கிழவிக்கு_பயந்துகொண்டு போகும் பெருமாள்○
திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.
"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.
அவளுடைய அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.
உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவரைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.
இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.
அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக.
"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!
மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.
பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!
பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!
இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்.
இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.
Thursday, March 5, 2020
"குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்"
"குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்"
காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, ""சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.
அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை.
அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச்சத்தம் கேட்டது.
தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, ""வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம் பண்ணிட்டு வாயேன்,'' என்றார்.
அந்த அம்மையாரும் வெளியே போய்விட்டார்.
அவர் வெளியே செல்லவும், ஒரு விவசாயக் குடும்பப் பெண்மணி சுவாமியைத் தரிசிக்க உள்ளே வந்தார்.
பரம ஏழையான அந்தப் பெண்ணின் இடுப்பில் அவளது குழந்தை. ஆறுமாதம் தான் இருக்கும். அதற்கு ஏகமாய் ஜலதோஷம். மூச்சு விட திணறிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் பெரியவரிடம்,"சுவாமி! கொழந்தைக்கு ஜல்ப்பு...மருந்து வாங்க வழியில்லே! சாமி தூண்ணுறு(திருநீறு) கொடுக்கணும்,'' என்று கண்களில் நீர் மல்க கேட்டார்.
பெரியவர் அவசர அவசரமாக, முன்பு வந்த பக்தை கொடுத்த குங்குமப்பூ தொன்னையை எடுத்து அவரிடம் கொடுத்தார். "இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. குழந்தைக்கு இரண்டு, மூணு தடவை பற்றுப்போடு,'' என்றார். அத்துடன், "ரோட்டிலே போகும் போது தூசு விழுந்துடும்! மறைச்சு எடுத்துண்டு போ,'' என்று எச்சரிக்கை வேறு! அவள் சென்றதும், தன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்தார். அதை சிறிது தண்ணீர் விட்டு பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்று போட்டுக் கொண்டாற்போல இட்டுக் கொண்டார்.
இதற்குள் காமாட்சியைத் தரிசிக்க சென்ற குங்குமப்பூ அம்மையார் திரும்பினார். பெரியவர் நெற்றில் பற்று போட்டிருந்தது கண்டு, தான் கொடுத்த மருந்தைத் தான் இட்டிருக்கிறார் என்று ஏராளத்துக்கு சந்தோஷப்பட்டார்.
மறுநாள் வழக்கம் போல் அந்த அம்மையார் வந்தார். "உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது' என்றார். அம்மையாருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
பெரியவர் இங்கே வார்த்தையைக் கவனமாகக் கையாண்டார். "உன் குங்குமப்பூவால் "என்' கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்தஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்திருக்கும் இல்லையா! அதைத் தான் அப்படி குறிப்பிட்டார்.
ஆக, அவர் வைத்த குங்குமம், இரண்டு நெஞ்சங்களில் மகிழ்ச்சியை சங்கமிக்கச் செய்து விட்டது.
இதுதான் மகாபெரியவரின் கருணா கடாட்சம்!
"உடல் வேறு,ஆன்மா வேறு"
"உடல் வேறு,ஆன்மா வேறு"
(எறும்புகள், அமுதத்தைப் பருகிய களிப்பில் மயங்கிக் கிடந்தன.)
(போன ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் (எறும்புகள்) செய்திருந்தனவோ!)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்
பெரியவாளின் வலது காலில் மேற்புறத்தில் எப்படியோ ஒரு ரத்தக் கசிவு. ஒரு சொட்டு ரத்தம் மாதுளமுத்துப் போல் இருந்தது .
சாவகாசமாக உட்கார்ந்து பெரியவாள் ஸ்ரீமடத்துச் சீடரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஓர் எறும்பு வந்து, அந்தக் காயத்தின்மீது ஊர்ந்தது. அந்த எறும்பைப் பின் தொடர்ந்து அதன் உற்றார்- உறவினர்கள் கூடிவிட்டார்கள்.
'எறும்புகளைத் தட்டி விடுங்கள்' என்று பெரியவாளிடம் யார் சொல்ல முடியும்?
வெளியே, பெரியவாளின் அன்புக்குப் பாத்திரமான செல்வாக்குடைய பக்தர் நின்று கொண்டிருந்தார்/ அவரை ரகசியமாய் உள்ளே அழைத்து வந்தார்கள்.
"பெரியவா கால்லே எறும்பு மொய்க்கிறதே?" என்று பணிவுடன் கூறினார், அவர்.
ஒரு விநாடி நேரம் அருள்நிறைந்த பார்வை.
"விபீஷணன், ராமச்சந்திரமூர்த்தியை சரணாகதி பண்ணினான் என்று படிக்கிறோம். வாயாலே 'சரணாகதி'ன்னு சொன்னான். ராமன் பாதங்களை இறுகக் கட்டிக்கொள்ளல்லே அப்படியிருந்தும், ராமன் ரொம்ப இறக்கப்பட்டு விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்தான்."
இந்த ராமாயணம் இப்போது இங்கே எதற்கு?. ..
"இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு. அதுகள் என்ன சொல்றதுன்னு கேட்காமல், உதறி விட்டால், அது நியாயமா?"
இந்த சொற்சுவையைக் கேட்டு ரசிப்பதா? இல்லை பெரியவாளுக்காக இரக்கப்படுவதா?- என்று புரியவில்லை, சீடர்களுக்கு.
'உடல் வேறு; ஆன்மா வேறு' என்பது உபநிஷத் வாக்கியம் மட்டுமல்ல. பெரியவாளைப் பொறுத்த மட்டில், உபயோகமான வாக்கியம்!.
எறும்புகள், அமுதத்தைப் பருகிய களிப்பில் மயங்கிக்கிடந்தன.
போன ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் (எறும்புகள்) செய்திருந்தனவோ!
வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்
வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்
(அதிதிகள் வந்தால், விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்)
(எல்லோர் உள்ளத்தையும் ...ஏ.ஸி. யாக்குவது,பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
கடுமையான கோடை காலம்.
சில பக்தர்கள் வியர்க்க, விறுவிறுக்க பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். நல்ல தாகம். தரிசனம் செய்ய வேண்டும் என்ற பேராவலில் தாகத்தைப் பொருட்படுத்தாமல் வந்திருந்தார்கள்.
பெரியவா ஒரு சிஷ்யரிடம் அவர்களுக்குக் காசி வில்வப்பழ ரசம் கொடுக்கச் சொன்னார்கள். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்! பெரியவாளின் கருணையை எண்ணி மனம் குளிர்ந்தார்கள்.
உடனே பெரியவா, தனக்கு விசிறிக் கொண்டிருந்த சிஷ்யரைக் கூப்பிட்டு, அதே பனை விசிறியால் அந்த பக்தர்களுக்கும் விசிறச் சொன்னார்கள்.
திடுக்கிட்டுப் போன அவர்கள், "அபசாரம்,அபசாரம்.... பெரியவாளுக்கு உபயோகப்படுத்துகிற அதே விசிறியால், எங்களுக்கு விசிறக் கூடாது. நாங்கள் சாதாரண ஜனங்கள்"என்று ஒரு குரலாகப் பிரார்த்திக் கொண்டார்கள்.
பெரியவா சொன்னார்கள்; "எல்லோருடைய சரீரத்திலும் பகவான் தான் ஆத்மாவாக இருந்து கொண்டிருக்கிறார் விசிறிக்கு எல்லா சரீரமும் ஒன்றுதான்!"
உபநிடத வாக்கியம் போலிருந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு,பக்தர்கள் பரவசமடைந்தார்கள்.
பெரியவா தொடர்ந்து சொன்னார்கள்
"இப்போ எல்லா இடத்திலேயும், எலெக்ட்ரிக் ஃபேன், ஃபிரிஜ் ...இப்படி வந்துவிட்டது. அதனால அதிதிகளை உபசரிக்கிற முறை கூட மறந்துடுத்து!... விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்... இதெல்லாம் மறந்தே போச்சு! குழந்தைகளுக்குப் புரிய மாட்டேங்கறது. அதனால் தான் ஜூஸ் கொடுத்து விசிறச் சொன்னேன். இதைப் பார்க்கிற சில பேர்களாவது, நம்ம பண்பாட்டைச் செயல்படுத்துவா."
" வில்வ விருக்ஷம் ரொம்ப உத்கிருஷ்டமானது. வில்வ தளத்திலே ஸ்வர்ணம் இருக்கிறதாக வைத்ய சாஸ்திரம் சொல்றது.சிவ நிர்மால்ய வில்வதளம் தினமும் ஸ்வகரித்தால் தங்கபஸ்மம் சாப்பிட்ட மாதிரி உடம்பு பிரகாசிக்குமாம்!...வில்வப்பழம் தலையிலே தேய்த்துக் குளிக்கணும். அவ்வளவு குளிர்ச்சி. கண்ணுக்கு ரொம்ப நல்லது.
" இப்போ வில்வ மரமே அபூர்வமாகப் போயிடுத்து. சிவன் கோயில்களில் கூட கிழமாகிப் போய்விட்ட சில மரங்கள் தான் இருக்கு.வில்வக் கன்று வைத்து வளர்த்தால் ரொம்பப் புண்ணியம் - ஸ்ரீ வ்ருக்ஷம். அதனாலே த்ரவ்யாபிவிருத்தின்னு பிரசாரம் பண்ணினால் கூடத் தேவலை...."
பெரியவா பேசி முடிக்கிற சமயத்தில், ஒரு வேளாளப் பெண்மணி வந்தாள்.அவளும் களைத்திருந்தாள். வில்வப்பழ ரசமும், மோரும் கொடுக்கும்படி சிஷ்யரிடம் கூறினார்கள் பெரியவா.
வெளியே தகிக்கிற வெயில் தான்.
ஆனால் பெரியாவாளின் உள்ளுக்குள்ளே பனிமழையல்லவா, பொழிந்து கொண்டிருக்கிறது.
எல்லோர் உள்ளத்தையும்... ஏ.ஸி. யாக்குவது, பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி!.. .
அவன் செத்துப் போகல்லே.
"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"
(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில்.)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அவருடைய மனைவி சமீபத்தில் தான் காலமாகி விட்டிருந்தாள்.
இவர் மட்டும் இங்கே எப்படித் தனியே இருப்பது?
பையன்கள் தங்களிடம் வந்து தங்கும்படி அன்போடு அழைக்கிறார்கள்.
"என்ன செய்வது என்றே புரியல்லே. பெரியவா உத்தரவுப்படி நடக்கிறேன்."
பெரியவாளின் பார்வை எங்கெல்லாமோ சுழன்று விட்டு கிருஷ்ணமூர்த்தியின் மேல் வந்து நின்றது .
"வெளிதேசம் எங்கேயும் போகவேண்டாம். வீட்டிலேயே ஸ்வயம் பாகம் பண்ணிச் சாப்பிடு."
"சரி..."
"காவேரி ஸ்நானம்,சிவபூஜை,ஜபம்,கோயில் தரிசனம் செய்து கொண்டு - உன் அப்பா,தாத்தா ,கொள்ளுத் தாத்தா மாதிரி - கிராமத்திலேயே ஒரு ரிஷியைப் போல இரு..."
கிருஷ்ணமூர்த்திக்கு அளவற்ற திருப்தி!
"அப்பனே, குருநாதா! கொஞ்சநஞ்சமிருந்த சஞ்சலத்தையும் போக்கிவிட்ட மகாபிரபுவே!. ..இந்த உபதேசத்தைக் கேட்பதற்காகத் தான் வந்தேன்.
பிரசாதம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள் பெரியவாள்
அதன் பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து யாராவது தரிசனத்துக்கு வந்தால், "கிருஷ்ணமூர்த்தி எப்படி இருக்கான்?" என்று நினைவாகக் கேட்பார்கள்.
வெகு நாள் கழித்து, அவ்வூர்க்காரர் வந்து; "அவர் செத்துப் போய்விட்டார்" என்றார்,இரக்கம் தோன்ற.
பெரியவா பட்டென்று, "அவன் செத்துப் போகல்லே... சிவலோகம் போயிருக்கான்" என்றார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கெல்லாம் உடம்பு சிலிர்த்தது.
பெரியவாளுடைய கருணை இன்னும் ஒருபடி மேலே போயிற்று. சிஷ்யர்களில் ஒருவரைக் கூப்பிட்டு, "நீ போய் கிருஷ்ணமூர்த்தியை மனசிலே நினைச்சுண்டு குளத்திலே ஸ்நானம் பண்ணிட்டு வா" என்றார்கள்.
"மாவடு ஊறுகாய்" (
"மாவடு ஊறுகாய்" (சீசன் ஆரம்பம்)
எஸ்.மீனாட்சி அம்மாளின் பக்குவம்
(பழைய கால புத்தகத்தில் இருந்து)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
தேவையான சாமான்கள்,
1) (மலை வடுவானால்) 48 கப்புகள் (12 லிட்டர்கள்) ,மாவடு
2)உப்பு- 8 கப்புகள் (2 லிட்டர்)
3)மிளகாய் வற்றல் அல்லது 2 கப்புகள் காரப்பொடி.
4)கடுகு 3 டீஸ்பூன்கள்.
5)வரளிமஞ்சள்,விளக்கெண்ணெய் 3 டீஸ்பூன்கள்.
(தோப்பு வடுவானால்) 64 கப்புகள் (16 லிட்டர்) மாவடு
உப்பு 8 கப்புகள் (2 லிட்டர்)
காரப்பொடி 2 கப்புகள்.
கடுகு 4 டீஸ்பூன்கள்
வரளி மஞ்சள் 4
விளக்கெண்ணெய் 4 டீஸ்பூன்கள்
(கடுகையும்,மஞ்சளையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவடுவை ஜலத்தில் கொட்டி அலசி,அலம்பி, மூங்கில் கூடையில் வடியவைத்து, தாம்பாளத்தில் போட்டுக்கொண்டு விளக்கெண்ணெய்,கடுகு-மஞ்சள் அரைத்த விழுது இவைகளையும் போட்டுக் கலந்து கொள்ளவும்.
ஊறுகாய் போடும் ஜாடியை அல்லது பாத்திரத்தை நன்றாக துடைத்துக் கொண்டு, முதலில் ஒரு கை உப்பை அடியில்போடவும். அதன் மேல் நான்கு கை மாவடுவைப் போட்டு, ஒரு கை உப்பையும், கொஞ்சம் காரப்பொடியையும் போடவும்.
அதே மாதிரி மாவடுவும், உப்பும், காரப்பொடியுமாகக் கடைசிவரை நிறவிப் போட்டு மூடி வைத்து, மறுநாள் போக மறுநாள் கலந்து எடுக்கவும்.உப்பு காரப்பொடி மிகுந்து போனால்மேலாகப் போட்டுவிடவும்.
(மிளகாயையும் இடித்துக்கொண்டு,கடுகு மஞ்சள் இவற்றை அரைத்து விளக்கெண்ணையையும் விட்டுப் பிசறிக் கலந்து, வடுவையும்,இடித்து வைத்துள்ள உப்பு-மிளகாயையும் போடலாம்)
8 கப்புகள் உப்புக்கு, 8 கப்புகள் ஜலத்தை விட்டு அடுப்பில் வைத்து உப்பு நன்றாகக் கரைந்து பாதி ஜலம் வற்றும் வரை நன்றாகக்காய்ச்சி, இறக்கி ஆறவைத்துக் கொண்டு .
இரண்டுகரண்டிகள்(1/3கப்)உப்புஜலமும்,காரப்
பொடியும், வடுவுமாக முன் சொன்னபடி போட்டால், எத்தனை நாட்களானாலும் வடு அழுகாமல் நிறமாக இருக்கும்.
குறிப்பு; மாவடுவின் காம்புகளை முழுவதும் எடுக்காமல், அரைவிரல் நீளக் காம்புடன் போட வேண்டும்.
பொதுவாக எல்லா ஊறுகாய்களுக்கும், மிளகாய் வற்றலை மிஷினில் அரைக்காமல், உரலில் அல்லது கிரைண்டரில்இடித்துப் போட்டால், ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்
மடத்து வாசலில் பயில்வான் தோற்றத்துடன் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்
(பயந்து ஓடிய ஒரிஜனல் பயில்வான்)
(ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? அது தான் புதிர்!)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
(முன்பே இந்த பதிவை போட்டு இருக்கேன் அது தினமலர் - இது பாலு)
காஞ்சீபுரத்துக்கு ஒரு பயில்வான் வந்தான்.அவனுடைய உடல்பலம் அளவிட முடியாதது என்று சொன்னார்கள். ஒரு பிடி எள்ளைக் கொடுத்தால் எண்ணெயாகப் பிழிந்து தருவான்.சிலம்பாட்டம் குத்துச் சண்டைகளில் பல பேர்களுடன் மோதி வெற்றி பெற்றிருக்கிறான். அதனால் ஒரு கூட்டம் அவனை மொய்த்துக் கொண்டிருந்தது
பெரியவாளிடம் தன் வீரத்தைக் காட்டி சன்மானம் பெற வேண்டும் என்ற நோக்கம் அவனுக்கு. பெரியவா முன்னிலையில் தன் சாகசங்களைக் காட்டவும் தயாராக இருந்தான் அதாவது, 'இவனுடன் குஸ்தி போடு' என்று பெரியவா,ஒரு நபரைக் காட்டினால்,அவருடன் மல்யுத்தம் செய்வதற்கும் சித்தமாயிருந்தான்
ஸ்ரீ மடத்துக்கு அவ்வப்போது வந்து கைங்கர்யம் செய்யும் இளவயது வைதிகர் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள், பருமனான உடற்கட்டு உடையவர்
பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளைக் கூப்பிட்டார்கள்.
"கிருஷ்ணா, நீ போய் மடத்து வாசல்லே நில்லு. ஒரு மணி நேரம் இந்தண்டை - அந்தண்டை போகக் கூடாது,என்ன?" - பெரியவா
"உத்தரவு..." - கிருஷ்ண சாஸ்திரிகள்.
கிருஷ்ண சாஸ்திரிகள் உட்பட, யாருக்குமே இந்த விசித்திரமான உத்திரவின் உட்கருத்து விளங்கவில்லை. என்றாலும், பெரியவா உத்திரவுப்படி கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீ மடம் வாசலில் நிலையாக நின்று கொண்டார். ஒரு மணி நேரம் கழித்துத் தான் உள்ளே வந்தார்.பின்னர் பெரியவா பூஜையை முடித்துக்கொண்டு வந்ததும் உத்திரவு பெற்றுக் கொண்டு மணக்காலுக்குப் புறப்பட்டார்.
காஞ்சீபுரத்துக்கு வந்த பயில்வானுக்கு நெருக்கமான உள்ளூர்க்காரர் ஒருவர், அன்றிரவு தரிசனத்துக்கு வந்தார். அவர், அணுக்கத் தொண்டர்களிடம், " மடத்தில் வைதிகர்கள், கைங்கர்யர்கள் இருப்பார்கள்.பயில்வான்களைக் கூட , நியமித்திருக்கிறார்களா?" என்று தொண்டர்களிடமே கேட்டார்.
"கேள்வியே விநோதமாக இருக்கோ? மடத்தில் பயில்வான்களை வைத்துக்கொண்டா ரக்ஷிக்க வேண்டும்?"
......இந்த ஊருக்கு வந்த பிரபலமான ஒரு பயில்வான், காலை சுமார் பத்து மணிக்கு மடத்துக்கு வந்தார்.வாசலில் பலசாலியான ஒரு பயில்வான் நிற்பதைப் பார்த்துவிட்டு,
பயந்துகொண்டு உள்ளே வந்து தரிசனம் செய்யாமலே திரும்பிவிட்டார. அவரை சென்னைக்கு அனுப்பி விட்டுத் தான், நான் இங்கே வந்திருக்கிறேன்....."
சிஷ்யர்கள் 'ஓ'வென்று அட்டகாசமாகச் சிரித்தார்கள்."மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகளை வாசலில் நிற்கச் சொன்னார்கள்,பெரியவா. அதன் காரணம் இப்போ தான் புரியறது.. .அவரைப் பார்த்துத் தான் பயில்வான் பயந்திருக்கிறான்!..."
ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?
அது தான் புதிர்!.
Subscribe to:
Posts (Atom)