பூரணம் (சிறுகதைகள் சீ2 – 18)
#ganeshamarkalam
என்னமோ தெரியலை தூங்கி எழுந்ததுலேந்து மனசு கனத்தது. எழுந்து இதைப் பண்ணுவோமா, அதைப் பண்ணலாமான்னு ஓடாம அப்படியே உக்காந்துடுத்து. காபியும் ருசிக்கலை. ஜுரமோன்னு கழுத்தில் புறங்கையை வச்சுப்பாத்தா அப்படி ஒண்ணும் இல்லைன்னு பட்டது. இன்னைக்கு ஆபீசுக்கு லீவு போட்டுடலாமான்னு யோசனை கிளம்பித்து.
சரிதான் அப்படி ஒரு நல்ல முடிவை எடுத்துடலாம்னு போனைப்போட்டு சொல்லிட்டேன். கவிதா என் செக்ரெடரி அவ ஆத்துலேந்து அவசரமா கிளம்பிண்டிருப்பா. பின்னாடி அவள் பொண்ணை அதட்டி தயார் செஞ்சுண்டே என் போனை அட்டெண்ட் செஞ்சாளோ?.
ஸ்கூல் பஸ் வந்துடும், அவள் இன்னும் குளிக்கவே கிளம்பலை. என்னால் யூகிக்கமுடியரது அந்த சீனை. குழந்தை அங்கேயும் இங்கேயும் ஓடறது. பின்னாடியே தொறத்தி கவுனை கழட்டி பாத்ரூமுக்குள் அழைச்சிண்டு பொக பிரயத்தனப்பட்ரா. இல்லைன்னா டை கட்டிவிடரச்சே அசக்கிண்டே ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடரா, அவல் உப்புமா புதுசா துவைச்சு அயர்ன் செஞ்ச வொயிட் யூனிஃபார்மில் சிந்தறது. நான் இன்னைக்கு லீவுன்னு சொன்னதை அவள் காதில் வாங்கிண்டு அப்பாய்ட்மென்ட் எல்லாத்தையும் கென்சல் செஞ்சுடரேன்னு சொல்ரா.
அவள் சொன்ண விதம் ஒருவிதமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா மாதிரி எனக்கு பட்டது. நான் வரலைன்னதும் அத்தனை சந்தோஷமா? நிச்சயமா ஆபீசுக்கு போர வழீலே மத்தவாளையும் கூப்பிட்டு இன்னைக்கு ஒரு குட் ந்யூஸ்னு இதை சொல்லிடுவா. எப்படியோ அவாளாவது இன்னைக்கு சந்தோஷமா இருக்கட்டுமே. நான் எழுந்தண்டதுலேந்து இன்னைக்கு உதாஸா இருக்கேன்னுட்டு எல்லாரையும் ஹிம்சிக்கணும்னு கிடையாதே? இப்போ என் நிலைமைக்கு தீர்வு வேணும். அதான் முக்கியம். ஏன் இன்னைக்கு இப்படி ஒரு சோகம்?
பேப்பரை பிரிச்சு வச்சிண்டு உக்காரரேன், எழுத்துகளில் மனசு லயிக்கலை. சரீன்னு சென்னை டயிம்ஸ் செக்ஷன் போனால் தமன்னா டயட்டில் இருக்களாம், ஷூட்டிங்கு போனப்போ பக்கத்தில் ஒரு ப்ளேட் சிப்ஸ் வச்சாளாம் அவள் தொடவேயில்லையாம் அதை இன்ஸ்டாகிராமில் போட்டு 4000பேர் ஃபாலோ செய்யராளாம். விடிஞ்சுடும்.
பேப்பரை கடாசிட்டு இன்னைக்கு சாயங்காலம் பீச்சுக்கு போனா என்னன்னு யோசிக்கரேன். ஆத்துக்காரியை வரியான்னு கேட்டதுக்கு “இன்னைக்கு கோவிலில் பஜனை, திடீர்னு என்ன பீச்சு குளம் குட்டைன்னு கிளம்பரேள். நீங்க ஆபீசுக்குப் போவேள்னு ஃப்ரெண்ட்ஸ் மாமியெல்லாரையும் வரச்சொன்னேன். இங்கேயே ஒட்டிண்டு கிடந்தா?”ன்னுட்டா. சரீன்னுட்டு ஒரு சினிமா போலாம்னு கிளம்பரேன். நான் ஆத்தைவிட்டுக் கிளம்பினதில் அவளுக்கும் அத்தனை குஷி.
ஏன் இப்படி என் நிலமை? யோசிச்சிண்டே பேன்ட் சட்டை மாட்டிண்டு கிளம்பி காரை எடுத்துண்டு நேரே 1130கு மாயாஜாலில் “மிஷன் இம்பாஸிபிள்” போயாச்சு. நான் போரத்துக்குள்ள படம் ஆரம்பிச்சு 5 நிமிஷம் ஆகிடுத்து. இந்தமாதிரி படங்களில் முன்னோட்டம் காமிச்சுட்டு டைடில்ஸ் பொடுவா, அதைப் பாக்கலைன்னா கதை புரியாது. வேகமாப்போய் சீட்டில் உக்காந்துண்டு திரையில் லயிச்சாச்சு. நன்னாதான் கதை போச்சு. திடீர்னு இன்டெர்வெல் விட்டுட்டான். லைட்ஸ் போடவே அவளைப்பாத்தேன்.
என் செக்ரடரிதான். கவிதா.
ரெண்டு சீட் முன்னாடி. கூடவே அக்கவுன்டன்ட் தாமோ, ப்ரொக்ராமர் விமலா, காதம்பரி அப்புரம் ரிசெப்ஷனிஸ்ட் க்ளோரியா. விடிஞ்சுது போங்கோ! நான் வரப்போரதில்லைன்னுட்டு அதுகள் போனிலேயே பிளான் பண்ணி இங்கே. என்னைப்பார்த்தா என்ன தோணும்? நானும் ஆபீஸுக்கு போகாம இங்கேன்னா வந்து உக்காந்திருக்கேன்? என்ன பண்றதுன்னே தெரியலை. நம்பளை காட்டிக்கவேண்டாம்னு அப்படியே சீட்டுக்குள்ளே சரிஞ்சுட்டேன். லைட்டை அணைக்கட்டும் அப்புரம் நிமுந்துக்கலாம்னு.
ஆனா அவா பேசரது நன்னாவே கேட்டது.
தாமோ கேக்கரான், “பெருசு (என்னைத்தான், என் பேர் சந்தானம்னு அவனுக்கு தெரியாதா என்ன?) ஏன் வரலையாம்?” கவிதா “நான் ஏன்னு கேக்கலை, வரலைன்னார் நான் சரி உங்க அப்பாயிட்மென்டை கென்சல் செஞ்சுடரேன்னுட்டு வச்சுட்டேன். பொண்ணை ஸ்கூலுக்கு தயார் செஞ்சிண்டிருந்தேன். அதுவே நாளைக்கு வந்து காரணத்தை சொல்லிடும்.” அத்தோட அவா பேசரது முடிஞ்சிருந்தா நன்னா இருந்த்திருக்கும். க்ளோரியா சொல்ரா “இன்னைக்கு அவருக்கு வெட்டிங்க் டே இல்லையே? இருந்தால் ஏன் வரலைன்னு கெஸ் செய்யலாம்”கிரா. நல்லவேளை அவர்னு மறியாதையா. சந்தேகம் வந்ததுட்டதனால் எல்லொருக்கும் இன்னைக்கு எனக்கு வெட்டிங்க் டேயான்னு குழப்பம். ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கறது நன்னா தெரியறது.
அப்போதான் விமலா “வெட்டிங்க் டேன்னா மட்டும் என்ன செஞ்சுடப்போரார், நம்ம பெரிசோட மாமி ஒரே கட்டுப்பெட்டியாம், கோவில் குளம்னு சுத்தரவங்களாம், முக்கியமான நாள்னாலும் கிட்டக்கேயே விடமாட்டாளாம், லீவு எடுத்து என்னத்தை சாதிச்சுடப்போரார்?” சரியாப்போச்சு. என் அன்னியோன்ய லைஃஃப் பத்தி இவாளுக்கு எப்படி தெரிஞ்சது? அப்படி கரெக்டா சொல்ராளேன்னு நினெச்சுண்டேன். எங்காத்து மாமி கோவில் குளத்துக்கு போரதை அவாளும் பாத்திருக்கலாம். அவள் எங்கிட்டக்கேயே வரதில்லைங்கிறது எப்படி? என் மூஞ்சிலே தெரியரதா? இல்லை சிசிடிவி வச்ஸு பாக்கராளா?
இதில் பேசாம இருந்தது காதம்பரி மட்டும்தான். அவளுக்கு என் மேல் ஏன் இத்தனை மறியாதையும் பிரியமும்? இருக்க ஒரு காரணமும் இல்லையே?. அவள் ஏன் ஒண்ணும் சொல்லாமல் இருக்கான்னு யோசிச்சேன். நான் நினைச்சாப்புல, அவளும் வாயை திறக்கரா. “டீ, நிறுத்துங்கோடி, இங்கே வந்தும் அந்த லூசு-பிராம்ணனைப் பத்தித்தான் பெசணுமா? அவந்தான் இன்னைக்கு வரலையோன்னோ! டாம் க்ரூய்ஸ் கொஞ்சம் வயசானாலும் எப்படி இருக்கான் அதை கவனியுங்கோடி”ன்னு எல்லாரையும் அடக்கிட்டா.
இன்டெர்வலுக்கு அப்புரம் எனக்கு படத்தில் சுவாரஸ்யம் இருந்திருக்கும்னு நினைக்கரேள்? எப்படியோ படம் முடிஞ்சு அவா கிளம்பிப்போணப்புரம் மெல்ல வெளீலே வந்து யார் கண்ணிலும் படாமல் பக்கத்துலேயே இருக்கிர முத்துக்காடு தாண்டி MGM பீச் ரிசார்ட்டுக்கு பொய் மணலில் உக்காந்துக்கரேன்.
கார்த்தாலே கனத்த மனசு அவ்வளவா கனக்கலை. படம் பார்த்ததா, இல்லை இங்கே அடிச்சிண்டிருக்கர அலைகளா, இல்லை நம்மோட வேலைபாக்கிரவா நம்பளைபத்தி என்ன நினைக்கரான்னு தெரிஞ்சுண்டதாலான்னு புரியலை.
சில விஷயங்கள் புரியப்புரிய வாழ்க்கை வண்ணமயமாகிறதுன்னு படிச்சேன். சத்தியத்துக்கே உள்ள தன்மை அது.
நான் சந்தானம் என் தகுத்திக்கு சின்னதா ஆரம்பிச்சு இப்போவரைக்கும் நன்னா ஓடிண்டிருக்கிர சாஃப்ட்வேர் கம்பேனியின் சேர்மன். மொத்தம் 130பேரை வேலைக்கு வச்சுண்டு உலகம்பூரா எனக்கு கஸ்டமர்கள். 100 கோடிக்கு பிஸினெஸ். அதில் வருஷத்துக்கு 8 – 12% ப்ராஃபிட் கிடைக்கறது. என்னைப் பொருத்தவரைக்கும் நான் ஒரு சக்சஸ. என்னால் பலருக்கு உத்யோகம் செஞ்சுதர முடிந்ததுன்னு சந்தோஷப்பட்டுப்பேன். இன்னும் வியாபாரத்தை விருத்திசெய்யணுமா, இல்லை இப்படியே போயிண்டிருக்கலாமான்னு பல சமயம் யோசிப்பேன். நானும் என் ஆத்துக்காரியும் எங்களால் இயன்ற தான தர்மம் செஞ்சாகிறது.
ரெண்டு குழந்தைகள், ஒரு பையன், ஒரு பொண், ரெண்டுபேரும் என்னோட பிசினெஸ்ஸை எனக்கப்புரம் கவனிச்சுக்கணும்னு நல்ல படிப்ப்பா படிக்கட்டும்னு யூஎஸில் இருக்கா. முடிச்சுட்டு வந்தால் ஆவக்கா தொக்கு மாதிரி வேலை காத்திண்டிருக்கு. ஆனால் பையனுக்கு அத்தனை இதில் ஈடுபாடில்லை. பொண் செய்வாள். பாக்கலாம்.
அனால் இன்னைக்கு என்னைப்பத்தின விமர்சனம் வேர லெவல். அதை கவனிக்கணும். அதில்தான் விஷயம் இருக்குன்னு படரது.
என்னைப்பத்தி என்னவெல்லாம் சொல்லக் கேட்டேன்? ஞாபகப்படுத்திக்கரேன்.
ஒவ்வொண்ணா. பெருசு. அது. அப்புரம் லாஸ்டா லூசு-பிராம்ணன். நான் பிராம்ணன்தான், அது வசவு இல்லை ஆனால் அந்த லூசுன்னு ஒண்ணு சேர்த்து கேக்கரச்சே வசவு மாதிரி பட்டது. என்னை “பெருசு”ன்னு சொன்னவனுக்கு என் வயசுதான். “அது”ன்னு கூப்பிட்டவள் ஆபீஸில் “சார் சார்”னு அப்படி குழைவள். இவ்வளவு பெரீய கம்பெனியை ஆரம்பிச்சு வளர்த்து நிர்வகிக்கரேனே அதுனால் லூசா? இல்லை அவளுக்கு பிராம்ணாவெல்லாமே லூசாப்படுமா?
ஒண்ணு புரிஞ்சது. நாம் என்னதான் சாதிச்சாலும், நாம ஆசைப்பட்ட ஒரு இடத்தை அடைஞ்சு ஏறி ஜம்பமா உக்காந்துண்டாலும், நம்மால் பலர் பயன் பெற்றாலும், நாம கை நிறைய காசு வச்சிண்டு பிரத்தியாருக்கும் அப்பப்போ கொடுத்துண்டிருந்தாலும் அது நமக்கே நம்பளைப்பத்தின ஒரு உயர்வான மதிப்பை கொண்டுவந்து தந்திருந்தாலும் அது பாதிக்கதைதான். மிச்சப்பாதி நம்பளைப்பத்தி பிரத்தியார் என்ன நினைக்கராங்கிறது.
என் கதையில் மிச்சம் இப்படி, பெருசு, லூசுன்னு.
இது எப்படி இருக்குன்னா கொழுக்கட்டையை கடிச்சா உள்ளே ஒண்ணுமே இல்லாத மாதிரி, ஹாலோவா, பூரணம் வைக்க மறந்துட்டா மாதிரி அல்லது பூரணம் நிரம்பியிருந்தும் அது டேஸ்டே இல்லாம, கசந்துண்டு. பெர்செப்ஷன், மத்தவாளோட முன்னோக்கம் நம்பளைப்பத்தி – அதுக்கு நாம சரிசமமா முக்கியத்தும் தரணும். சரி இவா எங்கிட்டே வேலைபாக்கிர 130 பேரில் 5 பேர்தான். இன்சிக்னிஃபிகன்ட்னு ஒதுக்க முடியாது. ஒரு பானை சோத்துக்கு சில பருக்கைகள் பதமாச்சே! இப்போ என்ன செய்யறதுன்னு?
அலைகள் ஓயாம அடிச்சிண்டிருக்கு. காத்து ஹிதமா வீசினாலும், மனசு அது எதிலேயும் லயிக்காம நடந்ததையே சுத்திசுத்தி. இன்னைக்கு லீவு எடுக்கலைன்னா இதெல்லாம் நடந்திருக்காதோ? ஆனாலும் நினைப்பு அப்படியேத்தானே இருந்திருக்கும்? லீவு எடுத்துண்டு இங்கே சினிமா பாக்கலைன்னா இப்படித்தான்னு எனக்கு தெரியவே தெரிஞ்சிருக்காதே? அவா யாரையும் எனக்கு குத்தம் சொல்ல பிடிக்கலை. நினெச்சா எல்லாரையும் நாளைக்கே சீடைக்கிழிச்சு அனுப்பிடலாம். பாக்கி 125 பேரை என்ன செய்யறது?
டயம் ஆகிடுத்துன்னு கிளம்பி ஆத்துக்கு வந்துட்டேன். மனசில் சில தீர்மானங்கள். தெளிவான சிந்தனைகளோட.
அடுத்தநாள் சீக்கிரமே OMRஇல் என் அலுவலகத்துக்கு போயாச்சு. நேத்து வச்சிருந்த வேலைகள் இன்னைக்கோடதோட சேர்ந்து வரிசை கட்டி நின்னது. இன்னைக்கு ஒரு வேலை முக்கியம்னு தோணித்து.
எல்லாரும் வந்ததும் ஒரு ஸ்டாஃப் மீட்டிங்க் போடச்சொன்னேன். சரியா 1 மணிக்கு. அத்தோட எல்லோருக்கும் லன்ச் என்று அறிவிப்பும் செஞ்சாச்சு. ஆசையாய் எல்லாரும் வந்து அஸேம்பிள் ஆனா. வணக்கமும் வாழ்த்துக்களும் சொல்லிட்டு “ரொம்ப நாளாய் நிறைய ஸ்ட்ரெஸ், வேலைப்பளு இருந்ததில் ஒரு சின்ன ப்ரேக் வேண்டியிருந்தது, அடிக்கடி இப்படி போலாம்னு இருக்கேன்"னு தெரிவிச்சுண்டேன். பலபேர் முகத்தில் சந்தோஷம். "நீங்களும் இப்படி செய்யணும், அதுக்காக வருஷத்தில் 4 நாள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்குகிரேன்"னும் சொன்னேன். எல்லாரும் கை தட்டினா. "லீவு எடுத்துக்கர அன்னைக்கு ரெட்டிப்பு சம்பளம், எதுக்குன்னா நீங்க அதை நிச்சயமா எடுத்துக்க வைக்கணும்னு". கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆச்சு.
"நேத்து நான் விடுப்பு எடுத்துண்டது என் வெட்டிங்க்டேக்காக இல்லை, ஸ்ட்ரெஸ் பஸ்டருக்குத்தான்"னு சொல்லிட்டு நேத்து என்ன செஞ்சேன்னு சொல்ல ஆரம்பிச்சேன். மாயஜாலில் “மிஷன் இம்பாஸிபிள்” 1130 ஷோ பாத்ததும் அப்புரம் பீச் மணலில் அளஞ்சிண்டிருந்ததையும் சொல்லி "எல்லோரும் இப்படி விருப்பப்பட்ட விஷயங்களை செய்யணும். இப்படி செஞ்சா நீங்க உங்களை பத்தியே நிறைய கத்துக்கலாம், எல்லோருக்கும் பிடிச்சாமாதிரி உங்கள் பழக்க வழக்கங்கள், நடத்தைகளை மாத்தி அமைச்சுக்கலாம்"னு சொல்லி முடிச்சேன். ஹிப் ஹிப் ஹுர்ரேன்னு சத்தம்.
லன்ச் விருந்தோட என்மேல் பதிப்பும் மரியாதையும் மிகுந்தது. ஒரு வித்யாசமான பாஸ் கிடெச்சுட்டது மாதிரி புளகாங்கிதம் எல்லார் கண்களிலும் பாக்க முடிஞ்சது.
அதில் 10 கண்கள் மட்டும் என்னைப்பாக்கவே முடியாம அந்தண்டை இந்தண்டை சுத்தித்து.
No comments:
Post a Comment