இதை முதலில் படிக்கவும்
49. எரக்ரொஸ்டிஸ் ஸைனோசுராய்தேஸ் (1 of 2) (சிசீ6) #ganeshamarkalam
சென்னையில் தியாகராய நகர் ரெம்ப ஃபேமஸ். அங்கத்தான் ரெங்கநாதன் தெரு இருக்கு. அந்தத் தெரு அத்தனை ஃபேமஸ் ஆரத்துக்கு மின்னாடி சிவா விஷ்ணு டெம்பிள் ஃபேமஸா இருந்தது. இப்பத்தைக்கு தீப்பிடிச்சு திரும்ப எழும்பிட்ட சென்னை சில்க்ஸ் இன்னும் ஃபேமஸ்.
எப்பப் போனாலும் கூட்டம் மண்டும். மின்னே தில்லீலே வாசம் செஞ்சப்போ 1 வாரம் லீவுன்னு வந்தா அப்பாவோட ரொடீன் என்னை திநகர் கூட்டிண்டு போவர். அப்பரம் கல்யாணம் செஞ்சு குடுத்தனம் வச்சதும் ஆத்துக்காரிய அழைச்சிண்டு நானே போக ஆரம்பிச்சேன். உஸ்மான் தெருவில் நடக்காம தில்லிக்கு திரும்பி போனா ஊருக்கு வந்தாப்போலவே ஃபீல் ஆகாது. வந்துட்டு மின்னெல்லாம் பனகல் பார்க் வுட்லேண்ட்ஸில் எதாவது சாப்பிடுவம். இதெல்லாம் ஏன் செய்தம்னு இப்ப யோசிச்சு பாத்தா விளக்கிச் சொல்ல முடியலை. இப்ப அதிகம் போரதில்லை. கூட்டம்னாலே குமட்டிண்டு வரது. எப்படிப் பாருங்கோ? உலகம் மாறிடுத்தா நாம மாறிட்டமா? சிலது ரெம்ப பிடிச்சது சுத்தமா பிடிக்காமப் போனது எப்படீன்னும் தெரியலை.
ஒருவேளை வேலை விடுப்பாகி சென்னைக்கே குடிவந்துட்டதும் இதெல்லாம் பொலிவிழந்து போயிடுத்தோன்னு படும். எப்ப வேணும்னாலும் போய்க்கலாம் எங்கே ஓடிப் போயிடும்னு. நன்னா ஞாபகம் இருக்கு. மின்னே பல்லாவரத்தில் இங்களீஷ் எலெக்ட்ரிகல்ஸில் வேலை பாத்தப்போ வெளிநாட்டுலேந்து வந்த ஒருத்தரை மஹேப்ஸ் அழைச்சிண்டு போனம். “இது இங்கேயே இருக்கட்டும், இன்னும் தமிழ்நாட்டில் என்னெல்லாம் இருக்குன்னு காட்டரேன்”னு உஸ்மான் ரோட்டுக்கு வந்தம். அத்தனை பெரீய நகைக் கடை, ஸ்டீல் பாத்திரக் கடையப் பாத்துட்டு வந்தவா மோவாக்கட்டை இடுப்பளவுக்கு விழுந்துடுத்து. “இதெல்லாம் என்ன?” “சமைக்க கொள்ள பாத்திரங்கள்”. “இவ்வளவு சமைப்பீங்களா?” “ஆமாம். ஹோட்டல்லேயும் வாங்கிச் சாப்பிடுவம்”.
போரப்போ அவன் பொண்ணுக்கு பட்டுப் பாவாடை வாங்கி பரிசளித்தோம். போனதும் மாட்டிவிட்டு போடோ அனுப்பிச்சான். குழந்தை முகத்தில், செம்பட்டை தலையோட அத்தனை சந்தோஷம். நீலக் கண்ணில் அத்தனை ஓளி வெள்ளம். நாம பிக்பென்னை பாத்துட்டதும் பரவசமாவோமே அதுபோல்.
வர மாசம் அப்பாவுக்கு திவசம். சிரத்தையா செய்துடரது. 15 வருஷமாச்சு. அண்ணா செய்ய மாட்டான். அவன் வேற டைப். சில விஷயங்களில் இன்னும் அப்பாமேல் கோவம். “உனக்கு வேணும்னா செஞ்சுக்கோ”. “நான் செய்யரேன், நீயும் எங்காத்துக்கு வந்துடு”. வரலை. எங்காத்து மாமி டைரியில் குறிச்சு வச்சிண்டு வாத்தியார கூப்பிட்டுப் பேசி “எப்ப வரேள்? மாமாவை ரெடி பண்ணி வைக்கரேன்”. அவர் ஒரு டயம் சொல்லுவர். 1 மணி லேட்டா வருவர். நுழையரச்சேயே ஏன் லேட்டாயிடுத்துன்னு சொல்லுவர். பொண்ணை காலேஜ் பஸ்ஸில் ஏத்திவிடப் போனேன். இல்லை அவள் பஸ்ஸை மிஸ் செஞ்சுட்டா, பப்ளீக் ட்ரேன்ஸ்போர்ட் கிடச்சு ஏறிக்கர வரைக்கும் நின்னுட்டு ஓடி வரேன் மாமா. இல்லை அவளுக்கு படிப்பு சொல்லித் தந்திண்டிருந்தேன், மத்தியானம் பரிக்ஷை, நேரம் ஆனதே தெரியலைம்பர். எல்லா சாக்கும் காலேஜுக்கு போகும் பொண்ணைப் பத்தியே இருக்கும். ஒரு நாளைக்காவது லேட்டா எழுந்துட்டேன்னு உண்மைய சொல்ல மாட்டர். ஆனா வந்ததும் இன்னும் ரெண்டாத்துக்கு போணம்பர்.
ஒருநா தர்பைக் கட்டையே மறந்துட்டு வந்துட்டர். நான் அம்மாவாசை தர்ப்பணம் இன்ன பிற காரியங்களுக்காக ஆத்திலேயே தர்பை வச்சிருப்பேன். அதை எடுத்துத் தந்ததும் சமாளிச்சர். ஆத்தில் பூஜை சாமான்கள் குங்குமம், வாங்கரப்போ பூணல், தர்பை வாங்கி ஸ்டாக் வச்சுண்டுடரது. உடனே சென்னையில் தர்பை எங்கே கிடைக்கும்னு கேக்கலாம். பிராம்ணாளுக்கு தெரியும். நிறைய இடத்தில் கிடைக்கும். நான் வாங்குவது சிவா விஷ்ணு கோவில் வாசலில் எப்பப் போனாலும் ஒரு பிராம்ணர் எல்லா விஷயங்களையும் வச்சிண்டு விப்பர். அங்கே போனா சொல்ர விலை தந்து வாங்கிண்டு வந்துடுவேன். இப்பத்தான் திநகர் விஸிட் கம்மியாகிடுத்தே? இங்கேயே நாட்டு மருந்து கடைகளிலும் வச்சிருக்கா.
இப்ப தர்பை ஆத்தில் தீந்து போச்சு. திநகருக்கு போய் வாங்கிண்டு வரலாம்னு தோணித்து. சிவா விஷ்ணு கோவிலுக்கும் போலாம். வரச்சே கொஞ்சம் காய்கறி விதைகளும். ஏன் தோட்டம் போடுவியான்னா? ஆமாம். மாடீலே இடம் இருக்கு. கத்திரிக்காய், வெண்டைக்காய் சுலபமா வளர்ந்து காய்ச்சிடும்.
குரோம்பேட்டைலேந்து கிளம்பி GST ரோட்டுக்கு வந்தாச்சு. ரோட்டைக் கிராஸ் செஞ்சு எலெக்ரட்ரிக் ட்ரெயின். நடைப் பாலம் கட்டிட்டான். ட்ரெயினில் செட்பெட் வரைக்குமே 10ரூபா போகவர. சடசடன்னு அடிச்சுத் தள்ளிண்டு போயிடுவன். நமெக்கன்ன அவசரம்னு ரெண்டு வண்டிய போவிட்டூட்டு மூணாவதில் ஏறிக்கரேன். ரிட்டர்ன் டிக்கெட் பையில் இருக்கான்னு அப்பப்ப செக் செஞ்சிண்டு. உக்கார இடம் கிடெச்சது. எதுத்தாப்போல ஒரு புரோகிதர். வெத்துடம்புதான். ஆனா அங்கவஸ்திரத்தால் உடம்பை நன்னா மூடிண்டு. சைடில் ஜன்னல் பக்கம் பை. தர்பைப்புல் நீட்டிண்டு. பாருங்கோ, வாங்கப் போரச்சே தர்பையே கண்ணில் பட்டா? நல்ல சகுணம்தான். பையையே உத்துப் பாக்கரதை அவரும் கவனிக்கரார்.
“மாமா, நீங்க பிராம்ணாளா?” பேச்செடுக்க, “ஆமாம்.” நானும் சரி சித்தே பெசலாம்னு. அக்கம் பக்கம் யாருமில்லை. சித்தே தள்ளி தரையில் தவழ்ந்துண்டு ஒரு பிச்சைக்காரன் வரான். காலேஜ் போகும் இளசுகள் ஃபுட்போர்டில் நின்னுண்டு, ஒருகையால் மேலே தகட்டை பிடிச்சிண்டு இன்னொண்ணில் செல்போனை நோண்டிண்டு. காதில் வயர். அப்படி செய்யரது ரிஸ்க் இல்லையோ? “பாருங்கோ இளம் வயசு, பயமறியாது. அதுக்காக உலகத்தையே மறந்து அந்த போனில் அப்படி என்னதான் இருக்கோ?” அதுக்கு “சித்தே கால் பிசகித்துன்னா உயிர் போயிடும்”. நானும் கூட சொல்லவே “அதெல்லாம் ஆகாது. நல்லதையே நினைப்போம்.” அவர்.
நான் சொன்னதில் அப்படி ஒண்ணும் தப்பில்லைன்னு பட்டது. அவர் லீட் எடுத்துத் தர நானும் அதே ரூட்டில் கமென்ட். ஆனா நான் சொன்னது அபிஷ்டு மாதிரி ஆய்ப்போச்சேன்னு அவர் கண்டிச்சதுலிருந்து தோணித்து. பரவாயில்லை வேதம் படிச்சவர். நல்லதைத்தான் சொல்ரர்.
“எங்கே வெளீலே?” சொன்னேன். “ஆத்து வாத்தியார் தர்பைக் கட்டை மறந்துட்டு வந்துடரர்”. ஓருதடவைதான் அப்படிச் செஞ்சர். இதே வழக்கம்போல் நான் சொன்னது கெத்தா இருந்தது. “அதெப்படி புரோகிதம் செய்யரவா தர்பைய மறந்துட்டு வருவா? ஆச்சர்யமான்னா இருக்கு!” “மறப்பது இயல்புதானே, நான் ஒண்ணும் பெரீசா எடுத்துக்கலை”. அவருக்கு ஒத்துக்க முடியலை. “இதோ பாருங்கோ.” அவர் பையை திறந்து உள்பக்கமா காமிக்கரர். அதில் சின்னதா பை தெய்ச்சிருக்கு அதில் ஒரு வெள்ளைத்தாள நாலா மடிச்சு வச்சிருக்கர். எடுத்து பிரிச்சு என்னண்டை நீட்டினர். “இதில் பையில் எப்பவும் என்னெல்லாம் இருக்கணும்னு எழுதியிருக்கு”. அட! குட் ப்ரேக்டீஸ் ஃபார் ப்ரோஹிதாஸ்! எல்லாரும் காபி அடிக்கலாம். அதில் சில ஐடமெல்லாம் புரியலை. ஒண்ணைக் காமிச்சு கேக்கரேன்.
“இது என்ன?” “அக்னி வளர்க்க தோதுப்படும்”. சொன்னவர் சட்டுன்னு பேப்பரை மடிச்சு உள்ளே வச்சுட்டர். சாமான்களோட பையையும் மடீலே வச்சி இறுக்கப் பிடிச்சிண்டெ வெளீலே பாக்கரர். இவனுக்கு எதுக்கு நாம பையக் காமிச்சம், இது என்ன அது என்னன்னு கேக்கரான், விளக்கம் சொல்லிண்டுனு பட்டதோ? நிஜமாவே அந்த ஐடம் என்னன்னு தெரியலை. கேட்டது தப்பா? விசித்திரமான மனுஷர்.
ட்ரெயின் இப்பத்தான் பழவந்தாங்கலை தாண்டித்து. வாத்தியாராச்சே நங்கநல்லூரில் இறங்குவரோ. குரோம்பேட்டைக்கு மின்னாடியே ஏறிட்டர். ஆனா இறங்கலை. ஜன்னல்லேந்து கண்ணை அகற்றி “என்ன பண்ணிண்டிருக்கேள்?” அட திரும்பவும் ஸ்நேகமா ஆகிட்டரே! “இப்ப ரிடயர் ஆகி கன்சல்டிங்க் பண்ணிண்டிருக்கேன்”. “என்னத்துலே கன்சல்டிங்க்? கணக்கு வழக்கு பாத்துப்பேளா? ஆடிட்டரா?” அதென்னமோ அந்தகாலத்து மனுஷாளுக்கு, கன்சல்டிங்க்னாலே ஆடிட்டர்னு வச்சுண்டுடரா. “இல்லை மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்”. “அப்படீன்னா? சிறுகுறுந்தொழில்கள், பெரீய நிறுவனங்களுக்கு ஏதாவது பிர்ச்சனைன்னா அதைத் தீத்துவைக்க ஆலோசனை கொடுத்து உதவுவேன்”. “ஓ அப்படியா, நிறைய காசு கிடைக்குமோ?” இப்படியா கேப்பா. ஆமாம்னு சொன்னா எவ்வளவுன்னு கேக்கலாம், இல்லைன்னா அப்ப ஏன் அதை செஞ்சுண்டுன்னும் சொல்லலாம்.
“மாசத்துக்கு 4நா இதுக்கு ஒதுக்கரேன். பெரீசா ஒண்ணும் எதிர்பாத்து செய்யலை. நிறைய பேர் இப்படி உதவி கேட்டுண்டு போக யோசிக்கரா, ஆனா தேவை நிறைய. நாம கத்துண்டதை எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து உதவலாமேன்னு ஒரு தர்ம சிந்தனையோடத்தான்”. இப்படி விட்டா என்னையே இவர் கேள்வி கேப்பர்னுட்டு “நீங்க எங்கே ஜாகை? தினம் ட்ரெயினில் பயணமா?” “நான் சிட்லப்பாக்கம். இப்ப மாம்பலத்துக்கு போணம். ஒருத்தர்கிட்டே பணம் திருப்பி வாங்கணும். அயோத்தியா மண்டபத்துக்கு பக்கத்தில். அப்படியே நாங்க ஒரு செட் மண்டபத்தில் வாரம் ஒருக்கா மீட் செஞ்சுப்பம். வந்த வேலைகளை பகிர்ந்துக்க. உக்காந்து பேசிண்டிருந்துட்டு மத்தியானமா ஆத்துக்கு போயிடுவேன். இன்னைக்கு ஒண்ணும் வேலை இல்லை. நாளைக்கு தாம்பரத்திலொரு ஜவுளிக் கடை திறப்பு விழா. அதுக்கு கூட வரத்துக்கும் ஒரு ஆளைப் பிடிக்கணும்”.
இத்தனை விவரம் பகிர்ந்துட்டர். “நான் குரோம்பேட்டை. உங்காத்து கிட்டேத்தான். குமரன் குன்றத்துக்கிட்டே. அது சரி. நீங்க வேலை இல்லைன்னா இந்தப் பைய எடுத்துண்டு ஏன் போணம்? எங்கே போனாலும் புரோகிதத்துக்கு போராப் போலவே கிளம்பிடுவேளா?” முறைச்சுப் பாக்கரர். இந்தமாதிரி ஆள் இருக்கும் இடத்துக்கு பக்கத்துலேயே நாமும் குடியிருக்கம்னு பட்டிருக்கும். முறைப்பில் கோவம் இல்லை.
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ? கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி இது கூடவே வரும். போர இடத்தில் ஏதாவதுன்னு கேட்டா வச்சுக்கணுமா வேண்டாமா? அயோத்யா மண்டபத்தில் போன வாரம் அப்படித்தான், பாக்க வந்தவர் ஒருத்தர் வரலைன்னு இருந்து பாத்துட்டு போலாம்னு இருக்கேன், ஒரு மாமா வந்து பூணல் இருந்தா கொடுங்கோன்னுட்டர். அதுக்காக எக்ஸ்ட்ரா வச்சுண்டுடரது. காசு வாங்கிண்டு கொடுப்பேன். இத்தனைனு கிடையாது. தரதை தாங்கோன்னுடரது. கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை. அதுக்குத்தான் பை”.
சொன்னவர் தன்னையும் அறியாம பையை இறுக்க பிடிச்சுக்கரார். இவ்ளோதான் இன்னைக்கு இனிமேல் கேள்விக் கேக்கபிடாது என்பதுபோல்.
“தர்பை வாங்கப் போரேன்னு கிளம்பிட்டேளே, தர்பை பத்தி உங்களுக்கு தெரியுமா?” இதென்ன கூத்தா இருக்கே! தர்பை எதுக்குன்னு பிராம்ணன் கிட்டேவா கேப்பா? “ஆமாம், வைதீகக் காரியங்கள் தர்பை இல்லாம நடத்த முடியாது. பவித்ரம் செய்ய காலுக்கடீலே இடுக்கிக்க, இடுப்பில் வச்சுக்க வேணும். சரிதானே!” சரிதான். ஆனா இதெல்லாம் எதுக்கு செய்யரோம்னு தெரியுமா?” பக்குன்னுது. தெரியலை. சொன்னா என்னை ட்ரெயினில் விட்டூட்டு அவர் குதிச்சு இறங்கிடு வரோன்னு பட்டது. அப்படி ஒரு பார்வை. நிச்சயமா நமக்கு விஷய ஞானம் இருக்கான்னு சோதிக்கரர். நீ வேணா பெரீய மேனேஜ்மென்ட் கன்ஸல்டென்ட்டா இருக்கலாம், ஆனா என் சப்ஜெக்டில் நான் புலி, இப்ப பார் உன்னை என்ன பாடு படுத்தப் போரேன்னு லுக்.
“வாத்தியார் சொன்னர்னு இடுப்பில் தர்பைய சொறுகிண்டுட்டா ஆச்சா? ஏன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? அது கிடக்கட்டும். எரக்ரொஸ்டிஸ் ஸைனோசுராய்தேஸ் அப்படீன்னா என்ன தெரியுமா?” இப்ப எனக்கு நிஜமாவே நாம ரயில்லேந்து குதிச்சுடணும்னு பட்டது. வசம்மா மாட்டிண்டுட்டம். கிண்டி தாண்டியாச்சு. இன்னும் ரெண்டு ஸ்டேஷன். இவரை எப்படி சமாளிக்க? “தெரியலையே! நீங்களே சொல்லுங்கோ. தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு.”
“’எரக்ரொஸ்டிஸ் ஸைனோசுராய்தேஸ்’ தர்பையோட பொடேனிகல் பேர். உங்களோட வந்து சிவா விஷ்ணு கோவிலில் தர்பையை எப்படி வாங்கணும்னு காட்டரேன். தர்பையப் பத்தி இன்னும் பெசலாம். வாங்கித் தந்துட்டு நான் போய்க்கரேன்”
(நாளை நிறைவடையும்)
No comments:
Post a Comment