சாணை (மனதை தொட்டுவிடும் கதைகள் – 35)
#ganeshamarkalam
ஆத்துக்காரி, அக்கம் பக்கத்து மாமிகளோட ஹோசூர் கிட்டே கொல்லேகல் நாராயண சுவாமி கோவிலில் யாதவாப்யுத்தம் பாராயணம் பண்ணப் போரோம்னுட்டு 4 நாள் பிரயாணம். போயாச்சு. இப்படி கிளம்பிப்போனா எனக்கு ஃப்ரீயா இருக்கும்.
கடல் போன்ற வீட்டில் நான் மட்டும்தான். யார் “ஹெட் ஆஃப் தி ஃபேமிலி”ங்கிரத்தில் ஒரு சச்சரவும் வராது. எனக்கு பிடிச்சா மாதிரி ஐடெம் சமைச்சு சாப்டுண்டு தாராளமா புழங்கிப்பேன். ஒருவேளை வெறும் வெஜிடபிள், அல்லது ஃப்ரூட்ஸ். ஒருவேளை திக்கா சூப் அப்புரம் 8 பிளாச்சுளை, பொடேடோ சிப்ஸ். ராத்திரி கருப்பு திராக்ஷை ஜூஸ் மட்டும். இத்தாலி போனப்போ வாங்கிண்டு வந்த வைன் கிளாசில். எந்த ரூம்லே வேணும்னாலும் உக்காந்து சாப்பிடுவேன். முன் வராந்தாவில் பாதி ராத்திரி தூங்கிட்டு அப்புரம் எழுந்து போய் மாடி பெட்ரூமில். ஊஞ்சலில் பேயாட்டம் போடலாம். முக்கியமா வேஷ்டி கட்டிக்க வேண்டாம், பெர்மூடாதான். அவ இருந்தா இது என்ன கருமம்னு திட்டுவா.
போய் ரெண்டுநாள் ஆச்சு. இன்னைக்கு தேங்காய் துருவி, பயத்தம் பருப்பு போட்டு வெங்டைக்காய் கறி, வித் டொமடொ சாலட். ப்ளைன் பஸ்மதி ரைஸ் ஸ்டீம்ட் வித் கெட்டித்தயிர். தனியா சாப்பிட ஒரு பெரீய கப் தயிர் சக்கரை போட்டு ஃப்ரீஜரில் வச்சாச்சு. ஏஸியை டைட்டா ஓடவிட்டு, அதை மட்டும் பெட்லெ படுத்துண்டு மெதுவா ரொம்ப நாழி சாப்பிடணும் அப்படியே தூங்கிடணும்னு பிளான். வெண்டைக்காயை அலம்பி எடுத்துண்டு, கத்தியோட உக்காரரேன்.
பிரிச்ச வச்ச பழைய ந்யூஜ் பேப்பரில், யாரோ ராதிகா ஆப்தேவாம் தனியா இருக்கிர பிராம்ணனை, மனசு சஞ்சலப்படக்கூடிய ஆம்பளையை மயக்கரா மாதிரி பாக்கரா. அப்போதான் அவள் கண்ணில் இருக்கிர கூர்மை எங்காத்து கத்தீலே இல்லைன்னு தெரிஞ்சுது.
யாரோ கணெஷமர்களமாம், வீட்டுக்குறிப்புகள்னு எழுதியிருந்தார். நல்ல மனுஷன். பீங்கான் கப்பின் அடிப்பாகத்தில் தேச்சா கத்தி கூர்மை ஆகிடும்னு. ஆனா ஆத்தில் கப் இல்லை. பக்கத்தாத்து நாரயணனை கேக்கலாம்னா அவாளோட சண்டை. போன வாரம் எங்காத்து தென்னை மரத்துலேந்து விழுந்த 3 தேங்காயில் ஒண்ணை எடுத்து வச்சுண்டு 2 தான் தந்தான். திட்டிட்டேன். அவனை கத்தி தேய்க்கணும்னு சொன்னா அவனே தேய்ச்சு என் வயித்தில் சொறுகிடுவான். என்ன பண்ணலாம்னு யோசிண்டிருக்கச்சே வாசலில் “சாணை பிடிக்கணுமா”ன்னு ஒருத்தன் சரியான ஸமயத்தில் ஆபத்பாந்தவனா வரான். “ஆமாம், கொஞ்சம் நில்லுன்னு” ஓடரேன்.
என் வயசிருக்கும், பெரீய ஸ்டூல் மாதிரி. அதில் சில சக்கரங்களுடன் தோள்லேந்து இறக்கினான் தாடிக்காரன். கேட்டை தொரந்துண்டு உள்ளே வான்னுட்டு நானும் என் கத்தியை காமிச்சுண்டே வெளியே வரேன்.
என் கையில் இருந்த சின்ன கத்தியை பாத்துட்டு இந்தாத்தில் ஒண்ணும் தேராதுன்னு நினெச்சிருப்பான். “எத்தனை கத்தி சாமீ”ன்னான். நான் “இதோ”ன்னு அதைக்காமிச்சேன். “ஒரு கத்தி பண்ணமாட்டேன், இன்னும் கொண்டுவாங்க” ன்னான். நான், “ஒண்ணுக்கு எவ்வளவு கேப்பாய்”னு கேட்டதுக்கு, 5ரூபான்னு சொன்னான். சரி கொஞ்சம் இருன்னு உள்ளே போய் 4 கத்தி ஒரு அருவாமனை, ஒரு தேங்காய் சீவர அருவான்னு எடுத்துண்டு வரேன். அவன் முகம் மலர்ந்தது.
அருவாமனைக்கும், பெரிய அருவாளுக்கும் தலா 25 ரூபாயாம், ஒரு கத்தி நீளமா இருந்தது அதுக்கு 15ஆம் இப்படி மொத்தம் 75ன்னான். எனக்கு ரொம்பன்னு பட்டது. ஆத்துக்காரிக்கு தெரிஞ்சு இவ்வளவு ஏன் கொடுத்தாய்னு திட்டினா? போன் போட்டுக் கேக்கலாமான்னு யோசிக்கரச்சே இப்போ காவேரிலே குளிச்சுண்டிருப்பான்னு அவ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. துணிச்சலா நானே முடிவெடுத்து ஒரு காரியம் செஞ்சு ரொம்ப நாளாயிடித்துன்னு தோணித்து, “சரி”ன்னுட்டேன்னா பாருங்கோளேன்!
குடிக்க கொஞ்சம் தண்ணி இருந்தா குடுங்கோன்னு கேட்டான். நான் தயிரை போட்டு கடெஞ்சு, ஐஸ் போட்டு, தந்தேன். அவனுக்கு குஷி. ஸ்டூல் மாதிரி இருந்ததை நிறுத்தி வச்சு காலில் பெடல் மாதிரி அடிச்சுண்டே ஒரு பெரீய சைக்கிள் சக்கரத்தை ஓட்டினான். அதிலேந்து பெல்டுலெ கட்டின ஒரு சின்ன கனமான சாணைக்கல் வேகமா சுத்த ஆரம்பிச்சது, ஏதொ ஒரு பாட்டை பாடிண்டே ஒவ்வொண்ணா எடுத்து சானை பிடிக்க ஆரம்பிச்சான். அவன் கல்லிலேந்து மத்தாப்பு மாதிரி நெருப்பு, என் பேரன் பாத்தான்னா குஷியா கையத்தட்டிண்டே வேடிக்கை பாப்பான்ன்னு தோணித்து. ந்யூ ஜெர்ஸிலே வாஸல்ல சாணை பிடிக்கரவன் வருவானா?
சீக்கிரமே எல்லாத்தையும் சாணை பிடிச்சுட்டு ஒவ்வொண்ணா கையில் கூர் பாத்தான். சிலதை திரும்ப ஓட்டினான். “இந்தா சாமீ”ன்னுட்டு அழகா மேல்துண்டுலே வாங்கிக்கசொன்னான், கையை வெட்டிடக்கூடாதுன்னு. சாஸ்த்ரிகள் அக்ஷதை போடரச்சே ஒரு பவ்யம் வரும் பாருங்கோ அதே பவ்யத்தை கொண்டுவந்து வாங்கிண்டேன். காசை என்ணிக்கொடுத்தேன். “சாமி, ரொம்ப வெய்யலா இருக்கு, கொஞ்சம் உக்காந்துட்டு போரேன்”னான். நானும் அப்படியே உக்காந்துண்டேன்.
அவனைப்பத்தி கேட்டேன். எங்கேயிருந்து இதை தூக்கிண்டு வரான்? ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பான்? தெரிஞ்சுக்கணும்னு ஆவல். நாளைக்கு நாமும் கணேஷ் கல்யாண் மாதிரி கதை எழுத கரு கிடைக்குமொனோ?
பேர் மாசிலாமணி. ஊர் திருப்போரூர். பொண்டாட்டி இல்லை. ஓடிப்போயிட்டாளாம். திக்குன்னுது, கொஞ்சமா பொராமையா கூட ஃபீலிங்க் வந்து போச்சு. ஒரே பையன். படிப்பு இல்லை, ஸ்கூட்டர் மெக்கானிக்கா இருக்கான். இவன் அப்பா இரும்புசாமான் கடை வச்சிருந்தாராம், அவருக்கு அப்புரம் பாத்துக்க தெரியலை, இதை கையில் எடுத்துண்டுட்டான். ஒரு நாளைக்கு என்னை மாதிரி வீட்டுக்கு 100 கிடெச்சா 10 வீடு பாத்துட்டு போரும்னு போயிடுவானாம். கெட்ட பழக்கம் கிடையாது. கிராமத்தில் மண் வீடு. இது போதும்கிர எளிமையான வாழ்க்கை.
என்ன பிராப்ளம்னா தினம் 10 வீடு கிடைக்காது. திருப்போரூர்லேந்து பஸ்ஸில் கிளம்பி சென்னை புறநகரில் சுத்தணும். வெய்யலில் கஷ்டம். பஸ்ஸிலும் இந்த வண்டியை எடுத்துண்டு வர கண்டக்டர் திட்டுவானாம். தனியா சீட்டு வாங்கணும். “ஆனா மனசுக்கு நிம்மதியான தொழில் சாமி”ன்னு முடிச்சான்.
நான் கேட்டேன், “கத்தி சாணையில் என்னப்பா நிம்மதி”ன்னு. பொருமையா பதில் சொன்னான். “சாமி, இந்த சாணை பிடிக்கரது எல்லோரும் சாணை கல்லில் கத்தியை உரசினா நடந்துடும்னு நினைக்கராங்க. அப்படி இல்லை இதில் பல சூட்சுமம், கலை இருக்கு. முதல்ல கத்தியை கவனிச்சு பாப்போம். எப்படி வார்த்திருக்கான்னு. அப்புரம் அதை யூஸ் எப்படி பண்ணுவாங்கன்னு கணிப்போம், காய்கறியா, மாமிசமா, மரமா, இளநீயா இல்லை அல்வா வெட்டற கத்தியான்னு. அப்புரம் இரும்பு, ஸ்டீல் என்ன உலோகம்னு, அப்புரம்தான் இதை பன்ணினா கூராகும், இப்படி கூர் பண்ணினா நிறைய நாள் உழைக்கும்னு முடிவு பண்ணி, எந்த ஸ்பீடில் சுத்தணும், எவ்வளவு அழுத்தம் கொடுக்கணும்னு பாத்து செய்வோம்”னான்.
“கொஞ்சம் ஜாஸ்தி அழுத்தினா அந்த இடத்தில் கத்தி போயிடும் அப்புரம் வீணாப்போகும். கத்தி 100ரூபா, இப்போவே கொடுன்னு சண்டை போடுவாய்ங்க. சாணை பிடிச்சதும் கூரா இல்லைன்னு இன்னும் பண்ணுன்னு சொல்ரவங்க உண்டு. இதெல்லாம் சமாளிக்கணும். சில பேர் சில்லரையில்லை இன்னும் ரெண்டு தெருவுக்கு போயிட்டு அப்புரம் வான்னு அனுப்பிச்சுடுவாங்க” கிரான்
எனக்கு ஆச்சர்யமா இருந்தது. “சாமி, நீங்க என்ன பண்ரீங்க? இவ்ளோ பெரீய வீட்டில் தனியாவ இருக்கீங்க, இத்தனை கத்தி சமாசாரத்தை வச்சு என்ன செய்வீங்க, உங்களாலே மரம் ஏற முடியுமா”ன்னு கேட்டுட்டான். நமுட்டு சிரிப்பு தெரிஞ்சது. சொன்னேன், எனக்கும் கொஞ்சம் பொழுது போகுமோன்னோ.
நான் வரதன், நாங்கெல்லாம் ஐயர், வடமா. மாருதி கார் கம்பேனீலே ஜெனெரல் மானேஜரா இருந்துட்டு இப்போ ரீடயர் ஆயாச்சு. இதெல்லாம் வெவ்வேர வருஷத்தில் வாங்கின கத்தி. மரம் வச்சதும் அருவா வாங்கினோம். கும்பகோணம் போனா என் ஆத்துக்காரி சில பாத்திரங்களும் இரும்பு சாமான்களும் வாங்காம வரமாட்டா, அப்படி சேர்ந்ததுதான் கத்திகள். நாங்க வெறும் காய்கறிதான் வெட்டுவோம். தேங்காய் சீவணும்னா, அல்லது மரம் கழிக்கணும்னா யாரையாவது கூப்பிடுவோம் அவன் கத்தி இருக்கான்னு கேப்பான். நீ இன்னும் இருக்கான்னு கேட்டதுனாலே எல்லாத்தையும் எடுத்து தந்தேன்” அப்படின்னேன்
“நீங்க கார் ஓட்டுவீங்களா சாமீ, இங்கே நிக்கரது உங்களோடதா?” “இல்லைப்பா எனக்கு ட்ரைவிங் தெரியாது, எங்கேயாவது போகணும்னா ட்ரைவர் வச்சுப்பேன்”. “அப்படீன்னா மாருதி கார் கம்பேனீலே உங்களுக்கு எப்படி வேலை கிடெச்சுது?” ஸரிதான், கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். “அங்கே வேலை செய்யரத்துக்கு கார் ஓட்ட தெரிய வேண்டாம்”னுட்டேன். ஆனா எனெக்கென்னமோ ஏதோ தப்பு செஞ்சுட்டோமோன்னும் இத்தனை நாளும் தகுதியில்லாம ஒரு உத்யோகத்தில் இருந்துட்டோமோன்னு தோணித்து.
அவன் அதோட விட்ரதாயில்லை. “நீங்க ஐயர்னு சொன்னீங்க. பாத்தாலே தெரிஞ்சுது சாமி துண்ணூரு வச்சுகிட்டு கயிறு கட்டியிருக்கீங்க, அது என்ன வடமா?”ன்னு கேட்டுட்டான்.
இதென்ன வம்பா போச்சு? இப்போ என்ன பண்ரது? “வாய் நீளமா பேசிட்டோமோ, அவன் தன் ஜாதி என்னன்னு சொல்லாதபோது நமக்கு என்ன ஜம்பம், அதுவும் இவங்கிட்டே”ன்னு நினச்சேன். ஆனா கேட்டுட்டான், இப்போ சொல்லியே ஆகணும். “அடே மாசிலாமணி, ஐயரில் ஒரு பகுதி வடமா, நாங்கெல்லாம் வேதத்தை அதோட நுணுக்கங்கள் விட்டுடாம படிச்சு அதன்படி நடக்கிரவா, அதுவும் இல்லாம வடக்கு திசையிலேந்து எங்க முன்னோர்கள் தமிழ்நாட்டுக்கு குடிவந்தவா, கொஞ்சம் போர்க்குணம் உண்டு”ன்னு சின்னதா சொல்லி முடிச்சுண்டேன். சொல்லிண்டிருகச்சேயே இவன் இன்னும் ஏதாவது இதிலேந்து எடுத்து டவுட் கேப்பானோன்னு உக்காந்த இடத்துலேந்து எழுந்திருக்க முயற்சி பன்ணினேன். அவனும் கிளம்பட்டும் எனக்கும் சமைக்கணும்.
அவன் நான் சொன்ன வடமா விளக்கத்தை காதிலேயே போட்டுக்காத மாதிரி, “சாமி இன்னும் கொஞ்சம் மோர் கிடைக்குமா”ன்னான். ஏதோ பெரீஸா ரிலீஃப் கிடெச்சாமாதிரி இருந்தது. “அதுகென்னடா”ன்னு கொண்டுவந்து கொடுத்தேன், குடுச்சுட்டு, “ரொம்ப நல்லது சாமீ, அடுத்த மாசம் வருவேன், கத்தி இருந்தா எடுத்து வையுங்க”ன்னு அவன் சைக்கிளை தோளில் தூக்கிவச்சுண்டான். “ஆகட்டும்”னு கேட்டை சாத்தலாம்னு பின்னாடி போனா, சட்டுன்னு கேட் கிட்டே நின்னு திரும்பிப்பாத்து சிரிச்சான்.
“சாமி, நான் மோர் குடிச்ச டம்பளரை கழுவிட்டு உள்ளெ எடுத்து போங்க”னான். எங்காத்தில் அப்படியெல்லாம் வழக்கம் இல்லைதான்.
அதை சொல்ரத்துக்குள்ள சாணை மாசிலாமணி தூரக்க போயிட்டான்.
No comments:
Post a Comment