ணும் கொண்டாடச் சொல்கிறார் பெரியவர்.
‘பெருசா கொலு வைக்கணும்னு அவசியமில்லை. பக்தியோட நாலு பொம்மை போதும். ஒரு பலகை மேல கோலம் போட்டு, அந்த பொம்மைகளை வெச்சு தினசரி விளக்கேத்தி உருக்கமாய் வழிபடு. சிரமப்பட்டாவது தினசரி ஒரு தானியத்துல சுண்டல்பண்ணிடு. அதை உன் கையால எல்லோருக்கும் விநியோகம் செய்.
கொண்டக்கடலை சுண்டல் தரும் போது, குரு பகவானோட அனுக்ரஹத்தை உடம்பானது உறிஞ்சிக்கற ஆற்றல் ஏற்படறது. பாசிப்பயறுல சுண்டல் தரும் போதும் இதேமாதிரி நடக்கறது. கிரகங்களோட ஆற்றல் மத்தவாளுக்கு கிடைக்க நாம காரணமாய் இருக்கறதால, கிரகங்களோட கருணை நம் வரைல அதிகரிக்கறது.
நம்ம ஜாதகப்படி க்ஷீணமாய் ஒரு கிரகம் இருந்தா, அது மருந்து சாப்பிட்ட உடம்பாட்டம் பலமடையறது. உடம்பு ஆரோக்கியமானாலே, மனசும் ஆகித்தானே தீரணும்?
இப்படி ஒன்பது நாள், ஒன்பது சக்தியை நாம ஏற்படுத்தறோம். நமக்குள்ளேயும் ஏற்படுத்திக்கறோம்’ – என்று அவர் கூற, அந்த பெண்ணும் தன்னால் முடிந்த விதத்தில் நவராத்திரியை கொண்டாட, அனுக்ரஹம் என்னும் அருள் அவள் வரையில் துளித்துளியாக சேரத் தொடங்கியது. மூன்று மாதங்களில் அவள் வாழ்வில் பெரிய மாற்றம். அவள் கணவனுக்கு உடல் நலம் பாதித்தது. டாக்டர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டனர். கூடவே, இனி ஒரு வேளை குடித்தாலும் உயிர் போய்விடும் என்று செய்த எச்சரிக்கை, அவனை குடியின் பக்கமே போகவிடாதபடி தடுத்தது. குடி நிற்கவும் புத்தியும் தெளிவாகியது. நல்ல நேரம் வந்துவிட்டால், அது எல்லா சாகசங்களையும் செய்யத் தொடங்கிவிடும்.
குடிகார கணவன் திருந்தவுமே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. அந்தப் பெண்ணும் நவராத்திரியின் அற்புதத்தை புரிந்துகொண்டாள். பெரியவரையும் தன் கொலுவில் ஒரு கடவுளாக சேர்த்துக் கொண்டாள்.
கல்கத்தா சேட்ஜியின் பதினெட்டு புராண நூல் வெளியீடு மட்டுமே பரிகாரமல்ல; நவரத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது.
உடனேயே அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்து பிள்ளை வந்துவிட்டதா என்று பரிசோதிப்பதுபோல, இந்த விஷயத்தில் பரிசோதனைகள் கூடாது.
ஆத்மார்த்தமாகவும் உருக்கமாகவும் செய்ய வேண்டியது, பின் ஆசையோடும் ஏமாற்றுவதற்காக செய்கின்ற ஒன்றாகவும் மாறி பரிகாரத்துக்குப் பதில் பெரும் பாவத்தை தந்துவிடும்.
‘இந்த நவராத்திரியின்போது நாம் குழந்தைகளாகிவிட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்குத்தான் கோபமோ தாபமோ நிலையானது கிடையாது. உணர்ச்சிகள் வேரூன்றாமல் நாமும் குழந்தையாக மாறி, பக்தி புரியவேண்டும்.
உப நிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது – என்னும் பெரியவர், அம்பாளின் முப்பெரும் அம்சங்கள் குறித்து சொன்னதையும் கேட்போம்.
சாஷாத் பராசக்தியை காத்யாயனியாகவும், மகாலக்ஷ்மியை பார்கவியாகவும், நாம் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால் நமக்கும் குழந்தைத் தன்மை சாஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர் ஃப்ரூப் என்று சொல்வது போல், நாம் காம ஃப்ரூப், சோக ஃப்ரூப் என்று எல்லாமாக சாந்தமாக ஆய்வோம்.
குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி நமக்கு இந்த அனுகிரகத்தை செய்வாள்.
குழந்தையாக வந்த காத்யாயனியை தமிழ்நாட்டு கிராம ஜனங்கள் கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் யூகம். காத்தாயி என்கிற சொல் தான் காத்யாயனி என்று நினைக்கிறேன்.
பட்டாரிகை என்று பெரிய வித்யோபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் பிடாரி என்று பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் பட்டாரிகா மான்யம் என்பதுதான் பிடாரி மான்யம் என்று திருத்திக் குறிப்பிடப்பட்டது.
இவ்வாறே, கிராம ஜனங்களும் கூட சரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். பேச்சாயி, பேச்சாயி என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாய்க்தேவி சரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.
கிராமத்து ஜனங்களை அம்பாள் புறக்கணித்துவிடவில்லை. அவர்களுக்கு ஏற்ப, போய் அவர்களிடம் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.”- என்று அம்பாளுக்கும் துர்காலக்ஷ்மி சரஸ்வதிக்கும் பெரியவர் கூறிய விளக்கமாகட்டும், அவர் காட்டிய வழியாகட்டும் அவரை ஜகத்குரு என்று சொல்வது எவ்வளவு சரியான பதம் என்று எண்ணி நெகிழ வைக்கிறது.
"பஞ்சேஷ்டி"...
1008 மிக முக்கிய பரிகார ஸ்தலங்களில்... இதுவும் ஒன்று
@மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாமல் காலம் கடத்துகிறார் என்னசெய்வது?
@மகன் அல்லது மகள் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது தொடர்ந்து டாக்ட்ர் மருந்து என வாழ்க்கை உள்ளது என்ன செய்வது..?.
@மகன் அல்லது மகள் படிப்பில் அல்லது தனது அன்றாட பணிகளில் கவனக்குறைவாக இருக்கிறார்... விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் என்ன செய்வது?
@மனதில் எப்போதும் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை இருந்துகொண்டே இருக்கிறது என்ன செய்யலாம்?
@எதை பார்த்தாலும் ஒருவித படபடப்பு பயம் என்ன செய்வது?
"பஞ்சேஷ்டி"... சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரணோடை பாலம்-தச்சூர் கூட்ரோடு அருகில், தச்சூர் -to பஞ்சேஷ்டி 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி கோவிலை அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் மனம் தெளிவடைந்து நோய்கள் தீர்வதாக நம்பிக்கை உள்ளது.👍
👍நன்றி NDMகோகி.🙏
சென்னையில் இலவச டயாலிசிஸ் சென்டர்.
சென்னையில் இலவச டயாலிசிஸ் சென்டர். ( யாருக்காச்சும் உதவும் பகிரவும் ) ஏதோ நம்மாலான சிறு உதவி.
சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப் ( RCCT )
ரெட்ரிடிலுள்ள கிரேட்டர் முதன்மை
சுகாதார மையம்.
எல்லோரா அப்பார்ட்மென்ட்
பிளாட் 4D ,
4 வது தளம்
நெ.20 திருமூர்த்தி தெரு
தி.நகர் - சென்னை 600 017
சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப் ( RCCT )
ரெட்ரிடிலுள்ள கிரேட்டர் முதன்மை
சுகாதார மையம்.
எல்லோரா அப்பார்ட்மென்ட்
பிளாட் 4D ,
4 வது தளம்
நெ.20 திருமூர்த்தி தெரு
தி.நகர் - சென்னை 600 017
"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"
"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"
(வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது)..
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)
மதுரையில் மகாபெரியவா முகாமிட்டிருந்த காலகட்டம் அது. பள்ளிக்கூடம் ஒண்ணுலதான் பெரியவா தங்க ஏற்பாடாகியிருந்தது. அப்போ இளைய பெரியவாளான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கூட இருந்ததாக ஞாபகம்.அந்த சமயத்துல வழக்கம்போல ஏராளமான பக்தர்கள் கனிவர்க்கம், புஷ்பம்,கல்கண்டு இப்படி விதவிதமான காணிக்கைகளை எடுத்துண்டு வந்து பெரியவாகிட்டே சமர்ப்பிச்சு ஆசிர்வாதம் வாங்கிண்டிருந்தா.
அந்த சமயத்துல யாரோ ஒரு பக்தர் எடுத்துண்டு வந்த காணிக்கையில இருந்த வெத்தலைகள் எப்படியோ பறந்து கீழே விழுந்து கிடந்தது. அதுக்கப்புறம் சில பக்தர்கள் ஆசி வாங்கிக்க வந்தாலும் யாரும் அந்த வெத்தலைகளை எடுக்கலை.அதே சமயம் அது மங்களகரமான பொருள் என்பதால் அதை மிதிக்காம கொஞ்சம் நகர்ந்து வந்துண்டு இருந்தா.
இதையெல்லாம் கொஞ்ச நேரம் பார்த்துண்டு இருந்த மகாபெரியவா, தன் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தரைக் கூப்பிட்டார்
."அதோ அங்கே கொஞ்சம் வெத்தலை கிடக்கு பார். அதை எடுத்துண்டுபோய் அலம்பிக் கொண்டு வந்து பத்தரமா வை!" அப்படின்னு உத்தரவிட்டார்.
சன்யாச தர்மப்படி தாம்பூலம் தரிக்கறது கூடாது. அப்படி இருக்கறச்சே, மகாபெரியவா எதுக்காக வெத்தலையை எடுத்துவைக்கச் சொல்றார்னு பலருக்கும் குழப்பம்.
கொஞ்ச நேரம் ஆச்சு. ஆசார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்துல கர்ப்பிணி ஒருத்தியும் இருந்தா. வரிசையா வந்த கூட்டம் நகர்ந்து, நகர்ந்து அந்த கர்ப்பிணி மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்கான முறை வந்த சமயத்துல திடீர்னு அவளுக்கு தலைசுத்தல் வந்துடுத்து.
நிற்கவே தடுமாற ஆரம்பிச்ச அவளை, கூடவந்தவா மெதுவா தாங்கிப் பிடிச்சுண்டா. அந்த நிலையில மகாபெரியவாளையும் முழுமையா தரிசனம் செய்ய முடியாத நிலை அவாளுக்கு ஏற்பட்டுது.
என்ன செய்யறதுன்னு புரியாம அவா எல்லாரும் திகைச்சு நின்ன சமயத்துல மகாபெரியவா, தன்னோட அணுக்க் தொண்டரை மறுபடியும் கூப்பிட்டார்.
"அந்த அலம்பி வைச்ச வெத்தலைகளை எடுத்து அவாகிட்டே குடு. அதை அந்த கர்ப்பஸ்த்ரீக்கு தரச்சொல்லு!" உத்தரவிட்டார் மகாபெரியவா.
வெற்றிலைகளை வாங்கி மெதுவா மென்னு தின்ன ஆரம்பிச்ச அந்தக் கர்ப்பிணி பெண்ணுக்கு தலைசுத்தல் சட்டுன்னு நின்னுது. எப்படி இந்த அதிசயம் நடந்தது!. வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை. அதுக்கு மகாபெரியவாளோட அனு கிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது.
அதுக்கப்புறம் சந்தோஷமா மனம் நிறைஞ்ச பக்தியோட, மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா அந்த கர்ப்பிணி ஆசிர்வாதமா ஒரு மாதுளம்பழமும்,குங்குமப் பிரசாதமும் குடுத்தார் மகாபெரியவா
.சாதரண வெற்றிலையா இருந்தாலும்கூட அது சமயத்துல சஞ்சீவியா உபயோகப்படும் கறதையும் , எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாதுங்கற உணர்த்தற மாதிரி மகாபெரியவா நடத்தின இந்த அனுபவப் பாடத்தை புரிஞ்சுண்டதுக்கு அடையாளமா ஜெயஜெய சங்கர ஹர ஹர சங்கர'ன்னு கோஷமெழுப்பினா அங்கே இருந்த எல்லாரும்.
கூத்தனுர் சரஸ்வதி கோயில் விவரங்கள்
கூத்தனுர் சரஸ்வதி கோயில் விவரங்கள்
கல்விச் செல்வம் அருள கன்னியாக அமர்ந்த தேவி..! கூத்தனூர் சரஸ்வதி !இன்று சரஸ்வதி தேவிக்குப் பிரசித்திப் பெற்ற கோயிலாக விளங்குவது கூத்தனூர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம்.பற்றிய விவரங்களை படித்ததை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
கூத்தனுர் சரஸ்வதி கலைவாணி தாயே.திருவடிகளே போற்றி
கல்விச் செல்வம் அருள கன்னியாக அமர்ந்த தேவி..! கூத்தனூர் சரஸ்வதி
சரஸ்வதி தேவிக்குப் பிரசித்திப் பெற்ற கோயிலாக விளங்குவது கூத்தனூர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம். இந்த ஊரில் கலைகளுக்கு அதிபதியாய் விளங்குகின்ற சரஸ்வதி அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. புராண காலத்தில் அம்பாள்புரி என்றும், பூந்தோட்டம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது.
இங்கே சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக வீற்றிருந்து, தன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கி அருள்புரிகிறாள். சரஸ்வதி தேவி இங்கே கன்னி சரஸ்வதியாக கோயில் கொண்டதன் பின்னணியில் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
பிரம்மதேவரும், சரஸ்வதி தேவியும் சத்தியலோகத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி தேவிக்கு, 'எல்லோருக்கும் கல்வியும் ஞானமும் வழங்கும் தானே உயர்ந்தவள்' என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. சரஸ்வதியின் எண்ணம் தெரிந்த பிரம்மதேவர் படைப்புத் தொழில் செய்வதால் தானே பெரியவன் என்று வாதிட்டார். முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி - சோபனை ஆகியோருக்கு முறையே பகுகாந்தன், சிரத்தை என்ற குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் திருமண வயதை அடைந்தனர். பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனைத் தேடினர். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்ற விவரம் தெரிய வந்தது. ஆனால், ஒரு தாயின் குழந்தைகளாகப் பிறந்து, சகோதர முறையில் இருப்பதால், திருமணம் செய்துகொண்டு ஊராரின் கேலிக்கு ஆளாக விரும்பவில்லை. எனவே, இருவரும் சிவபெருமானைப் பணிந்து வணங்கி, தங்களின் இக்கட்டான நிலையைக் கூறினர். இந்த தர்மசங்கடத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று ஆலோசனையும் கேட்டனர். ஆனால், ''சகோதர முறையில் உள்ள நீங்கள் திருமணம் செய்துகொள்வது முறையில்லை. சரஸ்வதி மட்டும் இங்கே கன்னியாக இருந்து, வழிபடும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கட்டும் என்று கூறி மறைந்தார். அதன்படி சரஸ்வதி தேவி இங்கே கன்னி சரஸ்வதியாக கோயில் கொண்டுள்ளாள்.
தமிழகத்தில் சரஸ்வதிக்கான தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. கருவறையில், சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தியவளாக, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வல மேல்கரத்தில் அட்சமாலை ஏந்தி, வல கீழ்க்கரத்தில் சின்முத்திரை காட்டி, இடது மேல்கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி, இடது கீழ்க்கரத்தில் புத்தகமும் கொண்டு எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
புருஷோத்தம பாரதி என்பவருக்கு விஜயதசமியன்று அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜயதசமி நாளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து வித்தியாப்பியாசம் செய்த பிறகே பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட்ட தலம் இது. அவர் கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் அமைத்து, காவிரி நீரால் சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார். அவருடைய பூஜையில் மனம் மகிழ்ந்த சரஸ்வதி தேவி, ஒட்டக்கூத்தருக்குத் தன் வாய் தாம்பூலத்தை வழங்கியதாகவும், அதன் பலனாக ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறம் பெற்று, மூன்று சோழ மன்னர்களின் அரசவைப் புலவராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
சரஸ்வதி கோயிலில் வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சாரதா நவராத்திரி விழா 12 நாள்களும், பின்னர் பத்து நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. விழா நாள்களில் சரஸ்வதி தேவி சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் என்று பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவதை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். சரஸ்வதி பூஜையன்று மட்டும் நியமத்துடன் விரதமிருந்து, பக்தர்களே அம்பிகையின் திருவடிகளில் மலர் கொண்டு அர்ச்சிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
விஜயதசமி நாளில் நூற்றுக்கணக்கான கார், வேன் முதலான வாகனங்களுக்கு பூஜை செய்த பிறகு கோயிலை வலம் வருவது பிரமிக்க வைக்கும் காட்சியாகும்.
நவராத்திரி நாள்களைத் தவிர, ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. பௌர்ணமிதோறும் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சரஸ்வதி தேவியின் அவதார நட்சத்திரமான மூலம் நட்சத்திரம் வரும் நாளிலும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விசேஷ நாள்களிலும், சரஸ்வதிக்கு உரிய புதன்கிழமைகளிலும் அம்பிகைக்குத் தேனும் பாலும் அபிஷேகம் செய்தால் கல்வியில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம்.
நமக்கெல்லாம் அருள் புரியவேண்டும் என்பதற்காகவே கன்னியாகுமரியில் அன்னை உமையவள் கன்னியாக இருப்பதைப் போலவே, நமக்கு உயர்கல்வி, நல் ஞானம் ஆகியவற்றை அருள்புரிய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு கூத்தனூரில் கோயில் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியைத் தரிசித்து வழிபட்டு அருள் பெறுவோம்.
கூத்தனுர் சரஸ்வதி கலைவாணி தாயே.திருவடிகளே போற்றி
சில நேரங்களில் சில தீர்ப்புகள்!....
சில நேரங்களில் சில தீர்ப்புகள்!....
ஏங்க... நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே... கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,'' என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம்.
""என்னடி பேசுற... அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?'' ""நாம ஏங்க தெருவுக்கு போறோம்... நாம பெத்த புள்ளங்க; நம்மள காப்பாத்துவான். புள்ளை, படாத பாடு படறான்... நாயா பேயா அலையறான். புள்ளைக்கு உதவாத பணம் நமக்கெதுக்கு,'' என்று சீறினாள் சரயு
. ""வேணாம் சரயு... பணத்தை குடுத்து, மனஸ்தாபத்தை வாங்காதே...'' விவாதங்கள் முற்றி, சரயு கண்ணீராலும், கோபதாப பேச்சாலும், அவரைக் கரைத்து, ஆறு லட்சத்தை வள்ளிசாக தூக்கி, சிவசுவின் கையில் வைத்தாள்.
மகனும், மருமகளும் கண்ணீர் மல்க காலில் விழுந்தனர். "அம்மா... அம்மா...' என்று சிவசுவும். "அத்தை... அத்தை...' என்று விஜியும், தாங்கிப் பிடிக்க, உச்சி குளிர்ந்து போனாள் சரயு.
வீடு வாங்கி முடித்ததுமேயே, ""அம்மா... நீங்க வாசல்புற அறையிலேயே தங்கிக்கலாம். அது, இனிமே உங்க ரெண்டு பேருக்குத் தான்!'' என்று சிவசு சொன்னபோது, பெருமிதமாக ஏறிட்டாள் சரயு. ஆனால், அது பெயருக்குத் தான் அப்பா, அம்மா அறையாக இருந்ததே தவிர, அது விஜியின் உறவினர்கள் தங்கும் விருந்தினர் அறையாக இருந்ததுதான் அதிகம்.
இருவரும், ஹாலில் தரையில் படுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அடிக்கடி தள்ளப்பட்டனர். ஹாலிலும் நிம்மதியாய் அக்கடா என்று, காலை நீட்டிப் படுக்க முடியாமல், வருவோரும், போவோருமாய், தூக்கம் பறிபோக, உடம்பே அலண்டு போனது. வருடங்கள் போனதே தவிர, சிவசுவும், விஜியும், பணம் வாங்கிய விஷயத்தை, சுலபமாய் மறந்தே போயினர்.
மருந்து வாங்கவோ, அவசிய செலவுக்கோ கூட, இருவரிடமும் கையேந்தும் நிலையில், பாலசுப்ரமணியத்துக்கு, சங்கோஜம் பிடுங்கி தின்றது. சிவசுவுக்கு பணம் தந்த விஷயம் எப்படியோ கசிந்து, இளைய மகன் குமாரின் காதை அடைய, அவனும், அவன் மனைவியும், நேராகவே வந்து, ""அந்த பணத்துக்கு, நானும் உரிமைக்காரன் தானே... நானும் உங்களுக்கு தானே பிறந்தேன்?'' என்று குதித்தான். அவன் மனைவியோ, ""பணத்தோடு வந்தால், என் வாசல் கதவு திறக்கும்,'' என்று பச்சையாகவே சொல்லிவிட்டு, ஓரகத்தியைப் பார்த்து பொருமி தீர்த்துவிட்டுக் கிளம்பினாள்.
கணவருக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக, சரயு வாயைத் திறந்து பணம் பற்றி பேச்செடுக்க, ஆங்காரமாகி விட்டாள் விஜி. ""மகனுக்கு கொடுத்ததை திருப்பி கேக்கறீங்களே... நீங்க பெத்தவங்க தானா?'' என்றாள். ""பெத்தவங்கன்னாலும் வயித்துல பசியும், உடம்புக்கு நோவும் வராம இருக்காதா என்ன... இதோ குமார், "முகத்துலேயே முழிக்காதே... பணமில்லாம'ன்னு பேசிட்டான். குறைந்தது பாதி பணமாவது தந்தா தானே.... குமாருக்கும் குடுக்கணும் தானே?'' என்றாள் சரயு.
""அப்போ... இங்கே இத்தனை வருடம் போர்டிங்கு, லாட்ஜிங்குன்னு இருந்தது, அப்பப்போ டாக்டருக்குன்னு எளவெடுத்தது, இதெல்லாம் எந்த கணக்கு பணமாம்... பணம் பொல்லாத பணம். பிசாத்து ஆறு லட்சத்துக்கு, கெழங்களுக்கு வாயப் பாரு... போட்டதை தின்னுட்டு, மூலையில கிடக்கிறதா இருந்தா, இங்க இருங்க... இல்லே, வீட்டைவிட்டு வெளியே போயிடுங்க. ""ஏதாவது பணம், கிணம்ன்னு வாயைத் தொறந்தா, நான் பொல்லாதவளாயிடுவேன்... ஆமா, பணம் தந்தேன் தந்தேன்னு சொல்றீங்களே... நான் பணமே வாங்கலைங்கறேன்... நீங்க என்ன கோர்ட்டுக்கு போவீங்களா... தோபாருங்க... சல்லிக்காசு கூட தர முடியாது. உங்களால ஆனதை பாருங்க!'' என்று, ரசாபாசமாய் கத்திய விஜியின் முன், வாயடைத்துப் போனாள் சரயு.
பேச்சுகளின் வீச்சின் முன், அந்த தாயுள்ளம் மிரண்டு போனது. "தலைக்கு மேலேயும் வர ஆரம்பித்துவிட்ட வெள்ளச் சூழலில், எதைப் பிடித்து கொண்டு நீந்த, எப்படி நீந்த?' என்று பாலசுப்ரமணியம் திகைத்து நின்றார். இதற்கு பின், நிலைமை மிகவும் மோசமானது.
சிவசு வாய், கண், காது எல்லாவற்றையும் மூடிக் கொள்ள, விஜி தன் சுய ரூபத்தைக் காட்டினாள். விஜியே ஒரு இரும்புத் திரையாக மாறிவிட, இருவரும், மூச்சுவிடக் கூட திணறி மரண அவஸ்தை பட்டனர். எல்லாவற்றுக்கும் முடிவாக, சிவசு ஒருநாள், ""அப்பா, எனக்கு டில்லிக்கு டிரான்ஸ்பராயிடுச்சு... அதனாலே இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். "அட்வான்ஸ்' கூட வாங்கிட்டேன். நாளைக்கு, "பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்'ல வந்து, சாமான்களை, "பாக்' செய்திடுவாங்க. நான் நாளைக்கே கிளம்பறேன். டிக்கட், "புக்' பண்ணியாச்சு. குமார் உங்களை அழைச்சிட்டு போவான்... பேசிட்டேன்,'' என்றான்.
குமார் அழைச்சிட்டு போறதாவது... பாலசுப்ரமணியத்துக்கு, "சிவுக்' கென்றது. ""சிவசு... "நான் வர மாட்டேன். நீங்களும் பணமில்லாம இங்க வரவேணாம்ன்னு, குமார் போன்ல சொல்லிட்டானேப்பா,'' என்றார் உடைந்த குரலில். ""என்னப்பா பேசுறீங்க... அவனுக்கு மட்டும் உங்களை காப்பாத்தற கடமையில்லையா... சாவற மட்டும், நாந்தான் உங்களை சுமக்கணுமா?'' சிவசுவின் வார்த்தையில், அனல் அடித்தது. ""நீ, அவனுக்கு சேர வேண்டிய பணத்தைக்குடு, அவன் தங்கமா தாங்குவான்!'' என்று குறுக் கிட்டாள் சரயு.
""எதுக்கு பணம்... ஏது பணம்... நீங்க தந்து, நாங்க வாங்கினோமா... இல்லவே இல்லைங்கறேன்... உங்களால ஆனதை பாருங்க... கோர்ட்டுக்கு போனாலும் ஒண்ணும் பருப்பு வேகாது. ""அப்புறமும் இங்கதான் வந்து நிக்கணும். வாயப் பொளந்துட்டு, போனப்புறம் கொள்ளி போடவும், நெய்ப்பந்தம் பிடிக்கவும், எங்க தயவுதானே வேணும்!'' என்று, படப்படத்தவள், சிவசுவை இழுத்துக்கொண்டு உள்ளே போய், அறைக் கதவை அறைந்து சாத்தினாள் விஜி. ""தப்பு பண்ணிட்டோம்ங்க?'' என்று அழுத மனைவியை, வெறுமனே பார்த்தார் பாலசுப்ரமணியம்.
"வாழவேண்டிய மீதி வாழ்க்கையை, அதன் காலம் வரை வாழ்ந்து தானே ஆக வேண்டும்... அது காலம் வகுத்து வைத்த கட்டாயம் அல்லவா... வேலைக்கு செல்ல இடம் கொடாத உடம்புடனும், பணமில்லாத வெறுங்கையுடனும்...' யோசனையில் புருவங்கள் முடிச்சிட்டன.
நீதிபதி மாணிக்கவல்லி நிமிர்ந்து அமர்ந்தாள். எல்லாம் பேசி முடித்த பாலசுப்ரமணியம், மேல் துண்டால் கண்களை துடைத்துக் கொண்டார். ""அம்மா... இப்பவும் அந்த பணத்துலே, என் இரண்டு பிள்ளைகளுக்கும், கல்யாண மாகிப் போன என் பெண்ணுக்கும், ஒவ்வொரு லட்சம் தந்துடத்தான் விருப்பம். மீதியை, எங்க மிச்ச காலத்துக்கு வச்சிக்கிடறோம். அப்புறமா, நா.. நாங்க யாரோடையும் இருக்கவும் இஷ்டப்படலை. ரொம்பவும் பட்டாச்சு...
""நெய் பந்தமும், மகன் கைகொள்ளியும் வேண்டாம்மா... மின்சார தகனமே போதும். ஏற்கனவே நெஞ்சுலே சொருகின கொள்ளி, இன்னமும் எரிஞ்சு கிட்டு தானிருக்கு... இனியாவது கடைசி காலத்தை நிம்மதியா கழிக்கணும்ன்னு ஆசையாயிருக்கும்மா... என் மருமக விஜி சொன்ன வார்த்தையால தான், கோர்ட்டுக்கு போனாத்தான் என்னன்னு தோணுச்சு... ஏறிட்டேன்,'' என்றார்.
சிவசுவின் முகம் அஷ்டகோணலாக, விஜியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இருவருமே, பாலசுப்ரமணியம் கோர்ட்டுக்குப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை. கோர்ட்டு, குமாரையும் வரவழைத்திருந்தது.
அவனும் குடும்பத்துடன் வந்திருந்தான். அவன் முகத்தில், ஒரு குருரத் திருப்தி நிலவியது. அலட்சியமாக பார்த்துக் கொண்டு நின்றான். சுற்றிலும் பார்வையை ஓட விட, நீதிபதி மாணிக்கவல்லி, கண்ணாடியை சரிசெய்து கொண்டு, கணீரென்ற குரலில் ஆரம்பித்தாள்...
""இந்த நீதிமன்றம், இதுவரை எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. முதன் முறையாக ஒரு பெற்றோர், தங்களுடைய வாழ்வாதாரத்தை, பெற்ற பிள்ளையிடமே கையேந்தி பெறுவதற்காக, இந்த மன்றத்தை நாடியுள்ளதை வருத்தத்துடன் கவனிக்கிறது...
""தந்தையிடமிருந்த, அவருடைய உழைப்பூதியத்தை தன் தேவைக்காக வாங்கிக்கொண்டு, திருப்பித் தர மறுத்ததுடன், பெற்றோர் என்றும் எண்ணாமல், உதாசீனப்படுத்தி, மனவேதனைக்கு ஆளாக்கியிருக்கின்றனர்.
""சிவசுவும், அவர் மனைவியும், சகோதரன் வர மாட்டான் என்று தெரிந்தும், சுயநலமாக சிந்தித்து, அவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு, ஊருக்கு போக நினைத்த அந்த இருவரின் செயலை, மன்னிக்க முடியாத குற்றமாக இந்த கோர்ட் நினைக்கிறது...
""அதே போல் இளைய மகன் குமாரின் நடத்தையையும், இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கிறது... பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், விட்டேற்றியாக இருந்த இருவரையும் கூட, குற்றமிழைத்தவர்களாகவே இந்த மன்றம் கருதுகிறது. பெற்றவர்களின் மன உளைச்சலை, இரு பிள்ளைகளுமே அதிகப்படுத்தி இருக்கின்றனர்...
""எனவே, சிவசு, தன் தந்தையிடம் வாங்கிய, ஆறு லட்சத்திற்கும் இன்றைய தேதி வரையில், அதற்கான வட்டித் தொகையுடன் திருப்பித் தர வேண்டுமாய், இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 90 நாட்கள் அவகாசம் தருகிறது... ""இந்த 90 நாட்களும், பெற்றோரை தன் பொறுப்பில் வைத்து பராமரிக்கும்படி, குமாருக்கு இந்த மன்றம் ஆணையிடுகிறது. அதாவது, குமார் தனி வீடு பார்த்து, குடியமர்த்தி அவர்களுக்கான எல்லா செலவுகளையும், வாடகை, சாப்பாடு, மருந்து என்று அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய கைச் செலவுக்காக மாதம், நாலாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று, இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது.
""குடும்ப கவுரவம் என்றும், சடங்கு சம்பிரதாயம் என்றும் குழம்பாமல், வாழும் நாட்களை நிம்மதியாக வாழ, சட்டத்தின் துணையை நாடி, சரியான முடிவெடுத்த, பெரியவர் பாலசுப்ர மணியத்தை, இந்த மன்றம் பாராட்டுகிறது.
""இந்த வழக்கு, இனிவரும் காலங்களிலும், ஒரு பாடமாக இருக்கும் என்று, இந்த நீதிமன்றம் நினைக்கிறது!'' என்று தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி மாணிக்க வல்லி. சிவசுவும், விஜியும் தவிப்புடன் நிற்க, குமாரும் அவன் மனைவியும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சரயுவும், பாலசுப்ரமணியமும், மகிழ்ச்சி பொங்க, கண்ணீர் மல்க கை கூப்பி நின்றனர்....
Subscribe to:
Posts (Atom)