Monday, April 1, 2024

பிரண்டைச் செடி

 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்ற இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுப்பயணக்குழு பிரண்டைச் செடியை பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார்கள்.

படம் எடுத்தவுடன் அவர்கள் கையில் இருந்த நூலில் உள்ளதை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டார்கள். இதனை சுமார் 1 மணிநேரம் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன்.

பிரண்டைச்செடியை இவ்வளவு அக்கறையாக படம் எடுத்தும் குறிப்பு எழுதியும் வருகிறார்களே, நாமோ அதனை வேலி அடைப்பதற்குத்தானே பயன்படுத்துகிறோம் என்ற எண்ணத்துடன் என்னுடைய பயணத்தை துவக்கினேன்.

இருப்பினும் பிரண்டைச்செடி பற்றி நினைவலைகள் மட்டும் என்னுடைய எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது. .

அவர் கூறிய விடயங்கள் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அவ்வளவு மருத்துவகுணம் குண்ட பிரண்டைச் செடியை வேலிக்கு மட்டும் பயன்படுத்திறோம் என்று எண்ணி அக்கம்பக்கத்தில் உள்ள வயதானவர்களிடமும் இதனைப் பற்றி கேட்டேன்.

அப்புறம்தான் பிரண்டை இவ்வளவு மருத்துவ குணம் கொண்டது எனவும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் பன்மடங்கு விலை கொடுத்து வாங்கி உண்கிறார்கள் என்பதனை நண்பர் வாயிலாகவும் கேள்விப்பட்டேன்.

இனி பிரண்டையைப் பற்றி காண்போம்.

சங்க இலக்கியத்தில் பேசப்படாத ஒரு தாவரம் என்றால் அது பிரண்டை தான்.

பிரண்டைக்கொடி மூணு இஞ்ச் நீளம், ஒரு கணு, அதில் இருமருங்கும் இலைகள், இலைகள் புறப்படும் இடத்திலிருந்து கொடிவீசும் சல்லி வேர்கள் என நீண்டு நீண்டு போகும். சின்னப் பூவாய் வெள்ளையாயப் பூக்கும்.

சிறு கறிவேப்பிலைக் காய் தரத்தில் காய்த்துக் கறுப்பாக பழுக்கும். கொடியின் மூட்டில் கரும்பச்சை நிறமாகவும் தும்புப் பகுதியில் வெளிர் பச்சை நிறமாகவும் இருக்கும்.

பிரண்டையில் பலவகை உண்டு. பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என நான்கு இனங்கள் உள்ளதாக பதார்த்த குண சிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்று போட்ட பசுமாடு அல்லது எருமை கன்றுக் குட்டி ஈணி, எலுங்கொடி விழாவிட்டால் தொங்கிக்கிடக்கும் எலுங்கொடியில் பாரமாகப் பிரண்டைக்கொடி சேர்த்து வைத்துக் கட்டுவார்கள்.

பிள்ளையில்லாதவர்களைப் பார்த்து பிள்ளை இல்லேண்ணா பெரண்டைக்கொடியை அடி வயத்திலே கெட்டிக்கிட்டுப்படு என பழமொழி சொல்வதுண்டு.

பண்டைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பிஞ்சுப்பிரண்டைகளை நீக்கி, கணுக்களை நறுக்கி எறிந்துவிட்டு கொவரப்போட்டு வைத்திருந்த புழுங்கலரிசி, பிரண்டை, உப்புப்பரல், ஓமம், மிளகாய் வத்தல் விதைகள் எல்லாம் சேர்ந்து ஆட்டு உரலில் போட்டு ஆட்டி, அமர்ந்த தீயில் கூழாகக் காய்ச்சி, அடி பிடிக்காமல் கிண்டி இறக்கி ஆறி இறுகிப்போகுமுன் துணியில் எடுத்து உலர்த்தி விடுவார்கள்.

இப்படியே மூன்று அல்லது நான்கு நாள் காயவைத்து பிரண்டை வத்தல் போடுவார்கள். வச்சிரவல்லி என்னும் பிரண்டை மூலிகை மிக மிக அற்புதமான ஒன்று. பிரண்டையானது கொடியினத்தைச்சேர்ந்தது.

இதன் பூக்கள் சிறு இதழ்களுடன் கொத்துக் கொத்தாகப் பூக்கும். காய்கள் சிறிய வட்டவடிவில் குண்டுகுண்டாக இருக்கும். பழம் சிவந்து இருக்கும். பிரண்டை, வேலி ஓரங்களிலும் மலை அடிவாரம், புதர் மண்டிய இடங்களிலும் படர்ந்து வளரும். இலைகள் வட்ட வடிவில் இருக்கும்.

பிரண்டையில் நான்கு பட்டையுடைய சதுரப் பிரண்டையே, பெரும்பாலும் எங்கும் வளர்ந்து காணப்படும். இது தவிர முப்பிரண்டை, ஓலைபிரண்டை, கணிப்பிரண்டை, உருளைப் பிரண்டை புளிப்பிரண்டை. போன்ற பல பிரண்டை இனங்கள் உள்ளன. பிரண்டையின் அடிப்படை மருத்துவ குணங்கள் 70 சதவீதம் எல்லா பிரண்டை வகைக்கும் உண்டு.

இதனோடு அப்பிரண்டையின் புளிப்பு சுவைக்கேற்ப புளிப்பிரண்டை லேசான தீஞ்சைவக்கேற்ப தீம்பிரண்டை என அப்பிரண்டையின் காரணத்தை ஒட்டிப் பெயர் பெற்றுள்ளன.

மூன்று பட்டையுள்ள முப்பிரண்டை அரிய பிரண்டையாகும். இதனை காயகற்ப மூலிகை என அழைப்பர். இதனைச் சித்தர்கள் மருந்துடன் பயன்படுத்தி காயசித்தி அடைந்தார்கள்.

சாதாரண பிரண்டையை நெய்யில் வறுத்து உண்டால் மூலத்தினவு, மூல ரத்தம், மாந்தம், வயிறு, வாய்பு, அதிசாரம், கபம், இரத்தப்போக்கு, ஓய்ந்த நடை ஆகியவை போகும்.

களிப்பிரண்டையால் ஐயம், பித்தம், கரப்பான், சிலந்திக்கடியும் போகும்.

தீம்பிரண்டையால் செரியா மந்தம், சீதக்கட்டு, இரைப்பு வீக்கம், விக்கல் ஐயம் வாதமும் போகும்.

புளிப்பிரண்டையால் பாண்டு, மார்பு நோய், குன்மம், கபமும் போகும். சூடு உண்டாகும்.

பிரண்டைத் துவையல்

பிரண்டையின் நுனியில் வளர்ந்து வரும் மெல்லிய தண்டுகளைப் பறித்து, கழுவிக்கொள்ளவும், கடாயில் பசு நெய்யை லேசாக உள்விட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்.

பிறகு உப்பு, புளி சேர்த்துத் துவையல் செய்து சாப்பாட்டில் பிசைந்தோ அல்லது தொட்டுக்கொண்டே உண்ணலாம். இதனால் நாவில் ஏற்படும் சுவையின்மை நீக்கி, நன்கு பசியெடுக்கும். வயிறு இரைத்தல், விக்கல், கொட்டாவி அவ்வப்போது விடுதல், உடல் வெளுப்பு, வயிற்று வலி, நெஞ்சக நோய்கள் போன்றவை தீரும்.

பிரண்டையை நெய்விட்டு வதக்கி அதனை நன்கு மசிய அரைத்து 48 நாட்கள் வெறும் வயிற்றில் சிறிய நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வர மலம் போகின்ற ஆசன வாய் எரிச்சலும், இரத்த மூலமும் தீரும்.

பிரண்டையை எரித்து அதன் சாம்பலை தண்ணீரில் கரைக்கவேண்டும். பிறகு தெளிவினை இறுத்து மீண்டும் எரித்தால் பாத்திரத்தில் உப்பு தங்கும். இதுவே பிரண்டை உப்பு ஆகும். இந்த பிரண்டை உப்பு எண்ணற்ற மருத்துவ குணம் கொண்டது.

பிரண்டை உப்பை மிளகளவு வெண்ணெய்யில் கலந்து காலை நேரத்தில் உண்பதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்கில் ஏற்படும் பித்த வெடிப்பு, உதட்டு வெடிப்பு இவை குணமாகும்.

மேலும் பிரண்டை உப்பை மிளகளவு பாலில் கலந்து சிறு குழந்தையின் உடல் எடைக்குத் தகந்தபடி தர வாந்தி, சீதபேதி நுரையுடன் கூடிய பச்சையாக மலம் போவது, பசியற்று இருப்பது போன்ற நோய்களைத் தீர்க்கும் இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை மதிக்காமல் நிலத்தடி நீரை உறிஞ்சும் வேலி காத்தானை பராமரித்து வருகிறோம்.

அதே வேளையில் மருத்துவ குணம் கொண்ட பிரண்டையை முள்ளோடு முள்ளாகப் பார்த்து வருகிறோம். இனிமேலாவது பிரண்டையின் குணத்தையும், மருத்துவப் பயனையும் அறிந்து உணவோடு பிரண்டை உண்போம்.

மூலிகைகளின் பயனை அரசு மக்களுக்கு தெரியப்படுத்தினால் இதுபோன்று எண்ணற்ற மருந்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கலாம்.

ஆத்மா நந்தா -25

 ஆத்மா நந்தா -25

By N Krishnamurthy 

பத்து, பதினைந்து நாட்கள் போனது. வசந்தி தெக்ஷிணாமூர்த்தியிடம் "நாம் நந்துவையும் அழசிண்டு பெரிங்கோட்டுக்கரா போய் வருவோமா "என்றாள். தெக்ஷிணாமூர்த்தியும் கணேசன் நம்பூத்ரி வாயிலாக,நந்துவுக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் முற்றிலும் விட்டுப்போயிற்று என்று கேட்க ஆசை.

"சரி.ஞாயிற்றுக்கிழைமை போகலாம்" என்றார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மூவரும் பெரிங்கோட்டுக்கராவுக்கு போய் சேர்ந்தனர்.

கணேசன் நம்பூத்ரி வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தார். தெக்ஷிணாமூர்த்தியை பார்த்ததும் ஞாபகம் வந்ததற்கு அடையாளமாக அவரைப்பார்த்து  சிரித்தார். அவரிடம் மனைவியையும், குழந்தையயும் அறிமுகப்படுத்திய பின் நடந்ததை விவரித்தார் தெக்ஷிணாமூர்த்தி.

அதைக்கேட்ட நம்பூத்ரி கண்களை மூடி, ஐந்து நிமிட தியானத்திற்கு பிறகு கண்ணை திறந்து, அவர்களிடம் "உங்க குழந்தை பூர்வ ஜென்ம ஞாபகத்தை முற்றிலும் இழந்து விட்டிருக்கிறான். ஊருக்கு போனதும் ஒரு ஏகாதசி அன்று குழந்தையை குருவாயூரப்பனுக்கு அங்க பிரதக்ஷணம் பண்ண வெய்யுங்கோ" என்றார்.

அவர்கள் கிளம்புமுன் நம்பூத்ரி அவர்களைப்பார்த்து "போனஜென்மாவில் உங்க குழந்தை என்னவாக இருந்தான்னு தெரியவேண்டாமா" என்று கேட்டார்.பின்பு அவர்கள் பதிலுக்கு காத்திராமல் அவர் " இப்போ மரிச்சு போன ஸ்த்ரீதான் போன ஜென்மாவில் இவனோட பார்யாள்"என்றார்.

தெக்ஷீணாமூர்த்திக்கும்,வசந்திக்கும் நடந்ததெல்லாம்  தெள்ளத்தெளிவாக விளங்கின.வசந்தி அவரிடம்  " இங்கு வந்தால் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்களே. வராமல் இருந்தால் ஏதாவது கெடுதல் நடக்கும் என்றும் கூறுகிறார்களே. அது உண்மையா" என்று கேட்டாள். அதைக் கேட்ட கணேசன் நம்பூதிரி சிரித்தார். 

"இதெல்லாம் கட்டுக்கதை. இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என் மாதிரி பணத்த ஆசை இல்லாதவர்கள் இல்லை. நிறைய பேர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு பணம் எப்படி கிடைக்கும்? உங்களைப் போன்றவர்கள் இங்கு வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பணம் கிடைக்கும். அதனால்தான் அவர்கள் அப்படி கூறுகிறார்கள் நீங்கள் அதுபோல வந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்பொழுது உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை நல்லபடியாக முடிந்து விட்டது. இனிமேல் நீங்கள் வரவேண்டும் என்று தீர்மானித்தால் அன்றி இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார். அவரை மூவரும் வணங்கினார்கள். அவருக்கு காணிக்கையாக 1000 ரூபாய் கொடுத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். திருச்சூரை அடைந்து திருவெம்பாடியில் உள்ள ராதாகிருஷ்ணன், கார்த்தியாயினி  வீட்டுக்கு சென்றார்கள். நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் பெற்றோரிடம் விவரித்தாள் வசந்தி.

இதைக்கேட்ட அவர்கள் " பல செய்திகள் இது மாதிரி பத்திரத்தில் (ந்யூஸ் பேபரில்) வந்து படித்திருக்கிறோம். நமது  குடும்பத்திலே இப்படி நடக்கும் என்று யார் கண்டார்கள் " என்றார்கள்.மூவரும் இரவு அங்கு தங்கி விட்டு மறுநாள் காலை  குருவாயூருக்கு கிளம்பிச் சென்றார்கள்.

குருவாயூரப்பன் அருளால் தெக்ஷிணாமூர்த்தி குடும்பம் குறை ஒன்றும் இல்லாமல் காலத்தை கடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

நீங்கள் யாரேனும் குருவாயூர் செல்வதாயிருந்தால், ஒரு வேளை நந்தாவை பார்க்க நேரிடலாம். அவன் சின்ன குழந்தையாயிருப்பான் என்று நீங்கள் நினைத்தால், ஏமாந்து போவீர்கள். இப்போது அவன் இருபது வயது நிரம்பிய வாலிபனாக இருக்கக்கூடும்.

பூர்வஜென்ம வாசம் எல்லோருக்கும் இருப்பதில்லை.அப்படி ஒருவனுக்கு இருக்கும் பட்சத்தில் அவனால் அதன் விளைவுகளை தாங்க முடியுமா என்று தெரியவில்லை.

கதையின் தலைப்பு புரிந்ததா?

 *(முற்றும்)*

ஆத்மா நந்தா - 24

 ஆத்மா நந்தா - 24

By N Krishnamurthy 

மங்களத்துக்கு கல்யாணம் நடந்தபோது அவள் வயது பதிமூன்று. அப்போது அவள் பெரியவளாகவில்லை. திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து அவள் பெரியவளானாள். அப்போதுதான் அவளை ஆத்மநாதனின் வீட்டுக்கு கொண்டு போய் விட்டார்கள். இரண்டு மாதம் கழித்து சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. சாந்தி முகூர்த்த அறையில் உள்ளே ஆத்மநாதன் காத்துக் கொண்டிருக்க, மங்களம் பால் சொம்புடன் நுழைந்தாள். அவளுக்கு ஒரு வித தயக்கமும், பயம் கலந்த படபடப்பும் இருந்தது. ஆத்மநாதனுக்கு அப்போது வயது 19. அதுவும் இரண்டாம் கெட்டான் வயது தான். ஆனால் அவருக்கு சிறிதளவு உலக ஞானம் இருந்தது. மங்களத்தை உட்காரச் சொன்னார். அவள் உட்காரவில்லை. நின்று கொண்டேயிருந்தாள். பின்பு மிகவும் வற்புறுத்தி அவளை உட்கார வைத்தவர் அவளிடம் மெதுவாக பேச்சு கொடுத்து அவளுடைய பயத்தை ஓரளவுக்கு தெளிவித்தார். ஒரு மணி சென்றதும் அவளுக்கு சகஜ நிலைமை திரும்பியது. சிறிதளவு பேச ஆரம்பித்தாள். திடீரென்று அவரது வலது கையை பார்த்தவள் "என்ன, உங்களுக்கு வலது கையில் ஆறு விரல் இருக்கிறது" என்றாள் ஆச்சரியத்துடன். இதைக் கேட்டு ஆத்மநாதன் "ஆமாம். உனக்கு இதை யாரும் கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லலையா"என்று கேட்டார்.

" இல்லையே, யாரும் நேக்கு சொல்லலை" என்றால் மங்களம். "இது மாதிரி ஆறு விரல்கள் இருந்தா அது அதிர்ஷ்டமா "என்று கேட்டாள் அவள்."அதிர்ஷ்டமா இல்லையான்னு நேக்கு தெரியாது. எங்க தாத்தாவுக்கும் இதுபோல ஆறு விரல்ககள் இருந்ததா சொல்றா. ஆனா எனக்கு இதில் ஒரு சிரமம் இருக்கு" என்றார் அவர்.

" என்ன சிரமம்" என்று கேட்டாள் அவள். " ஒவ்வொரு விரலுக்கும் ஒரு பேர் இருக்கு. கட்டவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல்னு ஐந்து விரலுக்கும் தனித்தனி பேர் இருக்கு. சுண்டு விரலுக்கு அடுத்தபடி இருக்கும் எனது ஆறாவது விரலுக்கு என்ன பேர்னு நேக்கு தெரியலை. இதுதான் எனக்கு சிரமம்" என்று கூறினார். உடனே மங்களம் " நீங்க ஒண்ணு பண்ணுங்கோ. அதை சின்ன சுண்டு விரல்னு சொல்லுங்கோ" என்று கூறி சிரித்தாள் .மங்களத்தின் நகைச்சுவை பேச்சை அவர் மிகவும் ரசித்தார். இப்படி முதலிரவில் ஆரம்பித்த அவர்களது சௌஜன்ய மனோபாவம்,பிற்பாடு அவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபட உறுதுணையாக இருந்தது.

இதெல்லாம் மங்களத்திற்கு இம்மியும் பிசகாமல் இப்போது ஞாபகத்திற்கு வந்தது. நந்துவின் உருவம் தான் சிறியதாக இருந்ததே தவிர மங்களத்தின் கண்களுக்கு அவன் ஆத்மநாதனாகவே காட்சி அளித்தான். இதற்காகத்தான் மங்களம் காத்துக் கொண்டு இருந்தாள் போலும். அவளது வாய் ஈனஸ்வரத்தில் "வந்தூட்டேளா"என்று முனகிய அடுத்த நொடி நந்துவின் கையை பிடித்திருந்த அவளது கை கீழே விழுந்தது. தலை சாய்ந்தது. இதை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம் "அம்மா போய்ட்டாயா" என்று கத்தினார். யாரோ சென்று எதிர் வீட்டில் டாக்டர் பாலசுப்ரமணியத்தை அழைத்து வந்தார்கள். அவர் வந்து மங்களத்தை சோதனை செய்த பின் "ரெண்டு நிமிஷம் முன் உயிர் பிரிந்து இருக்கிறது" என்றார்.எல்லோரும் கதறிக்கதறி அழுதார்கள். இதற்குள் நந்து பயப்பட போகிறான் என்று அவனை மங்களத்தின் அருகில் இருந்து எடுத்துச் சென்றாள் வசந்தி. நந்து திரும்பிப் போகும்போது அவன் முகத்தைப் பார்த்த தேஜோமய குருக்கள் திடுக்கிட்டார். நந்துவின் பார்வை ஆத்மநாதன் பார்வை மாதிரியே இருந்தது அவருக்கு. நந்துவினுடைய வலது கையில் ஆறு விரல்கள் இருந்ததையும் அவர் பார்க்க தவறவில்லை. அவர் மனதிற்குள் " முருகா.என் அப்பனே. இது எப்படி சாத்தியம்?

இப்படிக்கூட நடக்குமா? இதுக்கு தான் மங்களம் காத்திருந்தாளா. அப்பனே உன் கருணையே கருணை" என்று நினைத்துக் கொண்டார்.

மங்களத்தின் இறுதி ஊர்வலத்தில் தக்ஷிணாமூர்த்தியும் கலந்து கொண்டார். திரும்பி வந்ததும் குளித்தார். எல்லோரும் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டார்ககள். கிட்டத்தட்ட ரெண்டு மணி கழிந்ததும் சுந்தரத்திடமிருந்து "போகும்போது சொல்லிக் கொண்டு போக கூடாது என்று கூறுவார்கள்" என்று கூறிவிட்டு தெக்ஷிணாமூர்த்தி வசந்தி, நந்துவுடன் ஆட்டோ பிடித்து கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்தார். மறுநாள் அனைவரும் குருவாயூர் போய் சேர்ந்தனர்.

இதற்குப் பின்னர் நந்துவுக்கு தமிழ் வார்த்தைகள் பேச வரவேயில்லை. யாராவது தமிழில் பேசினால் கூட அவனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. கணேசன் நம்பூத்ரி கூறியது தெஷிணாமூர்த்திக்கு ஞாபகத்திற்கு வந்தது. ஏதோ ஒரு குறிப்பிட்ட துர் சம்பவத்திற்கு பிறகு அவன் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகத்தை முற்றிலுமாக மறந்து விடுவான் என்பது மட்டுமில்லாமல் முன் ஜென்மத்தில் அவன் சுந்தரத்தின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினனாக இருந்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார். ஆனால் என்ன உறவு என்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் பொறுத்தவரையில் தலைக்கு வந்தது தலைப்பாயோடா போயிற்று என்றுதான் நினைத்தார்.

ஆத்மா நந்தா 23

 ஆத்மா நந்தா 23

By N Krishnamurthy 

அன்று சனிக்கிழமை. தக்ஷிணாமூர்த்திக்கு  ஸ்போர்ட்ஸ் டே என்பதால் கல்லூரிக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது.    

அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.காலை உணவு முடிந்ததும் சிறிது நேரம் மலையாள மனோரமாவை படித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று சுந்தரம் ஞாபகம் வர சுந்தரத்துக்கு போன் செய்தார் .

போனை எடுத்து "யார் பேசுவது என்று கேட்டார்" சுந்தரம். தெக்ஷிணாமூர்த்தி ஆங்கிலத்தில் "  நான் தான் குருவாயூரில் இருந்து தெக்ஷிணாமூர்த்தி பேசுகிறேன்" என்றார். தக்ஷிணாமூர்த்தி அவரிடம் "எல்லோரும் சௌக்கியம் தானே" என்று கேட்டார்.

ஒரு நிமிடம் சுந்தரம் பதிலே சொல்லவில்லை. பிறகு அவர் மிக வருத்தத்துடன்  தெக்ஷிணாமூர்த்தியிடம் " உங்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியலை.எல்லோரும் சௌக்கியம் தான் என்று சொல்லத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் சொல்ல முடியவில்லை. என் அம்மாவுக்கு உடல்நிலை 15 நாட்களாக சரியாகவில்லை. கிட்டத்தட்ட இறுதி நாட்களை நெருங்கி விட்டாளோ என்ற பயத்தில் நாங்கள் இருக்கிறோம்.அவளது உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. போவதற்கு முன் யாரையோ பார்த்து விட துடிக்கிறாள்" என்று கூறினார் .இதைக் கேட்ட சுந்தரம் "  இந்த செய்தி மிக மன வருத்தத்தை அளிக்கிறது.வெரி சாரி" என்று கூறிவிட்டு "அவர்கள் உடல்நிலை சீராக நான் குருவாயூரப்பனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறி போனை வைத்தார்.

வசந்தியிடம் விஷயத்தை கூறினார். வசந்தி மிகவும் விஜாரத்துடன் "பாவம். நல்ல மாமி என். நாம் ஏன் அந்த மாமியை சென்று பார்த்துவிட்டு வரக்கூடாது" என்று கேட்டாள். இதைக் கேட்ட அவர்  "நல்ல ஐடியாவாக இருக்கிறது .போய்விட்டு வரலாம் "என்றார்.

இரவு ட்ரெயின் பிடித்தால் கும்பகோணம் போய் சேர மறுநாள் மாலை ஆகிவிடும் என்பதால் கோயம்புத்தூர் வழியாக மாலையே செல்லலாம் என முடிவெடுத்தார்.

மாலை 4 மணிக்கு கோயம்புத்தூருக்கு ஒரு பஸ் இருப்பது தெரிந்தது.தக்ஷிணாமூர்த்தி வசந்தியிடம் நாலு மணி பஸ் படிச்சா 7:00 மணிக்கு கோயம்புத்தூர் போய்விடலாம் 9 மணி போல திருச்சிக்கு பஸ் கிடைக்கும். விடியற் காலை திருச்சி போயிடும். அங்கிருந்து கும்பகோணத்திற்கு 2.30 மணி நேரம் டிராவல். காலையில் எட்டு மணிக்குள்ள போயிடலாம் என்றார். "சரி' என்று போட்டது போட்டபடியே வசந்தியும் குழந்தை நந்துவை தூக்கிக்கொண்டு அவருடன் கிளம்பினாள். 

நாலு மணி பஸ், நாலரை மணிக்கு தான் கிளம்பியது கோயம்புத்தூர் போகும் போது மணி எட்டரை  ஆகிவிட்டது.காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த  கௌரிசங்கர் ஓட்டலில் இரவு சாப்பாடு முடித்துக் கொண்டவர்கள், பத்தரை மணிக்கு ஒரு திருச்சி பஸ் இருப்பதை அறிந்து கொண்டு அதில் ஏறினார்கள். விடியற்காலை 5:30 மணிக்கு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை அந்த பஸ் அடைந்தது. ஐந்தே முக்காலுக்கு கும்பகோணம் செல்லும் பஸ் ஏறி,எட்டேகால் மணிக்கு கும்பகோணத்தை அடைந்தார்கள்.

அங்கிருந்து  ஆட்டோ வைத்துக் கொண்டு சுந்தரம் வீட்டிற்கு சென்றார்கள். இவர்கள் வருவதைப் பார்த்ததும் சுந்தரம் கொஞ்சம் ஆச்சரியப்பட்டார். பின்பு சுதாரித்துக் கொண்டு "வாங்க" என்று கூறினார். சுந்தரத்தை பார்த்து" அம்மாவுக்கு எப்படி இருக்கு தேவலயாயா" என்று கேட்டார் தெக்ஷிணாமூர்த்தி. சுந்தரம் முகத்தில் விசனத்தை காட்டி "இல்லை. இல்லை. ஒன்றும் இம்ப்ரூவ்மென்ட் கிடையாது"என்று கூறினார். வந்தவர்கள்  உள்ளே நுழைந்தார்கள். 

மங்களம் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். கிடுகிடுவென அம்மாவிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டு வேகமாக சென்று மங்களத்தின் கையை தன் கைகளால் பற்றிய நந்தா மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காத மாதிரி" மங்களம்" என்று கூப்பிட்டான். அவன் ஏதோ பேசுகிறான் என்று அவன் உதட்டு அசைவில் இருந்து தெரிந்தது, ஆனால் என்ன பேசுகிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. இரண்டு முறை அவன் அவள் பெயரை சொல்லி கூப்பிட்டதும் மங்களம் லேசாக கண்களைத் திறந்து பார்த்தாள்.  நந்தாவை பார்த்தவுடன் அவள் கண்களில் ஒரு புது ஒளி வந்தது. அவன் வலது கையை  இறுகப் பற்றிக் கொண்டாள். அவள், அவன் வலது கையில் இருந்த விரல் எண்ணிக்கையை தெரிந்து கொள்வது போல ஒவ்வொரு விரலாக தடவை பார்த்தாள். அவள் எதிர்பார்த்தபடி  அவன் வலது கையில் ஆறு விரல்கள் இருந்தன.

மங்களம் நினைவு பல வருடங்கள் பின்னோக்கி சென்றது.

ஆத்மா நந்தா-22

 ஆத்மா நந்தா-22

By N Krishnamurthy 

தெக்ஷிணாமூர்த்திக்கு டிசம்பர் மாதத்தில் லீவு  தேதியை அறிவித்து விட்டிருந்தார்கள். இன்னும் ஒரு மாதத்தில் லீவு  தொடங்கயிருந்தது. எனவே அவர் கும்பகோணம் செல்வதற்காக ஒரு மாதம் முன்பு ட்ரெயினில் முன்பதிவு செய்ய முனைந்தார். தனக்கும் வசந்திக்கும் மாமியாருக்கும், மாமனருக்கும் முன்பதிவு செய்தார்.

பிறகு சுந்தரத்தை போனில் கூப்பிட்டு தாங்கள் வரப் போகும் விஷயத்தை கூறினார். அதைக் கேட்ட சுந்தரம் "ரொம்ப சந்தோஷம். நீங்க கிளம்பறன்னைக்கு போன் பண்ணுங்க. நானே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து உங்களை அழச்சுண்டு  போறேன்" என்றார். குருவாயூரிலிருந்து திருச்சி வரை ட்ரெயினில் சென்று அங்கிருந்து கும்பகோணத்திற்கு பஸ்ஸில் செல்வதாக திட்டமிட்டார் தெக்ஷிணாமூர்த்தி. கும்பகோணத்திற்கு கிளம்பும் அன்று பகலில் சுந்திரத்திற்கு போன் செய்து "இன்று இரவு நாங்கள் கிளம்புகிறோம். நாளை மாலை 6 மணி அளவில் அங்கு இருப்போம்" என்று கூறினார் தெக்ஷிணாமூர்த்தி. "சரி. கிட்டத்தட்ட அந்த சமயத்தில் நான் புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுகிறேன்" என்றார் சுந்தரம். "தேவையில்லை. நாங்களே ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு வந்து விடுகிறோம். அட்ரஸ் தான் என்கிட்ட இருக்கே"என்றார்  தெக்ஷிணாமூர்த்தி.

திருச்சூரில் ராதாகிருஷ்ணனும், கார்த்தயாயினியும் ஏறிக்கொண்டார்கள். மறுநாள் திருச்சி ஜங்ஷனில் இறங்கி,ஆட்டோ பிடித்து சென்ட்ரல் பஸ் ஸ்டேண்ட் போய் சேர்ந்தனர். கும்பககோணம் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர,மாலை 6:30 மணிக்கு பஸ் கும்பகோணம் புது பஸ் ஸ்டாண்டை அடைந்தது. இறங்கியதும்  தெக்ஷிணாமூர்த்தி குடும்பம் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு நாகேஸ்வரன் சன்னதி  தெருவில் இருந்த சுந்தரத்தின் வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் சென்றவுடன் அவர்களை சுந்தரமும், ஜனனியும் வரவேற்றார்கள்.

அவர்களிடம்  தெக்ஷிணாமூர்த்தி தன்னுடைய மாமனாரையும், மாமியாரையும் அவர்களுக்கு  அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் இருவருக்கும் தன்னுடைய மனைவி, அம்மா,சித்தி ஆகியோரை  சுந்தரம் அறிமுகப்படுத்தினார்.

புதிய இடமாகையால் நந்து கொஞ்சம் சிணங்க ஆரம்பித்தான். மங்களம் அவனை தூக்கிக்கொண்டு வேடிக்கை காட்ட தொடங்கியதும் குழந்தை பாந்தமானான்.

இரவு சாப்பாடு முடிந்ததும் சுந்தரமும், தட்சிணாமூர்த்தியும் பேச ஆரம்பித்தார்கள் "உங்களுக்கு எவ்வளவு நாட்கள் லீவு இருக்கிறது. கும்பகோணத்தில் எவ்வளவு நாட்கள் தங்கப் போகிறீர்கள்" என்று கேட்டார் சுந்தரம். "எனக்கு பத்து நாள் லீவு இருக்கிறது. ஒரு வாரம் இங்க தங்கலாம் என்று இருக்கிறேன்"என்றார் தெக்ஷிணாமூர்த்தி. சுந்தரம் அவர்கள் ஒரு வாரத்தில் பார்க்கக்கூடிய கோவில்களின் லிஸ்ட் ஒன்றை தயார் செய்தார்.

தனக்கு தெரிந்த ஒரு டிராவல் ஏஜன்சியிடம் போன் செய்து நான்கு பேர்கள் சௌரியமாக உட்கார்ந்து  செல்லக்கூடிய ஒரு டூரிஸ்ட் காருக்கு  ஏற்பாடு செய்தார். 

கார் ட்ரைவர் கொஞ்சம் மலையாளம் அறிந்தவராயிருந்தது சௌகர்யமாக போயிற்று.

வீட்டு மாடியில் டாய்லலெட்டுடன் கூடிய விசாலமான ரூமை அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

இரண்டு ஒற்றை கட்டில்களில் ராதாகிருஷ்ணனும், கார்த்தயாயனியும் படுக்க,தெக்ஷிணாமூர்த்தியும்,வசந்தியும் தரைமேல் விரித்திருந்த பாய் மேல் படுத்தார்கள்.நந்துவுக்கு தூளி கட்டினார்கள். அவன் அந்த தூளியில் படுத்து, ஏதோ பழகிய இடத்தில் உறங்குவது போல அசந்து உறங்கத்தொடங்கினான்.

அடுத்த ரெண்டு நாட்கள் கும்பகோணத்தில் உள்ள கோயில்களை பார்ப்பதாக திட்டமிடப்பட்டது.இந்த இரண்டு நாளும் மங்களம் நந்துவை கீழே  விடவே இல்லை. அவனும் மங்களத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தான்.

கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரன் கோயில், ராமசாமி கோயில், சார்ங்கபாணி கோயில்,சக்ரபாணி கோவில் மற்றும் இதர பல கோயில்களை இரண்டு நாட்களிள் சென்று பார்த்தார்கள். 

மற்ற ஐந்து நாட்களில் திருபுவனம், திருவிடைமருதூர், திருச்சேறை, நாச்சியார் கோயில், திருவாரூர், சுவாமிமலை, தாராசுரம் திருமழிச்சூர் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களை சென்று பார்த்து வந்தார்கள்.

சாதாரணமாக இது போன்ற ஒரு வார பயணத்தில் தண்ணீர், உணவு காரணமாக வயிறு கெடும் வாய்ப்புள்ளது.

ஆனால் தினமும் காலையில் வீட்டை விட்டு கிளம்பி, திட்டமிட்டபடி பார்க்க வேண்டிய இடங்கள் பார்த்து விட்டு, இரவு திரும்ப வீட்டுக்கே வந்தார்கள். காலை பிரக்பாஸ்ட் முடித்து,கையில் தண்ணீரும்,மதிய உணவும் எடுத்துக்கொண்டு  சென்றதால், வெளியே காப்பி தவிர வேறு சாப்பிட வேண்டிய அவசியமில்லாமல் போனது.இதனால் உடல் உபாதை இல்லாமல் இருக்க முடிந்தது.

திரும்பவும் குருவாயூருக்கு கிளம்பும்போது தெக்ஷிணாமூர்த்தி சுந்தரத்திடம் " நான்  இதுவரை தமிழ்நாட்டு கோயில்களை பற்றி படித்திருக்கிறேன். இப்போதுதான் முதல்முறையாக இக்கோயில்களை காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.

எல்லா கோவில்களும் பிரம்மாண்டமாக உள்ளன. இந்த வாய்ப்பை தந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை" என்று கூறினார்.

இதற்கு சுந்தரம் "இதற்கெல்லாம் பார்மலா நன்றி என்று சொல்ல வேண்டாம். ஏதோ எங்களால் முடிந்தது, உங்களுக்கு உதவி செய்தோம் அவ்வளவு தான்" என்று கூறினார்.தெக்ஷிணாமூர்த்தி  குடும்பம் குருவாயூர் புறப்பட்டுச் சென்றது.

மங்களத்திற்கு நந்துவை பிரியவே மனமில்லை.

மூக பஞ்சசதி

 காமாட்சி அனுக்ரகம் பற்றி மஹா பெரியவா:

“காமாட்சி ஸகல கஷ்டத்தையும் நிவர்த்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவகிரகங்களைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவகிரக பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள்படுமாறு, ‘மூக பஞ்சசதி’யில் – வார்த்தை விளையாட்டுப் பண்ணி, ஒரு ச்லோகம் இருக்கிறது.

‘மூக பஞ்சசதி’ என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாட்சியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவகிரகங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாரவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ச்லோகம்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸௌம்யோ குருரபி கவித்வம் ச கலயந்
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ விஜயதே
(பாதாரவிந்த சதகம் – 59)

சூரியன்: ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத் தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவகிரகங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே? ‘பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர்.

சந்திரன்: அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்திரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர்.

செவ்வாய்: ‘லோஹிதவபு:’ என்று ச்லோகத்தில் இருப்பதற்கு, ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ராணாம் ஸௌம்ய:’ அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு, அது ஸௌம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸௌம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸௌம்ய தேவதை என்கிறோம்.

புதன்: ‘சோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸௌம்யம்.’ நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் ஸௌம்யம் என்கிறோம். சோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸௌம்யன் என்று பேர்.

குரு: அம்பாள் பாதம் ‘குரு ரபி’ – ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும்கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட, அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்ம ஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன். குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர்.

சுக்கிரன்: ‘கவித்வம் சகல யந்’ – கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால், ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ச்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவகிரகங்களில் கவித்வகாரகன் வெள்ளிக் கிழமைக்குரிய சுக்ரன். ‘குரு’ என்று வெறுமே சொன்னால், அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்கும். அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால், அது அஸுர குருவான சுக்ராச்சாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால், அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது.

சனி: ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு ஒரு பேர். சனி, ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் கிரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற கிரகம் எதற்கும் இல்லாத ‘ஈச்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை.‘சனை:’ – மெதுவாக, ‘சர’-ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம்.

ராகு: ‘பஜதாம் தம: கேது:’ – அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம் தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர்.

கேது: கேது என்பது ஒன்பதாவது கிரகமென்று எல்லோருக்கும் தெரியும். ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு கிரகங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது.”  (நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

யார் இந்த மூகர்…? 

கவி காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து "நவரத்தினங்கள்" என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர். 

ஒரு சமயம் போஜராஜன் சபையில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில், அன்னை பராசக்தியானவள் தண்டியையும், பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் மிகுந்த கோபத்துடன் அவசரமாக 'அப்படியென்றால் நான் யாரடி?' என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார்.

அன்னையும் நிதானமாக 'நீயே நான் தான்' என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சாபமிடுகிறாள். காளிதாஸர் தாம் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி, ”நீ ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் பெருவாய்” என்று அருளாசி வழங்கி வாக்களிக்கிறாள் அன்னை. 

காலங்கள் உருண்டோடின…. சக்தி பீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சி  க்ஷேத்திரத்தில்  தமது மறுபிறவியில், ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர்.  மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாட்சி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார்… பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டு அன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில் செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து 'பே,பே' என்றுசப்தமிடுகிறார்.  ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு உத்திரவிடுகிறார் ஸ்ரீவித்யா உபாஸகர்.

"சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா" என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்த தாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களை புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது. 

இவர் ஸ்ரீகாமாட்சி மீது பாடிய 500 ஸ்லோகங்களே ”மூக பஞ்சசதி” என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது. 

இந்த மூகரே பிற்காலத்தில் (கி.பி 398) காஞ்சி காமகோடி பீடத்தின் 20ஆவது ஆச்சாரியராக பட்டமேற்று 39 ஆண்டுகள் கழித்து கி.பி 437 ஆம் வருடம் ஸித்தி அடைந்தார்

வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்

 🌹 சனி தோஷம் போக்கும் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீகாலபைரவர், காசி காலபைரவருக்கு இணையான அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக எழுந்தருளியிருக்கிறார்.

ஶ்ரீகாலபைரவர்

வைரவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீகாலபைரவருக்கு சிறப்பான புராண வரலாறும் உண்டு.

தந்தைக்கு குருவான முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் பெறுவதற்காக சுவாமிமலைக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் வைரவன்கோயில் என்னும் தலத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்கும்படி தம்முடைய அம்சமான ஶ்ரீகாலபைரவருக்கு கட்டளை பிறப்பித்தார். ஈசனின் கட்டளையை ஏற்ற ஶ்ரீகாலபைரவர், வைரவன்கோயிலில் எழுந்தருளியதாக தலவரலாறு.

வைரவன்கோயிலில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி எழுந்தருளியதாலும், ஆலயத்தின் வலப் புறம் காவிரியின் கிளை வாய்க்கால் பாய்வதாலும், ஶ்ரீகாலபைரவரின் தெற்குப் பகுதியில் மயானம் அமைந்திருப்பதாலும், இந்தத் தலம் காசிக்கு நிகராகப் போற்றப்பெறுகிறது.

ஶ்ரீகாலபைரவர் கோயில்

ஶ்ரீகாலபைரவர் கோயிலின் அன்னதானக் குழுத் தலைவர் முத்துவெங்கட்ராமனிடம் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.

“காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை சக்திகளையும் கொண்டவராக, இந்தத் தலத்தில் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். பைரவரை இந்தத் தலத்தில் எழுந்தருளச் செய்த பிறகு ஈசன் தங்கிய இடம் ஈசன்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னர் ஈச்சங்குடியானது. தேவர்களை நிறுத்திச் சென்ற ஊர் தேவன்குடியாகவும், கணபதியை பூஜித்துப் புறப்பட்ட இடம் கணபதி அக்ரஹாரமாகவும், தேவியை உமையாள்புரத்தி லும், நந்தியை நந்திமதகிலும், கங்கையைக் கங்காபுரத்திலும் எழுந்தருளச் செய்தார் ஈசன். அந்த வகையில் இந்தத் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் ஶ்ரீகாலபைரவர், தம்மை வழிபடும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.

வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவருக்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியன்றும் அர்த்தசாமத்தில் உலக நலன் கருதி சுவர்ணாகர்ஷன பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெற்றுவருகிறது. ஹோமத்துடன் 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகிய அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது

ஶ்ரீகாலபைரவர் உற்சவர்

“காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படுவதாக பக்தர்களிடையே ஆழ்ந்த நம்பிக்கை நிலவி வருகிறது 

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தில் ஹோமங்கள், அபிஷேகங்கள், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்கிறார்கள்.✍🏼🌹