Monday, November 15, 2021

மூன்று கடிதங்கள் - சுஜாதா

மூன்று கடிதங்கள் - சுஜாதா சிறுகதை *

*கடிதம்-1***

"அன்புள்ள திரு சுஜாதா அவர்களுக்கு,

வணக்கம்.இது ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதும் முதல் கடிதம் என்பதால் ஒரு சிறு அறிமுகம்.என் பெயர் ஆர் மீனாட்சி சுந்தரம்.CIWA இணடர் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸை கவனித்துக் கொண்டிருக்கும் 33 வயது  இளைஞன்! என் தந்தை தங்கள் கதைகளைப் பற்றி நிறையச் சொல்லுவர். அவர் பாதுகாத்து வைத்திருந்த'நில்லுங்கள்  ராஜாவே'என்கிற கதைதான் நான் படித்த முதல் சுஜாதா கதை.தொடர்ந்து படித்தும் வந்திருக்கிறேன்.

எப்போதும் தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை.'மீண்டும் மத்யமர்' என்ற பொதுத் தலைப்பின்  கீழ் தாங்கள் எழுதிய பதினோரு கதைகளைப் படிக்கும் வரை.சில கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. தாங்கள் 'மத்யமர்'  என்று குறிப்பிடுவது யாரை? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? தெரியவில்லை.மாத வருமானத்தால் சொல்லவில்லை 

நீங்கள் என்பது தெரிகிறது.ஒருவித மனப்பாங்கைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.'மிடில் க்ளாஸ்  மெண்டாலிட்டி' என்று இங்கிலீஷில்  சொல்வதற்கு ஈடாக என எண்ணுகிறேன். அந்தத் தகுதியில் நான் ஒரு மிடில்க்ளாஸ்  கணவன்தான் .மனைவியிடம் கோபிக்கும், சண்டை போடும், சந்தோஷமாகப் பேசும் கணவன். டீவி பார்ப்பதில்  ஈடுபாடுள்ளவன். அறிவு ஜீவிப் பசாங்குகள் எதுவும் இல்லாதவன். வைரமுத்துவின் வரிகளுக்கு மயங்குகிறவன்.  பட்டுப்புடவை பாத்திரம், சௌபாக்கியா வெட்கிரைணடர் போட்டிகளில் கலந்து கொள்வேன்.நான் இறந்து போனால் எந்த  சரித்திரமும் எனக்கு இடம் கொடுக்காது. அப்படிப் பட்டவன்தானே உங்கள் மத்யமன்?

ஆனால் நான் சரித்திரத்தில் இடம் பெறுமாறு ஒரு காரியம் செய்துவிட்டேன்.அதை உங்களிடம் சொல்லி எனக்கு உரிய  இடத்தை எடுத்துக் கொள்ளவே ஏன், பிடுஙகிக் கொள்ளவே இந்தக் கடிதம்.இதைப் படித்த பின் நீங்கள் என் கதையை எழுதத்  தீர்மானிக்கலாம்.எனக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய,அதிர்ச்சி என்பதா ,பிரச்சனை, மன உளைச்சல் என்பதா? 

சங்கடம் என்பதா? அதை நான் சமாளித்ததுதான் இந்தக் கடிதத்தின் விஷயம். தற்கொலையை நாடும் அளவுக்கு சென்ற  தீவிரமானது.

பொதுவாக இந்த வகைக் கடிதங்கள் உங்களுக்கு அவ்வப்போது வரும்.'அவைகளுக்கு நான் பதில் அளிப்பதே இல்லை. மற்ற  பேரிடம் கதை கேட்டு அப்படியே எழுதுவதை நான் விரும்பாதவன். எனக்கு நான் கேட்கும் பார்க்கும் அனுபவிக்கும்  சம்பவங்களின் வினோதக் கலவையைத்தான் எழுத விருப்பம்.வரிக்கு வரி மற்றொருவர் கதையைப் படியெடுக்க எனக்குப்  பிரியமில்லை!'என்று நீங்கள் ஒரு முறை எழுதியிருக்கிறீர்கள்.(நீங்கள் பெரிய பத்திரிகைகளில் எழதியது அத்தனையும்  படித்திருக்கிறேன்.'கணையாழி' போன்ற பத்திரிகைகளை நான் படிப்பதில்லை.) ஆனால் பதில் போடாவிட்டாலும ஒரு நாள்  என்னைப் பார்க்க வருவீர்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.பீடிகை போதும் என எண்ணுகிறேன். 

இனி 'ஹிந்து'  நாளேட்டின் இருபதாம் தேதி மூன்றாம் பக்கத்திலும், தினத்ந்தி. தினகரன்,தினமலர் தினமணி போன்றவைகளில் முதல்  பக்கத்திலும் வெளியான செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்களோ அல்லவோ. `woman gang-raped` என்று ஹிந்து பேப்பரில்  Today's engagements'  அருகில் வெளி வந்திருந்தது.அந்த சம்பவத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மனதிலும உடலிலும் கலைக்கப் பட்டவள் என்  மனைவி.

நீங்கள் இந்த அதிர்ச்சிக்கு தயாராக இல்லை தெரியும். அதற்காகத்தான் பலத்த பீடிகை! 'ஒரு எழுத்தாளன் கிட்ட வாழ்க்கை  சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்னு நீங்க எதிர்பார்த்திங்கன்னா ஏமாற்றம்தான்'னு நீங்களே ஒரு பேட்டியில்   சொல்லியிருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் நான் விடை கேட்கவில்லை.விடை எனக்குப் புலப்பட்டு விட்டது.

விஷயம் ரொம்ப சிம்பிள் ஸார். என் மனைவியை ரெண்டு பேரோ மூணு பேரோ (சரியாகச் சொல்ல மாட்டேன் என்கிறாள்)  ரவுடிகள் பலாத்காரம் பண்ணிவிட்டார்கள். அவளுடைய ஆபிசில் ஓவர்டைம் -  பாழாப்போற ஓவர்டைம் -   பண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த கோர சம்பவம் நடந்தது .அப்புறம் என்னுடைய 'மிடில்க்ளாஸ்' மனது இவளை ஏத்துக்க  மறுத்தது. டைவோர்ஸ் வரை போய், அதே சமயம் பாவம் அவ என்ன செய்வான்னு பச்சாதாபமும் மிஞ்சியது.இதான் என்  தர்மசங்கடம்.

நான் ஒண்ணும் உத்தம புருஷன் இல்லை. ஒவ்வொருமுறையும் அவளைப் பார்ககறப்ப 'அவங்க தொட்ட கன்னம் தானே இது  அவங்க அணைச்ச உடம்பு தானே இது'ன்னு விபரீத எண்ணங்கள்ளாம் முதல்ல தோணும்.சைக்கியாட்ரிஸ்ட்டைப் பார்ததேன். விஜயராகவன்னு மாம்பலத்தில இருக்காரே அவரைப் பார்ததேன். அவர் அதை ஒரு விபத்து போல எடுத்துக்கங்க. கார்ல அடி  படறதில்லையா, ஒரு கார் விபத்தில் அடி பட்டா என்ன செய்விங்க இந்த மாதிரி எடுத்துக்கங்கன்னாரு. முடியலை.

எப்படி ஸார்? திருமணம் என்பது பவித்ரமான உறவு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற அஸதிவாரத்தில அமைஞ்சது. 

சிறுவயசிலிருந்தே தேச்சு தேச்சு மனசுக்குள்ள உருவேத்தப்பட்ட எண்ணத்தை ஒரு நாளில் உதறி எறிஞசுட முடியமா? என்  ஒய்ஃப் இதை எப்படி எடுத்துக்கிட்டான்னு கேப்பிங்க. மௌனமா இருந்தா. அதைப் பத்தி பேச்சு எடுத்த போதெல்லாம்  பக்கத்து ரூமுக்குப்போய் கதவை சாத்திக்கிடுவா.இல்லை சாயங்கால வேளைகளில அழுவா.அவ கூட முழுமையா அதை  விவாதிச்சு தீர்வு காண முடியாத ஒரு நிலையில இருந்தேன். நடந்ததை கொஞ்சம் விவரமாவே சொல்றேன்.

உங்களுக்கு ஒண்ணும் இதில சொந்த ஆர்வமோ எட்டிப் பார்க்சிகற கிறுக்குத்தனமோ இருக்காதுனனு எண்ணிக்கிட்டுத்தான்  இந்த அந்தரங்க விவரங்களை உங்களுக்கு(உங்க வாசகர்களுக்கும்) சொல்றேன் .

அவ ஒரு தனியார் மல்ட்டி நேஷனல் கம்பெனில வேலை பார்க்கிறா.நீங்க இதை எழுதினா பேரை மாத்தித்தான்  எழுதுணும்.அதனால கம்பெனி பேர் குறிப்பிட மாட்டேன். பெரிய கம்பெனி.பம்பாய் பார்சிக்காரங்க ஓனர்ஸ்.அவங்க  தயாரிக்காத அல்லது விற்காத பொருள்கள் இல்லை.அலமாரில இருந்து சோப்பு, ஷாம்பு, காஸ்மெட்டிக்ஸ், ஸ்கூட்டர்,  கம்ப்யூட்டர் சமாச்சாரம் அத்தனையும் விக்கறாங்க.நிறைய டர்ன் ஓவர். நல்ல சம்பளம். போனஸ். 

இவங்களுக்கு ஒரு முறை நான் ஆடிட் போறப்போ பேச்சு வாக்கில ஒரு ரிசப்ஷனிஸ்ட் கம் டெலக்ஸ் ஆப்பரேட்டர் வேக்கன்ஸி   இருக்கறதா தெரிஞசு என் மனைவி கிட்ட  சும்மாதானே வீட்டில இருக்கிற, ..குழந்தை இன்னும் இல்லை.. அது வரை போய்ட்டுவான்னு  சொன்னேன் இண்டர்வியூவில் கிடைச்சுருச்சசு. சம்பளமும் நல்ல சம்பளம்.எளிதான வேலை, ' 'ஒரு நாளைக்கு முப்பது தடவை  ஸ்மைல் பண்ணணும் அவ்வளவுதாம்'பா இனிமையா பேசணும் கூரியர் தபால் வரதையெல்லாம் கையெழுத்து போட்டு  வாங்கிக்கணும்.மூணு நாலு டெலக்ஸ் அனுப்பணும் அப்பப்ப ஜெராக்ஸ ஆப்பரேட்டர் வரலேன்னா மானேஜருக்கு காப்பி  எடுத்துக் கொடுக்கணும். அதுலதான் வந்தது வினை.

வெள்ளிக் கிழமை மாலை வேளையில மானேஜர் ஒரு முக்கியமான ரிப்போர்டடை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துவிட்டு போன்னு சொல்லிருக்கார். அன்னிக்குப் பார்த்து பவர்கட்டு ஐந்து மணிக்குள்ள முடிக்க முடியலை.கரண்ட் வரவரைக்கும்  வெயிட் பண்ணிட்டு இருந்துட்டு வேலையை முடிச்சுட்டு புறப்படறப்ப ஏழுமணி.

என் மனைவி கொஞ்சம் தளதளன்னு இருப்பா. அடக்கமா டிரஸ் பண்ணிக்கன்னு நிறைய தடவை சொல்லிருக்கேன். ரிஸப்ஷன் ட்யூட்டியில கொஞ்சம் பளிச்சுன்னு டிரஸ் பண்ணிக்க வேண்டியிருக்கிறதுன்னு திருத்தாம விட்டுட்டேன். அவங்க ஆபிஸ்ல  கேஷுவல் லேபர் ங்க உண்டு, ஸ்திரமான வேலையில்லாத சின்னப் பசங்க தினக்கூலில.ஆபீஸ் முடிஞ்சப்புறம் க்ளீன் பண்ண  வருவாங்க.அவங்க ரெண்டு பேர் வந்திருக்காங்க. இவ பேப்பர்களை அடுக்கிகிட்டே இருக்கறப்ப அவளை மறிச்சு, நேரா  ரிக்கார்டு  ரூம்ல தள்ளி கதவைச் சார்த்தி, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அவளை பலாத்காரம் பண்ணிருக்காங்க. மூணாவது  ஒருத்தன் இருந்திருக்கானான்னு அதிர்ச்சியில இவளுக்கு சரியா தெரியலை.வாயைப் பொத்தி மர்ரல முழங்காலை வைத்து  அழுத்தி உடைகளை உயர்த்தி...இதுக்கப்புறம் சொல்ல விரும்பலை. அப்படியே அவளை விட்டுட்டுப் போய்டடாங்க . கடிச்சு  கிழிச்சு எதிர்த்திருக்கா. சாரியெல்லாம் ரத்தம்.

இது நடந்தது ஏழரை மணி இவ போட்ட கூக்குரல் ட்ராபிக் சப்தத்தில் யாருககும் கேட்கலை.கேட்டிருந்தாலும்  மதிக்கலை.பக்கத்திலேயே ஒரு கூரியர் கம்பெனி அங்க மூணுபேர் தபால் பிரிச்சு பைகளைக் கட்டிக்கிட்டு  இருந்திருக்காங்க.அவங்க என்னமோ டீவிலதான் சப்தம் வருதுன்னு கவனிக்கலை.

எட்டு மணி வரை நான் ஆபிஸ்ல இருதேன். அவளை என் மோட்டார் சைக்கிள்ள பிக் அப் பண்ணிக்கும்படி போன்  பண்ணிருந்தா. நான் போறேன் மேசையெல்லாம் சிதறியிருக்கு காப்பியிங் மெஷினுடைய 'டோனர்' கொட்டி முகமெல்லாம்  கறுப்பு. ரிக்கார்டு ரூம்லருந்து முனகல் கேக்கறது.போய்ப் பார்த்தா.........(சில விவரங்கள் விடப் பட்டிருக்ககின்றன -சுஜாதா)

முதல்ல லேடி டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன்.அவங்க எதும் விபரீதமா நடக்கலைன்னுதான் சொன்னாங்க.கேட்ட கேள்வி  எதுக்கும் அவளால பதில் சொல்ல முடியலை அந்த டாக்டர் ரொம்ப கோவிச்சுக்கிட்டாங்க. பாதுகாப்பு இல்லாம அவளை  ஓவர்டைம் பண்ணச் சொன்ன மானேஜருக்கு போன் போட்டுக் கூப்பிட்டடாங்க. எனக்கும் என்ன செய்யறது இந்த மாதிரி  சம்பவத்தை எப்படி அணுகறதுன்னு யோசனையே இல்லை.பிரமிப்பிலதான் இருந்தேன். மனசில இனிமே என்ன? இனிமே  என்ன? ங்கற கேள்விதான் பெரிசா விஸ்வரூபம் எடுத்தது.

"அவங்க வந்து... என்னை .. என்னை.." இவ்வளவுதான் சொல்றா நந்தகுமார்னு மானேஜர் வந்து ரொம்ப வருத்தப்பட்டார்.உடனே போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தார்.இதுக்கு பப்ளிசிட்டி இல்லாம பாத்துக்ககறேன்னு சொன்னார். ஆனா  நடந்தது வேற .உலகத்தில் உள்ள அத்தனை பத்திரிகைக்காரங்களும் வந்துட்டாங்க.எங்கயோ அவங்களுக்கு மூக்கில  வேர்க்கறது.இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம அவங்களுக்கு அல்வா மாதிரி.அவளைப் படம் எடுக்காம  காப்பாத்தறதுக்குள்ளற எனக்கு அப்படியே நரம்பெல்லாம் தளர்ந்து போச்சு.ஒருத்தன் காமிராவைப் பிடுங்கி பிலிமைப் பிச்சுப்  போட்டேன். இவங்களுக்கெல்லாம் சம்பவத்தின் பரபரப்புத்தான் முக்கியமே தவிர அதில இருந்த பரிதாபமோ அதனால  எங்களுடைய வாழ்க்கை எத்தனை சிதறிப் போவுது உடைஞ்சு போன வாழ்க்கையை நாங்க எப்படி பொறுக்கி ஒட்டவைக்கப்  போறோம் ங்கற எதைப் பத்தியும் கவலை இல்லாம பெரிசா ஹெட்லைன் நியூஸ் போட்டுட்டாங்க.

என்னால முதல்ல செய்ய முடிஞ்சது. கோத்தகிரியில அவ அத்தை வீடு அங்க போய் லீவு எடுததுக்கிட்டு பரபரப்பு  அடங்கியதும் வந்தோம். அந்தப் பையன்களைக் கண்டு பிடிச்சுட்டாஙக.என் மனைவியை அடையாளம் காட்டச் சொன்னாங்க. நீங்க 'இருள் வரும்  நேரம்'ல எழுதின மாதிரி எந்த வக்கீலும் எங்களை வந்து தொந்தரவு செய்யலை.   போலீஸ் ஸ்டேஷன் போய் அவங்களை  தெளிவா அடையாளம் காட்ட முடிஞ்சுது.திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒருத்தனுக்கு பத்தொம்பது வயசிருக்கும்.மத்தவனுக்கு  இருபத்தஞ்சு . இன்னொருத்தனுக்கு மீசை கூட முளைக்கலை.   அவங்களுடைய அப்பா அம்மா வந்து 'நல்லாத்தானேங்க வளர்த்தோம் ' என்று அங்கலாயத்தது எல்லாம் எனக்கு தற்காலிகமான ஆரவாரங்கள் தான்.இந்த சம்பவத்தின் பின்னால் என் மனைவிக்கும்  எனக்கும் என்ன உறவு தொடர்வது ங்கறதுதான் பெரிய பிரச்சனையா  இருந்தது.நடந்ததுக்கு யாரைக் குற்றம் சொல்றது?  விதியையா? சமூகத்தையா? எப்படியும் என் மனைவியைக் குற்றம் சொல்ல முடியலை.

இருந்தும் தனி ரூம்ல படுத்துக்க விரும்பினேன்.அவ மனசை அது என்ன பாடு படுத்தியிருக்கும்னு தெரியாமல் கேனத்தனமா  நடந்துண்டேன் .ஆண் என்கிற ஈகோ காயம் பட்டு விட்டது. எதுக்கெடுத்தாலும அவ மேல எரிஞ்சு விழுந்தேன்."பாத்தா வத்தக்  குச்சி மாதிரி இருந்திருக்கான்.மண்டைல ஒரு பேப்பர் வெய்ட்டையாவது எடுத்துப் போடறது.பேப்பர் கத்தியை எடுத்துக் குத்த  வேண்டியதுதானே? பே ன்னு பாத்துக்கிட்டு இருந்தியா.." இப்படி யெல்லாம் அவகிட்ட பேச ஆரம்பிச்சேன்.

லேடி டாக்டர் இசகுபிசகா எதும் நடக்கலை. சேதம் இல்லை முழங்கால்ல கொஞ்சம் சிராய்ப்பு அரை குறையா முயற்சி  பண்ணிருக்காங்க ஆளரவம் கேட்டு ஓடிப் போயிருக்காங்கன்னு சொன்னாலும்... உடல் காயத்தை விட மனக்காயம் தான் அதிகம். துவங்கினது என் உள் மனப் போராட்டம் அவளுக்கு ஆறுதல் சொல்றதுக்கு  பதிலா அவளை எப்ப அணுகறபோதும நான் அவளைப் பார்க்கிற பார்வையே வேற மாதிரி ஆய்டுத்து. ஒரு மனசு அவளை டீஸ் பண்ணக் கூடாது ஆதரவா,ஆறுதலா ஏதாவது பேசுன்னு சொன்னாலும் மற்றொரு நெருப்பு மனசு  சந்தர்ப்பம் கிடைச்ச போதெல்லாம் அவளை சுரண்டிக் கொண்டே இருந்தது.

அவளுக்கே ஒரு நாள் தாங்காம"ஆமாம் நான் களங்கப் பட்டுட்டேன் என்னைப் பிடிக்கலைன்னா தள்ளி வெச்சுருங்க .நான்  கோத்தகிரிக்குப் போறேன்," என்று சொல்லிப் புறப்பட்டுப் போய்ட்டா. 

தனிமையில இருக்கறப்ப மனோகர்னு  ஒருத்தரை சந்திச்சேன் நிறைய படிச்சவர்.அவர் கீதை படிக்கச் சொன்னார். உங்க 'எப்போதும் பெண்' புத்தகத்தையும்  படிச்சேன். 

அதில சொல்லிருக்ககிற ஒரு கருத்து என்னை பாதிச்சுது.'ஒரு பெண்ணுக்கு மணவறையில் கணவன் கூட நிகழ்வது கூட ஒரு  பலாத்காரம்தான்.அவளை அறியாச் சிறுமியிலிருந்து ஒரு மனைவியாக மாற்றும் செயலில் அடிப்படையாக அவள்  கன்னிமையை உடைக்கும் ஒரு பலாத்காரம் நிகழத்தான் செய்கிறது.அது மெல்ல மெல்ல நிகழ்வதில்லை. கொடூரமாக ஒரு  திரை கிழிக்கப் படும்போது அவள் ஒரு புதிய உலகிற்குள் திணிக்கப் படுகிறாள்.'என்று எழுதியிருந்திங்க.

பெண் பெண்மை  என்பதன் மேல் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. கீதையில் பலவிஷயங்கள் எனக்குப் புரியவில்லை. இருந்தும் நிஷ்காம்யகர்மா என்கிற தத்துவம் மட்டும எனக்கு ஒரு விதமான நிம்மதி தந்தது.

மிகுந்த சிந்தனைக்குப் பின் ,திருவிழாக் கூட்டத்தில் இடிபடும்போது என் மனைவி பிறர் மேல் பட்டதில்லையா?  தொட்டதில்லையா டாக்டர தொடறதில்லையா தம்பி, அவ கஸின்ஸ் எல்லாம் தொட்டதில்லையா?மூன்று பேர் அவளைத்  தாக்கினதால அவள் உள் மனத்தின் புனிதம் எந்த விதத்தில் பாதிக்கப் படுகிறது? அவள் அழகு குறைந்து விட்டதா? கண்களில்  ஓளி மஙகி விட்டதா? சிக்கலான சமூக அமைப்பில் நகர வாழ்க்கைக்கும் நெருக்கடிக்கும் ஏழைமைக்கும் கொடுக்கும் விலை இது. சம்பவம் திரும்ப நிகழாமல் பாதுகாக்க வேண்டும் அவ்வளவுதான். அதனால் அவளுடன் நான் கழித்த அத்தனை  இன்பமான வேளைகளை மொத்தமாக ஒதுக்கிவிட்டு என்னை நானே வருத்திக் கொள்வது விவேகமல்ல.அறியாமை என்று  அவளை கோத்தகிரி போய் திரும்ப அழைத்து, ஒரு நீண்ட மௌனமான நடைக்கு அப்புறம் 

"போனால் போகிறது இனிமே நான்  அதைப் பத்தி பேசவே மாட்டேன் என் தாய் மேல் ஆணை" என்று பெரிதாகச் சொன்னேன்.

"என்னை மன்னிச்சுடுங்க" என்றாள்.

"பைத்தியமே மன்னிக்க வேண்டியது நீ என்னை. நான்தான் கிறுக்குத்தனமா நடந்துக்கிட்டேன்" என்றேன்.

என் மனைவிக்கு நிகழ்ந்தது களங்கமல்ல ஒரு விபத்து என்ற ஞானோதயம் வரும் வரை நான் ஒரு மத்யமனாக இருந்தேன்.  இப்போது? இதைத்தான் உங்களிடம் கேட்கத் தோன்றியது.

இப்படிக்கு அன்புடன்,

ஆர் மீனாட்சி சுந்தரம்.

=============================

*கடிதம்-2***

சென்னை 18

10-3-97

அன்புள்ள மீனாட்சி சுந்தரம்,

தங்கள் கடிதம் கிடைத்தது. நிச்சயமாகத் தாங்கள் செய்த காரியம் தங்கன் மனைவிக்கு நேர்ந்த விபத்தைப் பற்றித்  தங்களுக்கு ஏற்பட்ட விவேகம் தங்களை 'மத்யமர்' அல்ல உத்தமர் என்று காட்டுகிறது எல்லா சாதாரண மனிதர்களிடமும் சில  அசாதாரண குணங்கள் எதிர்பாராமல் வெளிப்படுவதை நான் அறிவேன். அவைகளைச் சிறைப் பிடித்து எழுதுவது ஓர்  எழுத்தாளனின் முக்கிய பணி என்று கருதுகிறேன். உங்கள் கடிதம் அந்தப் பணியை எனக்கு மிக எளிதாக ஆக்கி விட்டது. 

தங்கள் கடிதத்தை அப்படியே,ஓரிரு காட்டமான வரிகளை மட்டும் நீக்கிவிட்டுப் பிரசுரிக்க விரும்புகிறேன்.தங்களிடமிருந்து  ஆட்சேபம் இல்லாத பட்சத்தில். எல்லாக் கணவர்களுக்கும் ஓர் உதாரண புருஷராக அந்தக் கடிதம் உங்களைக் காட்டுகிறது.

அன்புடன்,

சுஜாதா

=========================

*கடிதம்-3***

திரு சுஜாதா என்கிற ரைட்டருக்கு

தங்களுக்கு கடுதாசி எழுதிய மீனாட்சி சுந்தரத்தின் மனைவி பவித்ரா எழுதிக் கொள்வது நீங்கள் என் புருஷனுக்கு எழுதிய  கடிதம் பார்த்தேன். அதில் அவரை ஓவராகப் புகழ்ந்திருந்திங்க. அவர் செய்த காரியம் ஓரு உத்தம புருஷனின் காரியம் என்று  எழுதியிருந்ததைப் படித்தேன்.

அந்தக் கடுதாசைப் பிரசுரம் பண்ணா மத்த புருஷர்களுக்கு அது வழி காட்டியாக இருக்கும்னும் எழுதியிருந்தீர்கள் 

.மன்னிக்கவும்.எனக்கு தமிழ் அத்தனை தெளிவாக வராது.முதல் எட்டு கிளாஸ் நான் கன்னடத்தில் படிச்சேன். அப்புறம்தான்  தமிழ். அத்தனை அழகாக எழுத வராது. அவர் நல்லா எழுதுவார்.

என் புருஷன் உங்களுக்கு என்ன எழுதினாரோ தெரியல்லை. உங்க கடிதம் அகஸ்மாத்தா அவர் ஜோபில இருந்ததை படிக்க  நேர்ந்தது. அவருடைய கடுதாசியைப் பிரசுரம் பண்ணும் பட்சத்தில் என் இந்தக் கடுதாசியையும் பிரசுரம் பண்ணவேண்டும் , அதுவே  என் தாழ்மையான விண்ணப்பம். 

எனக்கு நடந்தது விபத்து என்று என்ன என்னவோ எழுதியிருக்கிறீர்கள்.அவர் என்ன எழுதினாரோ தெரியாது.நடந்தது 

இதுதான்.

நான் வெள்ளிக்கிழமை ஆபிசில் ஓ.டி பண்ணும்போது இரண்டு பேர் என்னை ரேப் பண்ணப் பார்ததாங்க.நான்  அவர்களை ஆபிஸ் குப்பைத் தொட்டியை எடுத்துக் கவிழத்து அடித்து கூலர்ல போட்டேன். அவர்கள் என்  சொக்காயை (பிளவுசை) கிழிக்க முயற்சி பண்ணார்கள்.பக்கத்தில இருந்த கூரியர் கம்பெனி காரர்கள் சத்தம்  கேட்டு ஓடிவந்து  அவங்களில் ஒத்தனை பிடிச்சாங்க.மத்தவன் ஓடிப் போய்ட்டான்.நான் சுதாரித்துக் கொண்டு ஒரு தம்ளர் தணணி குடிச்சுட்டு  என் புருசனுக்கு போன் போட்டு வரவைழைத்தேன்.

அவர் வந்ததும் பூமிககும் விட்டத்துக்கும் எகிறினார். கூப்டு  மேனேஜரை.லேடி டாக்டர் கிட்ட காட்டணும் .போலீஸ் கம்பளெயிண்ட் கொடுக்கணும் என்றெல்லாம் பெரிசாக சப்தம் போட்டார்.அந்த ராத்திரியிலேயே எல்லா பிரஸ்காரங்களையும் கூப்ட்டனுப்பிச்சார் .போட்டோ எல்லாம் எடுக்க விட்டார். ஒண்ணுமே விபரீதமா நடக்கலைன்னு சொன்னாலும் அவர் கேட்கவில்லை. 'எங்கெல்லாம்  தொட்டான்.என்னவெல்லாம் செய்தான்?'என்று அசிங்கமாக எல்லார் முன்னாலும் கேள்வி கேட்டார்.

மானேஜர் நந்தகுமார்  வந்ததும் பெரிசாக சண்டை போட்டார்.  எனக்கு அப்போதுதான் சந்தேகம் வந்தது .ஒரு வேளை இது எல்லாமே அவர் சூழ்ச்சியா இருககுமோ என்று கூடத்  தோணிடிச்சு.அவ்வளவு வெறுப்பேத்தினார்.

ஒரு முறை கோபத்தில் கேட்கக்கூடக் கேட்டுட்டேன். என்னை டிவோர்ஸ் பண்ணணும்னு குதித்தார். ஏதோ மறு கல்யாணத்துக்கு அடிபோடறார்னு நான் எதும் பேசாம கோத்தகிரிக்கு -எங்க அத்தை  வீட்டுக்குப் போய்ட்டேன்.

சின்ன விஷயத்தைப் போய் இப்படி பெரிசு படுத்திறாரே என்று எனக்குப் புரியவில்லை. அப்புறம் திடீர் என்று ஒரு நாள் கோத்தகிரிக்கு வந்தார்.வந்து' என்னை மன்னிச்சுரு நான் செய்தது பூர்த்தி எல்லாம் தப்பு.  உனக்கு நேர்ந்தது ஒரு விபத்துதான் அதற்கான மனப் பக்குவம் எனக்கு இது வரை இல்லை.சுஜாதா புக்ஸ் படிச்சேன்   தெளிஞசுட்டேன்'னு என்ன என்னவோ சமாதானம் சொல்லி வீட்டுக்கு பிடிவாதமாக கூட்டி வந்து இனிமே அந்த பேச்சையே  எடுக்க மாட்டேன்னு கைல அடிச்சு அம்மா படத்தின் மேல சத்தியம் பண்ணிச் சொன்னார்.

மெட்ராஸ் திரும்பினதும்தான்  அவருடைய மனசு மாறினதுக்கு காரணம் புரிஞ்சுது. எங்க ஆபிஸ் மேனேஜர் நந்தகுமார் ரொம்ப நல்லவர். அவர் எனது மன வருத்தத்துக்கு நெகிழ்ந்து போய் மேலிடத்துக்கு  சிபாரிசு பண்ணி,பெரிசா லெட்டர் போட்டு ஏழு லட்ச ரூபாய் 'எக்ஸ்கிரேஷ’யா பேமெணட் ஃபர் மெணட்ல் அகனி' (payment for mental agony)  ன்னு  காம்பென்சேஷன் சாங்ஷன் வாங்கி எங்க எம்.டி ஆதித்ய தஸ்தூர் கையெழுத்துப்போட்டு அருமையான ஒரு லெட்டரும் என்  பேருக்கு செக்கும் வந்தது. அதான் அவர் மனமாற்றத்துக்கு காரணம்

ஆகவே அவருடைய லெட்டரைப் போடுவதா இருந்தா இதையும் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

இப்படிக்கு

எம். பவித்ரா

=========================

*இந்தக் கதையைப் பற்றி சுஜாதாவின் குறிப்பு: *

நான் கல்கியில் முதலில் "மத்யமர்" கதைகள் என்றும், பின்னர் "மீண்டும் மத்யமர்" கதைகள் என்றும் சிறுகதைகள் எழுதினேன். 

நீங்கள் தற்போது படித்த சிறுகதையில் உள்ள டெக்னிக் "லெட்டர் நரேஷன்" (letteர் narration) எனப்படும். இம்மாதிரி எழுதுவதில் சில சாதக / பாதகங்கள் உள்ளன. இதைப் படிக்கும் வாசகனின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் இவ்வகை கடிதங்களில் அதிகமான விவரங்கள் தர இயலாது. தந்தால் அவை சற்று போலியாக (Phoney) இருக்கும்.  உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முதலில் நான் தந்துள்ள கடிதம், எனக்கு வந்த கடிதத்தின் (கிட்டத்தட்ட அதிகம் மாற்றாத) நகல். மற்ற இரண்டு கடிதங்களும் என் கற்பனை. 

இந்தக் கடிதங்களைப் படித்த பல வாசகர்கள், "இந்தாளுக்கு கதை எழுத நேரம் இல்லை. அதனால், தனக்கு வந்த கடிதங்களை அப்படியே பிரசுரித்து விட்டார்" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  ஒரு எழுத்தாளனுக்கு இதை விட பெரிய பாராட்டு வேறென்ன வேண்டும்?

1 comment:

  1. நண்பரே, FB அறிவுஜீவி சுஜாதா வாசகர் குழுவிலிருந்து இந்தப் பதிவை இங்கே பகிர்ந்துள்ளது குறித்து மகிழ்ச்சி.  ஒரே ஒரு வரி "நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர் குழு" என்று கட்டுரையின் ஆரம்பத்திலோ / இறுதியிலோ  குறிப்பிட்டால் நல்லது. நன்றி. 

    அன்புடன், ராம் கேஷவ், அட்மின், அறிவுஜீவி சுஜாதா வாசகர் குழு

    ReplyDelete