மீனாட்சி ஆட்சி
..........................
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்ததை அசை போடும் போது அம்மாவின் சிநேகிதிகள் வரிசையாக ஞாபகத்தில் வருவார்கள்.
அதில் முக்கியமான கேரக்டர்
எல்.ஐ.ஸி மாமி. மாமா எல்.ஐ.ஸி யில் வேலை பார்த்ததால் அந்த பெயர்.
மாமியை பற்றி நான்கு விஷயங்கள் ஞாபகத்தில் முட்டுகிறது. முதலாவது டெய்லி சாப்பிட்டு வெற்றிலைப்பாக்கை கையில் எடுத்து கொண்டு வந்து அம்மாவிடம் ஒரு மணி நேரமாவது பேசுவார்.பேச்சில் நிறைய ஆன்மிகக் கதைகள் வரும்.அம்மாவுக்கு தெரியாத
சிவனைப்பற்றிய கதைகள், மீனாட்சிக்கல்யாணம் போன்றவற்றை
மாமி ஐயர் என்பதால்
அழகாக சுவாரசியமாக சொல்வார்.மற்றவர்களை பற்றிய வம்பு எல்லாம் இருக்காது. கதைகளை நாங்களும் கேட்போம்.ஒரு ஸ்டேஜில் அம்மாவும் மாமியும் ரொம்ப க்ளோஸாக பர்சனல் விஷயங்களை பேச ஆரம்பித்தார்கள்.
இரண்டாவது சுவாரசியம் அந்த மாமி வளர்த்த பூனைகள்.நிறைய பூனைக்குட்டிகள் வீடு முழுக்க விளையாடும்.நான் அவாத்துக்கு குமுதத்தை கொடுத்து விட்டு விகடன் வாங்க போகும் போது பூனைகளை பயத்துடன் பார்ப்பேன் மாமி குட்டிகளை தொட சொல்லி என் பயத்தை போக்கினார்.பிறகு நானும் வீட்டில் நச்சரித்து பூனை வளர்க்க ஆரம்பித்தோம்.
அம்மா ஆரம்பத்தில் எங்களுக்காக பூனைகளை சகித்து கொண்டாலும் போகப்போக சகஜமானதும், ஒரு பூனைக்குட்டி என்னுடைய
நெஞ்சு மேல் வந்து தூங்க ஆரம்பித்ததும், பூனைக்கு வரும் கர்கர் என்ற இழுப்பு சப்தம் எனக்கும் வந்து விடும் என்று யாரோ சொல்ல அம்மா பயந்ததும் , ஒரு பெரிய பூனைக்கு திடீரென்று வெறிப்பிடித்ததும் அத்தோடு பூனைகளை நாங்கள் துரத்தி விட்டதும் நடந்தது.
மாமிக்கு குழந்தைகள் இல்லை.யாரோ தூரத்து சொந்தத்திடமிருந்து ஒரு குழந்தையை அவர்கள் வறுமையில் இருந்ததால் எடுத்து வந்து வளர்த்தார்கள்.
அந்த பையன் பெயர் பாபு. காது கொஞ்சம் கேட்காது . காலேஜில் படித்துக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் மாமி அம்மாவிடம்
கொஞ்சம் ரகசிய குரலில் ஏதோ கண்களை துடைத்து கொண்டு சொன்னதும் அம்மா
ஆறுதலாக ஏதோ சொன்னாள். அம்மா பிறகு எங்களிடம் பாபுவின் புத்தகங்களை அடுக்கும் போது அவனுடைய பெற்றவர்கள் போட்டோ ஒன்றை மாமி பார்த்ததாகவும்
அவனிடம் கேட்டதற்கு அவர்கள் காலேஜில் வந்து அவனை பார்க்கிறார்கள் என்றும் எமோஷனலாக பேசி
அவன் மனதை கரைக்க ட்ரை
பண்ணுகிறார்கள் என்றும்
சொன்னானாம். அவன் சிரித்து கொண்டே தான் அவர்களை கிண்டல் பண்ணினான்.உன்னிடம் சொன்னால் நீ பயப்படுவாய் என்று சொல்லவில்லை என்று
சொன்னானாம். மாமி "ஆனால் பயமாக இருக்கு !
ரெண்டுங்கெட்டான் வயசு.
என்னை விட்டு போயிடுவானோ" என்று அழுதாளாம். பாபு உங்கள் பிள்ளை அப்படியெல்லாம்
செய்ய மாட்டான் என்று ஆறுதல் சொன்னேன் என்றாள் அம்மா.எங்களுக்கு
மாமியை பார்க்க பாவமாக இருந்தது .
கொஞ்ச நாளிலேயே மாமிக்கு அடுத்த இடி. கோயிலுக்கு போய்விட்டு வரும் பொழுது
மாமாவை வேலைக்காரியுடன்
கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் போது பார்த்து விட்டாள். அப்போது மாமிக்கு எவ்வளவு ஷாக்காக இருந்திருக்கும் என்று இப்போது புரிகிறது.அந்த பிராம்மணனுக்கு ஏன் இப்படி புத்தி போச்சு? கிளி மாதிரி பொண்டாட்டிய விட்டுவிட்டு
குரங்கு மாதிரி ஒருத்தி கிட்டயா என்று அம்மா அங்கலாய்த்து கொண்டே இருந்தாள்.இந்த மாதிரி விஷயங்களை குழந்தைகள் எதிரில் பேசக்கூடாது என்றெல்லாம் அப்போது கிடையாது. எல்லாத்தையும் கேட்டு தான் வளர்ந்தோம்.
மாமா ஒரு பிடி பிடித்து விட்டு
வேலைக்காரியை வீட்டு பக்கம் வராதே என்று சொல்வதுதானே என்று அம்மா சொல்வாள்.ஆனால் மாமியின் நிலைமை வேறு. வேலைக்காரி ப்ளாக்மெயில் பண்ணுகிறாளாம்.அடிக்கடி பணம் கேட்கிறாள்.முடியாது என்றால் உங்கள் ஆபிஸில் போய் சொல்வேன்.என் புருஷனிடம் நீ என்னிடம் தப்பாக நடந்ததாய் அழுது கொண்டே சொன்னால் உன் கதை அவ்வளவுதான் என்று மிரட்டுகிறாளாம்.பாபுவின் பெற்றோர்கள் வேறு முறைப்படி தத்து கொடுக்கவில்லை. கோர்ட்டில் கேஸ் போடுவோம் என்கிறார்களாம்.இப்படி ஆளாளுக்கு மிரட்ட நான் என்ன பாபம் செய்தேன்? நடராஜர் என்னை ஏன் இப்படி ஆட்டி வைக்கிறார் என்று கண் கலங்கியது இப்போது தான் போல் ஞாபகம் வருகிறது.
அதற்கு பிறகு அம்மா சொன்ன உபாயத்தின்படி வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி வீட்டை காலி பண்ணி கொண்டு போனார்கள். எந்த ஊர் என்று கேட்டதற்கு போய் லெட்டர் போடுகிறேன் என்று மாமி சொன்னாள்.என்னிடம் கூட ஊர் பெயரை சொல்லவில்லை அவ்வளவு பயத்துடன் ஊரை விட்டு ஓடும்படியாகவா கஷ்டம் வரணும் என்று அம்மா புலம்பி கொண்டே இருந்தாள்.நாங்கள் மாமியை மறக்க ஆரம்பித்தோம்.இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அம்மா பெயருக்கு ஒரு லெட்டர்
கவரில் வந்தது. மதுரையிலிருந்து எல்.ஐ.ஸி மாமி தான். மதுரை வந்ததிலிருந்து எல்லா பிரச்சனைகளும் சுமுகமாக முடிந்தது. மாமா ஆட்டமெல்லாம் முடிந்து அடங்கி ஒடுங்கி இருக்கிறார்..
பாபு CA படிக்கிறான்.பாபு அவன் பெற்றோர்களிடம்
நீங்கள் என்னிடம் பணத்துக்குதானே வருகிறீர்கள்.நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பெற்ற கடனுக்கு கொஞ்சம் தருகிறேன்.ஆனால் என்னிடம்
பாசத்தை மட்டும் எதிர்பார்க்காதீர்கள். அது என்னை வளர்த்தவர்களுக்குதான் கிடைக்கும் என்று கண்டிப்பாக
சொல்லி விட்டானாம்.
மாமி நீங்கள் என்னிடம் உங்காத்தில் நடராஜர் ஆட்சி நடந்தது போதும் இனி மீனாட்சி ஆட்சி நடக்க வேண்டும். நீங்கள் பயந்து கொண்டிருக்கும் வரை நம்மை எல்லோரும் ஏறி மிதிப்பார்கள்.
எதிர்த்து நிற்க வேண்டும் என்றெல்லாம் சொன்னீர்கள்.
நாங்கள் மானத்துக்கு பயந்து கொண்டு தான் ட்ரான்ஸபர் வாங்கி வந்தோம். ஆனால் இங்கு மதுரை வந்ததிலிருந்து
மீனாட்சியின் கடாட்சமோ என்னவோ எனக்கு தைரியமும் நம்பிக்கையும் வந்திருக்கிறது. அந்த மீனாட்சியின் பெயரை வைத்து கொண்டு இத்தனை வருடங்கள் பயந்து கொண்டிருந்தோமே என்று வெட்கமாக இருக்கிறது.
உங்களை போல ஒரு சிநேகிதி இல்லாத குறை தான்.அதற்கும் மீனாட்சி வழி காட்டுவாள் என்று கடிதம் முடிந்தது. மாமியின் பெயர் மீனாட்சி என்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரியும்.
இப்போது கூட உங்கள் வீட்டில் யார் ஆட்சி? சிதம்பரமா மதுரையா என்று யாராவது கேட்டால் எல்.ஐ.ஸி மாமி நினைவு தான் வரும்.
No comments:
Post a Comment