Tuesday, February 4, 2020

அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே...!

அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே...!

பெரிய கோவில் நம்பி, ஸ்ரீ ரங்கத்து கோயில் அதிகாரியாக இருந்து, தொடக்க காலத்தில் ராமானுஜரின் சீர்திருத்தங்கள் பிடிக்காமல் அவரை அலட்சியப்படுத்தியவர், பின் நாளில், கூரத்தாழ்வாரின் அறிவுரைகளால், உடையவரின் நோக்கத்தில் இருந்த பரிசுத்தம் புரிந்து, அவரை சரணடைந்தார். ராமானுஜரும் அவருக்கு "திருவரங்கத்து அமுதனார்" என்று பெயர் சூட்டினார்.

அமுதனார் ஒரு நாள், ராமானுஜரின் பெருமையைப் போற்றும் விதமாக, அவரை வாழ்த்தி, அந்தாதி ஒன்று இயற்றி, ராமனுஜரிடம் வழங்கினார். ஆனால், ராமானுஜரோ, தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக்கொண்டார், அந்தாதிக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும், “உமக்கு எழுத வேண்டும் என்று தோன்றினால், நமது திவ்யதேசங்கள் பற்றியோ, அல்லது பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியோ, ஆச்சார்யர்கள் பற்றியோ அல்லது கூரத்தாழ்வாரை குறித்தோ எழுது." என்றார்.

அமுதனாரோ, "ராமானுஜர் நூற்றந்தாதி” எழுதினார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டார்.

இந்த நூற்றந்தாதியினை திருவரங்கத்தில் ராமானுசரின் சிஷ்யர்கள் ஓதுவது வழக்கமாயிற்று. இதை தானும் கேட்டு இன்புற வேண்டும் என்று விரும்பிய நம்பெருமாள், ராமானுஜரை மடத்திற்கு செல்லப் பணித்துவிட்டு, சப்தாவரணப் புறப்பாடின் போது, வாத்திய கோஷத்தை நிறுத்தி விட்டு, ராமானுஜ நூற்றந்தாதியை மட்டும் ஓதச் சொல்லிக் கேட்டு உகந்தருளினார்.

திருக்கோளூர் அம்மாள், “அமுதனாரைப் போல் என் ஆச்சார்யான் மீது அந்தாதி பாடினேனா”, என்று வினவுகிறார்.

இராமானுசர்

 இராமானுசர் 

கலியும் கெடும் கண்டு கொண்மின்

ஆயிரம் ஆண்டுகள் முன்பு
ஶ்ரீபெரும்புதூரில் 1,017 ஆம்  ஆண்டில் சித்திரை மாதம்,  திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார்  இராமானுஜர் .  இவர்   இந்து  மதம்  மற்றும் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்த  வைணவ   மகான். இவர்  ஆழ்வார்களின் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் இசையுடன் பாடிட வழிவகுத்தவர். இதனால் இவர் தமிழ் வேதமான திருவாய் மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுகிறார்.
              
இராமானுஜர்  பன்மொழிப் புலமைமிக்கவர். இவர்   தமிழ் மறையை தழைக்கச் செய்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சாதி மத பேதமின்மை ஆகிய கொள்கைகளை மக்களிடையே உபதேசித்து  அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்.
  
இவர்  ஆன்மிகத்தோடு சமூக ஒற்றுமையையும் வலியுறுத்திய சிறந்தச்  சமூக ஆன்மீக சீர்திருத்தவாதி.
          
ஆதிதிராவிடர்களைத் "திருக்குலத்தவர்" என்று புகழ்ந்தார் இராமானுஜர்.  இவரை  "உடையவர்,   ஸ்ரீ பாஷ்யக்காரர், எம்பெருமானார்,   திருப்பாவை ஜீயர், யதிராஜமுனி,   இளையபெருமாள்"  எனப் பல   பெயர்களால் அழைக்கின்றனர்.   இவர் ஶ்ரீரங்கம்  கோவிலின் நிர்வாகத் திட்டங்களை சீரமைத்து, தொகுத்து வகுத்தார்.
              
இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத் தத்துவத்தைத் தோற்றுவித்து, அதை  இந்தியா முழுவதும் பரப்பினார்  இராமானுஜர்.     ஏழை எளிய மக்களிடமும் வைணவம் பரவக் காரணமாக இருந்தார்;  பரிபூரணமான பக்தியும் சரணாகதியுமே இறைவனை அடைவதற்கான எளிய வழி என்று கூறி மக்களை எளிய வழியில் நெறிப்படுத்தினார்   இராமானுஜர்.
       
தமிழ்நாட்டில் ஶ்ரீபெரும்புதூரில் சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இராமானுஜர்.  

இவர் தனது தந்தையிடம் இருந்து வீட்டிலேயே வேதங்களைக்  கற்று வந்தார்.

சிறு வயதிலேயே வேதங்களிலும், உபநிடதங்களிலும் இருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்களை எளிதாகப் புரிந்து கொண்டார் இராமானுஜர். 

இவர் தனது 16வது வயதில் தஞ்சம்மாள் என்ற பெண்ணைத்  திருமணம் செய்தார்.  திருமணமான சிலமாதங்களில் தனது தந்தையை இழந்தார் இராமானுஜர்.

கல்வி  கற்கும் ஆர்வத்தினால்
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார் இராமானுஜர்.   இவர்  காஞ்சிபுரத்தில் "யாதவ பிரகாசர்"  என்கிற பண்டிதரிடம் சீடராகச் சேர்ந்தார். கல்வி, கேள்வி, ஞானங்களில் தேர்ச்சி பெற்றவரான யாதவ பிரகாசர் அளித்தச்  சில அத்வைத விளக்கங்களில் இராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்டு யாதவ பிரகாசர் இராமானுஜரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்ய எண்ணி காசிக்கு சீடர்களுடன் பயணமானார்.
      
காசியை நெருங்கும் போது தனது தம்பி   கோவிந்தனின்   மூலம் குருவின் திட்டத்தை அறிந்து, காசியிலிருந்து காஞ்சிக்குத்  தப்பினார் இராமானுஜர். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே நாள் இரவில் பெருமாளின் கருணையால் தப்பித்ததாகக் கூறப்படுகிறது
பின்னர்  "திருக்கச்சி நம்பி" என்பவரைக்  குருவாக ஏற்றார். 
                   
திருக்கச்சி நம்பி  வைசிய குலத்தைச் சார்ந்தவர்.அது தனது  மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதைத்  அவளது செயல்களின் மூலம் தெரிந்துக்கொண்டார் இராமானுஜர்.
 தன் பக்தி மார்க்கத்திற்கும், மனித நேயத்திற்கும் உறுதுணையாக  இவள்  இருக்க மாட்டாள்! என்று தெரிந்துக் கொண்ட இராமானுஜர்  துறவறத்தை மேற்கொண்டார். 
             
ஆச்சாரிய குரு பரம்பரையில் முதல் ஆச்சாரியர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாத முனிகள் ஆவார். அவருக்குப் பின் "யமுனாச்சாரியர்" என்ற "ஆளவந்தார"் ஆச்சாரியர் ஆனார். இவர் நாதமுனிகளின் பேரன் ஆவார். அடுத்து வந்தவர் இராமானுஜர் ஆவார்.
             
ஆளவந்தாரின் அழைப்பை ஏற்று அவரைப் பார்ப்பதற்கு,  பெரிய நம்பியுடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு காடு, மலை கடந்து ஶ்ரீரங்கத்திற்கு ஓடோடி வந்தார் இராமானுஜர். ஆனால் யமுனாச்சாரியாரின் உயிர் பிரிந்த உடலையே அவரால்  காண  முடிந்தது.
ஆனால் அவருடலில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன. அதனைப் பார்த்த   இராமானுஜர் யமுனாச்சாரியாரை மானசீகக்  குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று இலட்சியங்களை நிறைவேற்றுவதாகக் கூறினார். அவை:

1.திவ்ய ப்ரபந்ததிற்கு வியாக்யானம் செய்வது

2. பாரசர முனிவர் வியாசர் புகழை உலகரிய செய்வது

3.  பிரம்ம சூத்திரம் வியாக்யானம் விசிஷ்டாத்வைததில் உலகிற்கு எடுத்து சொல்லி, அறியாமையால் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு இறை அருள் கிடைக்கச் செய்வது.

இவ்வாறு இராமானுஜர் 
சொன்னதும் மூடியிஇருந்த   யமுனாச்சாரியாரின் விரல்கள்   ஒவ்வொன்றாகத் திறந்தன.  பினனர் பல நாடுகளுக்கும்  இராமானுஜர்  சென்று தனது விசிஷ்டாத்வைத் தத்துவங்களை எடுத்துரைத்தார்; 

பண்டிதர்களுடன் வாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை ஏற்றுக் கொண்ட பல பண்டிதர்கள் அவரின் சீடர்கள் ஆனார்கள்.
         
ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம் நாராயண மந்திரத்தின் இரகசியத்தை கற்க முயன்றார் இராமானுஜர்.    பதினேழு முறைகள்  முயன்றும்  முடியாமல்   பதினெட்டாவது முறையாக ஶ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்குச் சென்று  நாராயண மந்திரத்தின் இரகசியத்தைத்   தெரிந்துக் கொண்டார்.
          
ஆனால் திருக்கோட்டியூர் நம்பி,  மந்திரத்தின் இரகசியத்தை எவருக்கும் வெளியிடக்கூடாது! என்றும், அவ்வாறு வெளியிட்டால் உனக்கு நரகமே  கிடைக்கும் என்றும்  இராமானுஜரிடம் சத்தியம்   வாங்கினார்.  இராமானுஜரும்  சத்தியம் செய்துவிட்டு, திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மீதேறி நின்றவாறே  எல்லோரும் கேட்கும்படி உரக்க நாராயண மந்திரத்தைக் கூறினார்.
     
குருவின் வார்த்தையை மீறி, நரகத்திற்குச் செல்வாய்! எனக் குரு கூறியபோதும் 'எல்லோரும் சொர்க்கம் செல்ல,  நான் ஒருவன் நரகம் செல்வது என்றால் அது என் பாக்கியம் தான்' என்று கூறினார் இராமானுஜர்.

இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி இந்த எண்ணம் எனக்கு ஏன் ஏற்படவில்லை? என்று வருந்தி அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிவிட்டது எனக்கூறி "எம்பெருமானார்" என்று கூறி  இராமானுஜரைக் கட்டி தழுவினார்.
         
இராமானுஜர்,   ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி, அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் முளைத்து, அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நிகழ்ந்தன என்பர்.

தற்போது வைணவக் கோவில்களில் நடைபெறும் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை வகுத்தவரும் இராமானுஜரே ஆவார். ஶ்ரீரங்க கோயில் நிர்வாகம், வைஷ்ணவ மட நிர்வாகம் இரண்டையும் திறம்பட நடத்தினார் இராமானுஜர்.
         
ஶ்ரீரங்கம் கோயிலின் உடைமைகளைச்   சிறப்புற மீட்டெடுத்து, நிர்வாகம் செய்ததால் திருவரங்கன் இராமானுசரை "உடையவர்" என அழைத்தாராம். ஶ்ரீரத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளையும் நெறிப்படுத்தினார் இராமானுஜர்.
           
ஶ்ரீரங்கத்தைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் இராமானுஜருக்கு ஏற்பட்டப்போது, ஶ்ரீரங்கத்திலிருந்து,நீலகிரி காடுகளைச் சென்றடைந்தார் இராமானுஜர்.  அங்கு நல்லான் சக்கரவர்த்தி என்பவன் அங்குள்ள எல்லாத்தரப்பு மக்களுக்கும் வைணவ மதத்தை கற்று தருவதைப் பார்த்து மெய்சிலிர்த்தார் இராமானுஜர்.
          
பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஏரி ஒன்றை அமைத்தார் இராமானுஜர். 
பின்னர்  அங்கிருந்து மேலக்கோட்டை சென்று பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கினார். இராமானுஜர்.

அவ்வூரில் இருந்த அத்வைத்தவாதிகளை வாதில் வென்று வைணவராக்கினார்  இராமானுஜர்.  

அவ்வூரில் இருந்த தாழ்ந்த குலத்தைச் சார்ந்தோரைத் "திருக்குலத்தார்" என்று அழைத்து அவர்களுக்கு பூணூல் அணிவித்து வைணவராக்கினார் இராமானுஜர்.
            
பின்னர்  தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு, திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே  வைகுண்டம்  சேர்ந்தார்   இராமானுஜர்.    இப்போதும்   இராமானுஜரின்   திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில்  அப்படியே  உள்ளது. 
               
#இராமஅனுஜ  என்ற வடமொழிச்  சொல்லுக்கு  #இராமரின்தம்பி எனப்  பொருளாகும். (அனுஜ=தம்பி).  இவரை "இலட்சுமணரின் அவதாரம்" இறை தொண்டையும், மக்கள் தொண்டையும் இரு கண்களெனக்   கொண்டு   வாழ்ந்த இராமானுஜரைப் போற்றுவோம் 

#சர்வம்_கிருஷ்ணார்பணம்
+91 93443 34246 added +91 84383 83407

திருக்கோவிலூர்

திருக்கோயிலூரில் ஒருநாள்இரவு -முதலாழ்வார்கள்_சந்திப்பு 

வைணவ அடியார் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்தார்.
என்ன ஊரப்பா இது?' 

#திருக்கோவிலூர்

'அடடே! என்ன கோயில்?' .. 'வைணவ கோயில்'
'அடிசக்கை. இதோ போகிறேன்.' அவர் சற்று உயரம் ஏறி எட்டிப் பார்த்தார். மேகங்கள் திரண்டு மின்னலிட்டு கர்ஜிக்கத் துவங்கின. இன்னும் நடையை வேகமாக்கினார்.காற்று சுழன்று சுழன்று அடித்தது.


கும் இருட்டு, கல்லிலும் மேட்டிலும் தெரியாது அவர் நடந்தார். மெல்லிய விளக்கொளி வந்து கொண்டிருந்த ஒரு வீட்டு வாசலில் நின்றார். ஒரு மின்னல் அடித்தது. வீட்டு வாசலில் வைணவச் சின்னங்கள் இருந்தன. கை கூப்பி வணங்கினார்.
மழை வரும் போல் இருக்கிறது. 'அன்பரே! இங்கு தங்க இடம் இருக்குமா?' என்று கெஞ்சும் குரலில் கேட்டார். பெரிய மரக் கதவு திறந்தது. ரேழியில் இறங்கி அடுத்த கம்பி கதவை நீக்கினார். நீக்கியவர் உள்ளே போனார். இந்த ரேழியில் இடம் இருக்கிறது ..தங்குங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அந்த வைணவ பெரியவர் நாராயண நாராயண நாராயண என்று எல்லா வல்ல இறைவனை அழைத்தார். மெல்ல கால் நீட்டிப் படுத்தார்.


குளிர் காற்று ஓஙகி வந்து தரையை அறைந்தது.
வாசற்பக்கம் யாரோ கதவைப் பிடித்து அல்லாடினார்.
'அய்யா, மழை வரும் போல் இருக்கிறது. இங்கு தங்க இடம் கிடைக்குமா?'
உள்ளிருக்கும் மனிதருக்கு வெளியே நிற்பவருடைய உருவம் தெரிந்தது.
'வாரும் அன்பரே. நீர் நிற்கின்ற நேரேதான் கதவு இருக்கிறது. மூன்று படிகள் ஏறினால் கதவைத் தொட்டுவிடாலம். கதவு திறந்திருக்கிறது. இங்கு ஒருவர் படுக்க இடம் இருக்கிறது. இருவர் அமரலாம். வாரும். வந்து அமர்ந்து கொள்ளும். மழை வருவதற்குள் உள்ளே வாரும்.' அன்பு ததும்ப அழைத்தார். வந்தவர் கதவு திறந்து உள்ளே வந்தார். மறுபடியும் கதவு மூடிக்கொண்டார். அருகே வந்து நின்று கொண்டார்.

'மிக்க நன்றி. எங்கேனும் மரத்தடியில் நின்று மாட்டிக் கொள்வேனோ என்று பயந்தேன். உங்கள் அன்புக்கு நன்றி!'
'எனக்கெதற்கு நன்றி? எல்லாம் இறைவன் செயலல்லவா! அவர் கூட்டுவிக்கிறார்' என்று இனிமையாகப் பேசினார்.

சற்று நேரத்தில் மீண்டும் வாசலில் யாரோ ஒருவர் கதவை தட்டினார்.'அய்யா இங்கு தங்க இடம் இருக்கிறதா? கடும் மழை வரும் போல் இருக்கிறது' குரலில் இனிமை சொட்டிற்று. வந்தவர் சடாமுனியோடும் வைணவச் சின்னங்களோடும் இருப்பது தெரிந்தது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில்'உள்ளே வாரும். உள்ளே வாரும்' ஒரே குரலில் அழைத்தார்கள். 'என் அப்பனே நாராயணா?' வந்தவர் குரல் உருகி தேனாய் சொட்டிற்று 'நன்றி, நன்றி' என்று கை கூப்பினார். 'இங்கு ஒருவர் படுக்க இடம் உண்டு. இருவர் அமர வழியுண்டு. நீங்கள் வந்திருக்கிறீர்கள். மூன்று பேரும் நிற்கலாம். மழை நம்மை எதுவும் செய்யாது' என்று உள்ளே அழைத்தார்கள். வந்தவர்படி ஏறி. ரேழியில் அவர்களுக்கு அருகே நின்று கொண்டார். அவர்கள் மூன்று பேரும் பரஸ்பரம் நன்றி சொல்லி நாராயணன் பெயரைச் சொன்னார்கள். வைணவ கிரந்தங்களில் உள்ள ஸ்லோகங்களை எடுத்து முகமன் சொல்லிக் கொண்டார்கள்.

மழை அதிகரித்தது. அவர்கள் மௌனம் அதிகரித்தது. தங்களுக்குள் மௌன மொழியில் பேசிவர்களோடு அருகே இருக்க, அவனும் பேச ஸ்ரீமன் நாராயணன் விரும்பினான். காற்றுபோல மெல்ல உள்ளே நுழைந்தான். அவர்களுக்கு நடுவே நின்று கொண்டான். இடப்பக்கம் நின்றவருக்க வலப்பக்கம் இடித்தது. வலப்பக்கம் உள்ளவருக்கு நடுப்பக்கம் இடித்தது. யாரோ முதுகு பக்கம் நெட்டித் தள்ளினார்கள். யாரோ இடிக்கிறார்கள்? மனம் பேசியது
அப்போது ஒரு மின்னல் வீசுகிறது. மின்னல் வீசிய அந்த ஒரு கணத்தில் நான்காவதாக வந்தவரின் முகத்தை மூவரும் பார்க்கிறார்கள். நான்காவதாக அங்கே வந்திருப்பவர் பகவான் விஷ்ணுதான்!

மீண்டும் பகவானின் திருமுகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனால் மின்னல் அடித்தால்தான் பார்க்க முடியும். மின்னல் எப்போது அடிக்குமோ?

ஒரு விளக்கு இருந்தால் திருமாலின் முகத்தை மீண்டும் காணலாமே என்று நினைக்கிறார் முதலில் வந்தவர். விளக்கு ஏற்ற அகல், எண்ணெய், திரி, நெருப்பு எல்லாம் வேண்டுமே! அவற்றுக்கு எங்கே போவது? எனவே தனது ஞானத்தால், தானே ஒரு விளக்கை உருவாக்குகிறார் அவர்.

அவர்தான் முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார். திருமாலின் மீது ஒரு பாசுரம் பாடி ஞான விளக்கை ஏற்றுகிறார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே ... !!!
என்று.
இவரைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்தவர்,

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா - நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்...!!!

என்று தொடங்குகிறார்.


மூன்றாவதாக வந்தவர் முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார்.இவர் பாடிய முதல் பாசுரம்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ... !!!


இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்டவர்களிடையே இருக்க விரும்பி பகவானே நேரில் வந்து அவர்களது இட நெருக்கடியைத் தானும் பகிர்ந்து கொண்டதை பார்க்கும்போது, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் தேவையையும், உயர்வையும், இன்றியமையாமையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். நம்மிடம் இருப்பது எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.


இந்து மூன்று ஆழ்வார்களுக்கும் கிடைத்த அந்த தரிசனம் மனிதரால் கை கொள்ள முடிந்த விஷயம். அவன் அருள் வேண்டும். அவன் நகர்த்த வேண்டும். அவனால் அது எளிதாகும். அதே சமயம் அதற்குண்டான உடல் தகுதியும், மன தகுதியும் இருக்கவேண்டும். அவர்களிடமிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த அந்தப் பாடலே மனித வாழ்க்கைக்கு வழிகாட்டி.

ஆதாரம் : -எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கவசம்

ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கவசம்🙏

🙏பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது🙏
🙏 ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே
ப்ரஹ்லாதே னோதிதம் புரா
ஸர்வ ரக்ஷாகரம் புண்யம்
ஸர்வோ பத்ரவ நாசனம்🙏

🙏 ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ
ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம்
த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம்
ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம்🙏

🙏விவ்ருதாஸ்யம் த்ரினயநம்
சரதிந்து ஸமப்ரபம்
லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம்
விபூதி பிருபாஸிதம்🙏

🙏சதுர்புஜம் கோமளாங்கம்
ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஔர்வோஜ சோபிதோ ரஸ்கம்
ரத்ன கேயூர முத்ரிதம்🙏

🙏தப்த காஞ்சன ஸங்காசம்
பீத நிர்மல வாஸஸம்
இந்திராதி ஸுரமௌளிஸ்த
ஸ்புரன் மாணிக்ய தீம்திபி🙏

🙏 விராஜித பத த்வந்த்வ ம்
சங்க சக்ராதி ஹோதிபி
கருத்மதாச வினயா
ஸ்தூயமானம் முதான்விதம் 🙏

திருக்கண்ணபுரம்#சவுரிராஜப்பெருமாள்

#திருக்கண்ணபுரம்#சவுரிராஜப்பெருமாள் (நீலமேகப்பெருமாள்) திருக்கோயில்

பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.

 #வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது அதிகாலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சிதரும் #மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும்.

#மாசி_மகம்  போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக்  காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜப் பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது. மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தின் மீதமர்ந்திருப்பார். பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரிராஜப் பெருமாளை ’மாப்பிள்ளைப் பெருமாள்’ என்று அழைக்கின்றனர்.

#தல_வரலாறு 

இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது தொன்நம்பிக்கை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.

🍀இங்குள்ள #தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கி றார்கள்.

 🍀தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.

 🍀இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

🍀 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு #திருவரங்கம், வடக்கு வீடு - #திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு-#திருமாலிருஞ்_சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக #திருக்கண்ணபுரம் ஆகும்.

🍀இத்தலத்தினை, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர்.

#முனையதரன்_பொங்கல் 

திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு. சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:

புனையும் குழலாள் பரிந்தளித்த 
   பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே
   ஆம் என்று அழுத்தும் ஆதரவின் 
முனையதரையன் பொங்கல் என்று 
   முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும்
   வழங்கும் சோழ மண்டலமே

#முனையதரன்பொங்கல்வரலாறு 

திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து வந்த முனையதரையர் எனும் பக்தர் பெருமாள் திருப்பணிகளைச் செய்து வந்த போது, பஞ்சம் ஏற்பட்டது. அவரோ பெருமாளுக்குப் படைக்காமல் எதுவும் உண்ணாதவர். எனவே வீட்டில் இருக்கும் பொங்கலை அவரது மனைவியார் இறைவனுக்கு மானசீகமாகப் படைத்து வழிபட, திருக்கோயிலைத் திறக்கும் போது பொங்கல் மணம் வீசுவதையும் பொங்கல் முனையதரையர் வீடு வரையும் சிதறி இருப்பதையும் கண்டு அடியார் வீட்டில் படைத்த எளிய பொங்கலை பெருமாள் ஏற்றுக்கொண்டதை அனைவரும் அறிந்தனர். 

இதை நினைவுகூரும் விதமாக இன்றளவும் அர்த்த சாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் வழங்கப்படுகின்றது. இரண்டாம் கால நிவேதனமாக இரவு ஒன்பது மணிக்கு மேல் படைக்கப்படுகின்றது.

#பொங்கல் 
அரிசி ஐந்து பங்கு, பாசிப்பயிறு முழுப்பயிறு ஐந்து பங்கு, இரண்டு பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியப்பிரசாதம் இது. மிளகு, சீரகம் சேர்க்கப்படுவது இல்லை. 

#காளமேகப்புலவரும் 
கண்ணபுரம் பெருமாளும்

வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம். மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.

கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் - முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது

#பஞ்சகிருஷ்ண_தலங்கள் 

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் #கபிஸ்தலம், #திருக்கோவிலூர், #திருக்கண்ணங்குடி, #திருக்கண்ணமங்கை  ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

அநாயாஸ மரணம்

அநாயாஸ மரணம்

Source: Maha Periyavaal Darisana Anubhavangal
Part 6

அறுபது வயதை தாண்டிய பக்தர்.

'எனக்கு அநாயாச மரணம் கிடைக்கணும்' என்று பெரியவாளிடம் விண்ணபித்துகொண்டார்.

அநாயாச மரணம் என்றால், நோய்வாய்ப்பட்டு, பல நாள் படுக்கையில் கிடந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் துன்பம் கொடுத்து, பின் ஒரு வழியாக போய் சேர்வது என்றில்லாமல், சட்டென்று உயிர் போய் விடுவது என்பதாகும்.

'நீங்க தினமும் பூஜை செய்து முடிக்கும் போது சொல்கிற பிராத்தனை ஸ்லோகம் -

அநாயாஸேன மரணம் விநா தைன்யேன ஜீவநம்!
தேஹி மே கிருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!

இதை சொல்லிவிட்டு த்ரயம்பக மந்திரம் சொல்லிண்டிருங்கோ..." என்றார்கள், பெரியவாள்.

பக்தர் பிரசாதம் பெற்று கொண்டு காஞ்சிபுரத்தில் அவர் தங்கியிருந்த அறைக்கு போய் கதவை திறந்து நாற்காலியில் உட்காரும் வரை பெரியவாளின் ஆக்ஞைப்படி நடந்துகொண்டார்.

அடுத்த விநாடி, அவர் நாற்காலியில் சாய்ந்து விட்டார்.

அவர் விரும்பியபடி 'அநாயாசமாக' போய் சேர்ந்துவிட்டார்.

தகவல் - https://www.rasikas.org/forums/viewtopic.php?f=28&t=21959&sid=38e6fcf99f71486aaaab0ad70349ce98&start=375

திருமணமான பெண்

திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது.

கண்கள் கலங்கியிருந்தன.

தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.

இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.

சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார்.

காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.

சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள்.

முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார்.

கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார்.

காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.

அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம்.

ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது.

இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது.

மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரிதான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது என்று கூறினார் தாய்.

உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது.

எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.