Monday, July 13, 2020

கடாக்ஷம்

கடாக்ஷம் (சிறுகதைகள் சீ2 – 78)
#ganeshamarkalam

கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் முடிஞ்சு சௌந்தர்யமா மாறிப்போய். க்யூவில் நிக்க அழகா மண்டபம் கட்டி, நுழையர இடத்தில் காலலம்பிக்க வாகா தரையில் நீரோடை. கடைகள் எடுத்தப்புரம் நன்னா ஆகிடுத்து காமாக்ஷி அம்மன் கோவில். 

புது யானைக் கொட்டாய், நந்தவனம், பிராகரம் பூரா புதுத்தளம், வெய்யலுக்கு கம்பளம். க்யூவில் நின்ன எனக்கு எல்லாம் கண்ணில் பட்டாலும், மனசு லயிக்கலை. ஏன்னு சொன்னா உங்களுக்கும் புரியும்.

சில மாசமா மனசே சரியில்லை. எதுலேயும் ஈடுபாடில்லை, சோர்வு. வேலையில் கவனமின்மை. திட்டு வாங்கரதும், “இனிமேல் இப்படி ஆகாம பாத்துக்கரேன்”னு சொல்ரதுமா. ஆத்திலும் மனஸ்தாபம், சண்டை சச்சரவு. பையன் படிப்பில் ஆர்வமில்லை, அடிக்க போயிட்டேன். எங்கப்பா என்னை அடிச்சதேயில்லை, என்னையும் அறியாம அன்னைக்கு அப்படி. “என்ன புதுப்பழக்கம், குழந்தைமேலே கை நீட்டராய்னு அம்மாவே கடிஞ்சிண்டா. 

அவளுக்கோ உடம்பு படுத்தி எடுக்கரது. 1 வருஷமா 15 நாளைக்கு ஒரு டயாலிசிஸ் செய்யணும். நங்கநல்லூரில் காசைப் பிடிங்காம பார்த்து செய்யர இடத்தை நண்பன் சொல்லி அங்கேதான் அழைச்சிண்டு பொரேன்.

மின்னே ஸ்கூட்டரில் பின்னாடி உக்காந்துண்டே வருவள். இப்போ முடியரதில்லை. ஓலா ஆட்டோ, காஸ்ட்லியில்லை. ஆனால் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. கூடவே இருந்தா நல்லது. லீவு தரமாட்டான். கொண்டு போய் விட்டுட்டு, ப்ரேக்கில் வந்து அழைச்சிண்டு ஆத்தில் விட்டு திரும்பவும். ஆத்துக்காரி வீட்டு காரியங்கள்,  பையனை ஸ்கூலில் விட்டு வந்து எல்லாம் பாத்துக்கரா. அம்மா நன்னா இருந்தா அப்பளம், வடகம், ஊறுகாய்னு பண்ணி வித்து பாத்துப்பள். அது நின்னதில் எதுக்கு அனாவசியச் சிலவுன்னு வேலைக்காரி போடலை.

ஆத்துக்காரி அவளால் முடிஞ்சதை அலுத்துக்காம செஞ்சுடரா. எனக்குத்தான் எல்லாம் என் தலையில் ஏறி உக்காந்துட்டா மாதிரி, இன்னும் நல்ல சம்பாத்தியத்தோட வேலைன்னா நல்லதுன்னு தோணும். பிராப்தம் வேண்டாமா.

அப்பா வேளச்சேரி வீட்டை விட்டுட்டு போனர். இன்னும் 2 வருஷம் EMI கட்டணும். சின்ன வீடுதான், தன் காலில் அழுத்தமா அப்பாவொட பிளாட்டில் நின்னுண்டு, எப்படி அவர் திடமா எங்களை காப்பாத்திக் கரை சேர்த்தாரோ அப்படி இப்போ எல்லாருக்கும் குடை மாதிரி, பாதுகாப்பா. இது இல்லைன்னா சிரமப்பட்டுப் போவேன். ஆனா கடன் அடைச்சாரது. சின்னச்சின்ன மைன்டனன்ஸ் வந்திண்டேயிருக்கும். மாளாது.

அம்மா சொல்லுவள், “அப்பா, ஒரே பிள்ளை, நீ நன்னா இருக்கணும்னு கடன் வாங்கிக் கட்டினர். உனக்கே தெரியும், கட்டி குடிவரத்துக்கு முன்னாடி எத்தனை நாள் நாங்க சரியா சாப்பிடாம, சிக்கனமா, எனக்குச் சீதனமா வந்த பித்தளை, வெண்கல, வெள்ளிப் பாத்திரங்கள், நகை போட்டு அதில் வந்த காசையும் இதில் கொட்டி! ஞாபகம் வச்சுக்கோ. ஒவ்வொரு செங்கல்லுலேயும் அப்பா தெரியுவார்”.

பிராம்ணா சென்டிமென்டில் சளைக்கலை. சித்தே மத்தவா போல சாமர்த்தியமா இருக்க கத்திண்டிருந்தா? நமக்கு இருக்கிர மூளைக்கு எங்கேயோ போயிருக்கலாம். ஏதோ ஒரு சில பிராம்ணா வசதியா, பெரீய தொழில் செஞ்சிண்டு. பதவியில்.

யோசிப்பேன், இத்தனை கஷ்டம் ஒருத்தனே படணுமான்னு? இதே வேளச்சேரியிலே, அரசியல் கட்சிக்காரா எத்தனை பெரீய பங்க்ளாவில்? 6 கார் நிக்கரது. சினிமாப்படம் எடுக்கரா. எங்கேந்து இத்தனை காசோ? 

எனக்கு பிடிப்பு போக கையில் 48 தரா. அதில் பெரும்படி மாசாந்திர சிலவுன்னு 10ஆம் தேதிக்குள் கரைஞ்சிடும். மிச்சத்தை வெல்லப்பாகு மாதிரி இழுத்துப்பிடிச்சா 20 தேதி ஓட்டிடலாம். சேமிக்கரது? வெல்லப்பாகுன்னு ஒரு உவமைக்கு சொன்னேனே தவிர, இழுத்து பிடிக்கறது தித்திக்காதாக்கும். வெளீலே போணம்னா பஸ்தான். அதுவே திநகர் ஆபீஸுக்குப் போணம்னா 23ரூபாய் சுளையா வாங்கிக்கரான். போக வர 46. ஐம்பதுன்னு வச்சுண்டா மாசத்துக்கு அதுவே 1300. ஆபீஸில் வடை சாப்பிட்டு, டீ குடிச்சு நாளாச்சு. 

“கண்ணண் சார்! இவ்வளவு சிக்கனம் தேவையான்னு சந்தானம் கேட்டான். அப்போதான் அம்மாவுக்கு நடக்கர ட்ரீட்மென்ட் பத்தி சொன்னேன். “அம்மாக்கு என்ன வயசு?” 73 ன்னேன். “கஷ்டம்தான்”

எல்லாருக்கும் தெரியும் டயாலிசிஸ் சிலவாகும்னு. அதைவிட அம்மா பட்ற கஷ்டம். அவள் சரீரம் ஏத்துண்ட வேதனை தவிர, நான் படுவதும் சேர்ந்து அவ கண்ணில் தெளிவா விஸ்வரூபமா தெரியரச்சே எனக்கு துக்கம் அதிகமாகும். ஆத்திலேயே ஒரு மயான அமைதி, எப்போவாவது பையன ஸ்கூலில் இது நடந்ததுன்னு சிரிப்பு வரா மாதிரி ஏதாவது சொன்னாத்தான் மூணுபேர் முகத்திலேயும் லேசா புன்னகை வரும்.

இப்படியே எத்தனை நாள் தள்ளரது? நாமதான் ஏதாவது செய்யணும். வருமானத்தை பெருக்கிக்கரா மாதிரி ஏதாவது வழி கிடைக்குமான்னு தெரியலை. எக்ஸ்ப்ளோர் பண்ணணும். அம்மா உடம்புக்கு க்யூர் இல்லை, சமாளிச்சிண்டு போக வேண்டியதுதான். குழந்தை படிப்பு போரலை, ஸ்கூலை மாத்தினாத்தான் அவன் வாழ்க்கை ஸ்திரப்படும். அதுக்கு ஃபீஸ் ஆகும், ஆத்துக்காரி எத்தனை உபகாரமா இருக்கா! அவளுக்கு ஒண்ணுமே செய்யமுடியலை. 

அவளுக்கு தோதா வேலைக்காரி வச்சுக் கொடுத்தாலே பெரீய கிஃப்ட். மாசம் மூவாயிரத்துக்கு குறைஞ்சு வரமாட்டா. ஒரு வாஷிங்க் மெஷீன் க்ரைண்டெர். இல்லைன்னு, நிச்சயம் மனசில் ஒரு வருத்தம் இருக்கும், சொல்லலையே தவிர நான் புரிஞ்சுக்கணும். இதுக்கெல்லாம் பணம் தேவை.

ஆத்துக்காரி காதில், கழுத்தில் சீராக்கொடுத்த நகை மின்னரது. அதில் கை வைக்கலை. மூக்குக்கு நான் போடுவேன்னு மாமனார் நினெச்சிருக்கலாம். பொடப்பிடாதுன்னு இல்லை. என் ஆத்துக்காரி நல்ல சிவப்பு. வைர மூக்குத்தி போட்டுண்டா ஜொலிப்பா. அவளைப் பாக்கிரபோதெல்லாம் அதே நினைப்பு வந்து அதுக்கு வக்கில்லையேன்னு மனசு வெம்பிப்போய் கருகி கீழே பாதத்தில் விழரதை குனிஞ்சு பாப்பேன். அப்போ என்னை நானே வெறுப்பேன். அன்னைக்கு பூரா தூக்கம் வராது, சாப்பிடப்பிடிக்காது.

இத்தனை வறுமைக் கதை எடுத்து விடரானேன்னு நினைக்கரேளா? இல்லைங்காணும்! பூணல் போட்டுண்ட மிடில் கிளாஸ். வறுமையை விட மோசம்.

சந்தானம் என் கஷ்டத்தை பார்த்துட்டு “நீ வேணா காஞ்சீபுரம் போய் காமாக்ஷி அம்மனை ஒருதடவை தரிசனம் செஞ்சுட்டு குறையெல்லாம் அவள் காதில் போட்டுட்டு வாயேன்” அட்வைஸ் செஞ்சான். போய் 3 வருஷம் ஆச்சு. அம்மாவுக்கு உடம்பு படுத்தரச்சே கோவில் குளம்னு போகப் பிரியப்படலை. இவன் “நீ இப்படி இருக்கப்பிடாது, அம்பாளை வேண்டிக்கோ, நல்லது நடக்கும், மனசுக்கு அமைதி கிட்டும்”னு சொல்ல, கிளம்பினேன். 

கிட்டக்கதான். 60கிமீ. போகவர பஸ் சத்தம், அங்கே மத்தியானம் சாப்பிடன்னு கணக்குப் பண்ணி எடுத்து கொடுத்தா.

நீங்க படிச்சது நான் க்யூவில் நிக்கரச்சே நினெச்சிண்டது. கூட்டம் அதிகம் இல்லை. க்யூவில் சேர்ந்த இடத்துலேந்து 20 நிமிஷத்தில் நுழைவு வாயில் வந்தாச்சு. 10 மணிக்கு நித்ய அபிஷேகம்னு நடையை சாத்திட்டா. சித்தே க்யூ நகராம நின்னது. அவ்ளவுதான். சன்னிதி முன்னாடி அம்பாளை தரிசிச்சுட்டு, எதுத்தாப்புலே இருக்கிர மேடை ஏறி வந்தா கண் குளிர எத்தனை நாழி வேணும்னாலும் பாக்கலாம். “போபோ”ன்னு விரட்ட மாட்டா. 

கும்குமப் பிரசாதம் வாங்கிக்கரச்சே அம்பாளை சட்டுன்னு 20 விநாடிதான் பாக்க முடிஞ்சது. இங்கேந்து நிறைய பாக்கலாம். பார்த்தேன்.
எத்தனை வருஷங்களா இந்த அம்பாளுக்கு பூஜை நடக்கரது? எத்தனை அழகா புடவை கட்டி, நகை பூட்டி, மாலை சாத்தியிருக்கா! பாக்கணும்னு வந்த கடவுளை சந்தோஷமா பாக்க முடியாம குறுக்கேயும் நெடுக்கேயும் குருக்கள்மார் பலபேர் தட்டைத் தூக்கிண்டு போயிண்டு, கோவம் வரது. இடுக்கில், திடீர்னு தன் முழு உருவத்தையும் காமிச்சுட்டு மறைஞ்சுபோரா. கண் மட்டும் என்னையே பாக்கராமாதிரி தோண, சமயங்களில் இமைகள் மூடிண்டுடுதோன்னும், 

“நீ போய்க்கோ, அவ்வளவுதான் காட்சி”ன்னு அனுப்பிட முயற்சி செய்யராப்புலே.

குங்குமத்தை இட்டுக்காம பேப்பரில் முடிஞ்சு பையில் வச்சுண்டது ஞாபகம். எடுத்து இட்டுக்கரேன். வந்ததுக்கு மனம் குளிர அம்பாளை பார்த்து அவளோட பேசிண்டிருந்துட்டு போணம்னு தீர்மானமாய் சித்தே பின்னாடி நகர்ந்து சன்னிதிக்கு நேர சுவத்தில் சாய்ஞ்சு உக்காந்துக்கரேன். என்னை அறியாம கண்கள் மூடிண்டது. சித்தே முன்னாடி தெரிஞ்ச அவள் உருவம் மனக்கண்ணில், மைனஸ் குருக்கள் தெரிய மெல்ல அவளோட பெச ஆரம்பிக்கரேன். மனசில் எழும் இரைச்சல் நிச்சயம் அவள் காதில் விழும். அவளுக்கு தெரியாததையா சொல்லிடப் போரேன்?

மனசில் பட்டதை உள்ளபடி சொல்ரேன். அம்மாவைப் பத்தி சொல்ரச்சே பிரவாகமா கண்ணீர். துடைச்சுக்கத் தோணலை. வருத்தப் பட்டால் அவளெ வந்து துடைக்கட்டுமே? என்ன செய்யரான்னு பாத்துடலாம். நேரம் போனது தெரியலை. அம்மா உடம்பு, பிள்ளை படிப்பு, ஆத்துக்காரியின் ஏக்கங்கள், மூச்சுத் திணரவைக்கர சிலவுகள், உத்யோகத்தில் நாட்டமின்மை, கெட்டி கட்டிப்போன வெறுமை எல்லாத்தையும். இங்கே ஏன் வந்தேன்னும், என்னத்தை தந்து திருப்பி அனுப்பப் போராய்னு கேட்டுட்டு கண்ணை திறக்கரேன்.

மத்தியானம் நடை சாத்தர நேரம், கூட்டம் குறைஞ்சு, இங்கொண்ணும் அங்கொண்ணுமா சிலர். குருக்கள் மறைக்கலை இப்போ. சர்வபூஷணியா காமாக்ஷி காட்சி தர, அவள் தோளுயரத்தில் ஒளிரும் எண்ணை தீபத்தில், சாத்தியிருந்த வெள்ளிக் கண் என்னையே கவனிக்கர பிரமை. பிரமைதான்னு புரிஞ்சதும் கிளம்பி ஆத்துக்கு போலாம்னு எழுந்துக்கரேன்.

திரும்பி வரச்சே பஸ்ஸில் நெரிசல். நின்னுண்டே பயணம். ஆத்தில் என்ன நிலவரமோ, போனை துழாவினால் கிடைக்கலை. கோவில்லே வச்சுட்டோமோ? இருக்காதே, எடுத்துண்டே வரலை. தாம்பரத்தில் இறங்கி பஸ் மாறி வேளச்சேரி வந்தாச்சு. 

ஆத்து வாசலில் கூட்டம். என்னைப் பாத்துட்டு பையன் ஓடிவரான். “அப்பா, பாட்டி செத்துப் போயிட்டா.” ஆத்துக்காரியோ “போன்லே கூப்பிட்டு சொல்லலாம்னா இங்கேயே வச்சுட்டு போவாளா? நீங்க இல்லாதப்போ பார்த்து இப்படி ஆகிடுத்தே, மணி 1 இருக்கும்”னு சொல்ரா.

அப்படியே சாஞ்சு உக்காந்துக்கரேன். இப்படி ஆயிடுத்தே, அம்மாவுக்கு ட்ரீட்மென்டில் என்ன குறை வச்சேன்? அடுத்த டயாலிசிஸ்கு இன்னும் 1 வாரம் இருக்கேன்னு காலெண்டரை பாக்கரேன். என் துக்கத்தை அமைதியா கேட்டப்புரமும் அம்பாள் இரக்கமில்லாம இப்படி செஞ்சுட்டாளே? காரியம் முடிஞ்சதும் அக்கடான்னு உக்கார கூட இருந்த சந்தானம் சொன்னான்.

“அம்பாள் கடாக்ஷம் உனக்கு கிடச்சுதுன்னுதான் எனக்குத் தோண்றது கண்ணா. உங்கம்மாவை கரை சேர்த்து, அவளோட வலியைத் தீத்துவச்சு காஞ்சி காமாக்ஷி தங்கிட்டே அழைச்சிண்டுட்டா. கூடவே உனக்கு இருந்த பெரீய பாரத்தை சொல்லாம நீக்கியிருக்கா” 

“போடா, அம்மாவை பாரமா நான் எப்போ நினெச்சேன்?” 

“இல்லைதான். நீ உன் அம்மாவை நன்னா கவனிச்சிண்டது அம்பாளுக்கு தெரியாமலா? அதான் ஆசையில் இனிமேல் அம்மாவான்னு நானே வந்து உங்கூட இருக்கப்போரேன்னு சொல்ராடா, கடாக்ஷம் கிடெச்சிருக்கு. “இனிமேல் எந்த ஒரு குத்த உணர்ச்சியும் இல்லாம வாழ்க்கையில் ஈடுபாட்டோட உன் குடும்பத்துக்கு செய்ய வேண்டியதை நீ செய். எல்லாத்துக்கும் கூடவே இருப்பேன்னு சொல்லியிருப்பா, உன் காதில் விழலை”

புரிஞ்சது மாதிரி இருந்தது. மனசு சித்தே நாழி கழிச்சு லெசாச்சு.

No comments:

Post a Comment