ஆத்துக்காரி மனசு (மனதை தொட்டுவிடும் கதை – 97) #ganeshamarkalam
“இதை, இதைத்தான் உங்ககிட்டேந்து எதிர்பார்த்தேன்! ஏன் இவ்வளவு நாள் ஆச்சு இந்தக்கதை சொல்ல”ன்னு நீங்க சிரிச்சுக்கரது தெரியரது. கிட்டத்தட்ட 100 எழுதிட்டானே, இந்தத் தலைப்புலேயும் எப்போ போடுவான்னு சிலர். நீங்க நினைக்கிரதா இது? பின்னே? யாரு கண்டா? அது கடைசீ பேரா போரவரைக்கும் எனெக்கே தெரியாது.
ஒரு நல்ல தமிழ்ச்சொல் “அகத்துக்காரி” பிராம்ணா பாஷையில் ஆத்துக்காரி ஆகிடுத்து. மனைவி, இல்லக்கிழத்தி, இல்லத்தரசி, இல்லாள், வீட்டுக்காரி, பாரியை, பாரியாள், பெண்டாட்டின்னு பலவிதமா சொல்லலாம். ஆத்துக்காரின்னு சொல்ரச்சேதான் அர்த்தமும் விளங்கரது, அவா மேல வச்சிருக்கிர வாஞ்சையும் வெளிப்படரதுன்னு சொல்லுவேன். அகம்னா வீடு. வீட்டுக்கு உரியவள் வீட்டுக்காரி மாதிரி அகத்துக்கு உரியவள் ஆத்துக்காரி. இது என்ன தமிழ் கிளாஸா? இத்தோட விட்டுடுவோம்! இது ஒரு உறவுச்சொல்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்கோ.
என் பெயர் கல்யாணராமன். என் பையன் பேர் சுதர்ஷன். எங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆச்சு. எனக்கு எங்கப்பா பண்ணிவச்சர், அவனுக்கு அவன் அப்பா, அதாவது நான். ரெண்டு பேரும் பரந்து கிடக்கிர பெரீய வீட்டில் வசிக்கரோம். கூட்டுக்குடும்பம்னு பீத்தலை. என் பையன் என்னோட இருக்கான். இல்லை நான் பிள்ளையோடாவே இருக்கேன்னும் சொல்லலாம். வீடு என்பேரில்தான் இன்னும் இருக்கு. ஆக மொத்தம் எங்காத்தில் ரெண்டு ஆத்துக்காரிகள்.
ஒண்ணு என்னோடது. ஒண்ணு அவனோடது, என்னோட ஆத்துக்காரி மீனலோசனி 1980 மாடல். அவனோடது அபூர்வா, 2015 மாடல். இப்போதான் கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆச்சு. 2 வயசில் குழந்தை, என் பேத்தி திரிபுரசுந்தரி. இதில் நாம கவனிக்க வேண்டியது அப்பப்போ சட்டை போட்டுக்காம ஷேம் ஷேம்னு சுத்தினாலும் எங்காத்தில் இன்னொரு ஆத்துக்காரி உருவாகிண்டிருக்கா. யாரோட ஆத்துக்காரி ஆகப்போராளோ! கார்த்தாலே எழுந்துண்டதுலேந்து இவா ரெண்டு பேரும் அந்தப்பிஞ்சை படுத்தி எடுக்கரதை பாக்கணுமே, கண்ணில் ரத்தமே வரும்.
மீனலோசனிக்கு, மாட்டுப்பொண்ணு கூடவே இருந்தாலும் இந்தாத்தில் தான்தான்னு அடிக்கடி பிரகடனப்படுத்திக்கணும். அதில் சித்தே குறைஞ்சாலும், இல்லை யாராவது அவளுடைய ப்ரீஎமினென்ஸை சந்தேகிக்கரான்னு தோணித்துனா அவளுக்கு தூக்கமே வராது. அபூர்வாவுக்கோ, நீ இந்தாத்துக்கு என்னவா வேணும்னாலும் இருந்துக்கோ, என் ஆத்துக்காரரை எனக்கு பாத்துக்க தெரியும், என் குழந்தையை எனக்கு வளர்த்துக்க தெரியும், நீ ஒரு பிள்ளையை பெத்து வளர்த்த லக்ஷணம்தான் தெரிஞ்சுடுத்தேன்னு. ரெண்டு பேர் மேலேயும் தப்பில்லாத மாதிரி தோணும். நமக்கேன் வம்புன்னு நான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் விளம்பரத்துக்கு நடுவுலே எங்கேயாவது ந்யூஸ் இருக்கான்னு தேடிண்டிருப்பேன். நமக்கேன் வம்புன்னு சுதர்ஷன் ஆபீஸில் போய் ஒளிஞ்சிண்டுடுவான்.
அன்னைக்கு வெள்ளிக்கிழமை திரிபுரசுந்தரிக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டணும்னு என் ஆத்துக்காரி தீர்மானம் செஞ்சாச்சு. மீனலோசனி எண்ணைக்குளியல் பத்தி ஆரம்பிப்பாள்னு அபூர்வா நேத்தே அதை எப்படி தடுத்து நிருத்தலாம்னு பிளான் பண்ணியிருப்பா. குழந்தைக்கு நீளமா கூந்தல் வளரணும்னு ரெண்டுபேருக்கும் ஆசை. வாராவாரம் வேண்டாமேங்கிரது சின்னவ வாதம். செவ்வாய் வெள்ளின்னு பெரியவ பிடிவாதம். ஸ்கூலுக்கு அனுப்பரச்சே எப்படியும் பாப்கட்தானேன்னு இப்போலேந்தே வேஸ்ட் விஷயத்துக்கு யுத்தம் செய்யரேள்னு நானும் சுதர்ஷணும் சொன்னோம்.
எங்களை யாரும் சட்டை செய்யமாட்டா. இந்த மாதிரி விஷயங்களில் நாங்க இந்தாத்துல ஒரு சோஃபாவுக்கோ, அறிவாள்மனைக்கோ சமம். வச்ச இடத்தில் இருக்கணும், வேணும்னா யூஸ் செஞ்சுப்பா.
சுதர்ஷணுக்கோ அவனையும் எண்ணை தேய்ச்சுக்க சொல்லுவாளோன்னு பயம், ஜிம்முக்கு போரேன்னுட்டு கிளம்பினான். என் வழுக்கை மண்டையில் எண்ணை நிக்காது, ஆனா ஓடர குழந்தையை பிடிச்சுக்க என் உதவி கேப்பா நான் ஃப்ரெண்ட் தியாகராஜனாத்துக்கு போறேன்னு, என்னை வழீலே ட்ராப் பன்ணுன்னு இவனோட தொத்திண்டு போயிட்டேன்
திரும்பி வரச்சே திரிபுரசுந்தரி கண் சிவ சிவன்னு, மூக்கு ஒழுகிண்டே அழுதுண்டே எங்கிட்டே ஓடி வந்தா. “தாத்தா எங்கே போன உன்னை தேடினேன்”னு. “என்னடி ஆச்சு செல்லம்”னு கேட்டா, “பாட்டியும் அம்மாவும் சண்டை போட்டுண்டா, அப்புரம் எனக்கு தலையில் எண்ணை கொட்டிட்டு, கண்லே சீயக்காப்பொடி தேய்ச்சுட்டான்னு அழரது. அடுத்த வெள்ளிக்கிழமை என்னோட நீயும் தியாகராஜனாத்துக்கு வந்துடுன்னு சொன்னேன்.
சாயங்காலம் மூணு ஆத்துக்காரிகளும் ஒத்துமையா கந்த சஷ்டி கவசம் சொல்ரா, அது முடிஞ்சதும் அபூர்வா கீர்த்தனை பாட, திரிபுரசுந்தரி தோசை திருப்பியால மீனலோசனி தொடையில் தாளம் போடன்னு சீனே மாறிடுத்து. ஆபீஸ்லேந்து வந்த சுதர்ஷன் அப்பா நீ ஏன் சும்மா உக்காந்திருக்காய், நீயும் திருப்புகழ் படிக்கரதுதானேன்னு கேட்டான்.
சாப்பாட்டு விஷயத்தில் இந்த ஆத்துக்காரிகள் பண்ர அலப்பரை இருக்கே, எல்லோரும் அனுபவிச்சிருப்போம்.
உங்களுக்கு இது ஆகாது, அது ஒத்துக்காதுன்னு என் தினப்படி ஆகாரம் கீரை, பருப்பு, துவையல் சுட்ட அப்பளம்னு சுருங்கிடுத்து. காய்னா வாழக்காய் மட்டும்தானா விளையரது? கிழங்கை கண்ணில் பாத்து பல மாதங்கள். காரம், உப்பு ரெண்டும் சமையலில் எடுத்துட்டு அதுக்கு பதிலா எலுமிச்சை, இஞ்சி. எனக்கென்னமோ மீனலோசனி செய்யரது அராஜகம்னு தோணும். பக்கத்து இலையில் சுதர்ஷணுக்கு கிடைக்கரதை பாத்துண்டே நான் சாப்பாட்டை முழுங்குவேன். ஒருநாள் வயத்தை வலிக்கரதுன்னான். அபூர்வா டாக்டர்கிட்டே போலாம்னா. மீனலோசனி ஓமம் வெத்திலை மென்னு சாப்பிடுன்னா. நான் என் இலையில் உருளைக்கிழங்கு கறி வச்சாலே போருமேன்னு நினெச்சிண்டேன்.
ஒரு தடவை அபூர்வா, “உருளை பொடிமாஸ் அடுப்பில் இருக்கு சித்தே பாத்துக்கோங்கோ மாமான்னு வாசல்லே குப்பை லாரி”ன்னு போனா. மீனலோசனி அவள் ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லை போய் தலையை காமிச்சுட்டு வரேன்னு போனா. இவ தலையைப்பாத்தா அவளுக்கு ஸ்வஸ்தமாகுமோ? அடுப்பில் கிளறிண்டே கொஞ்சமா டேஸ்ட் பாக்கலாம்னு எடுத்து உஃப் உஃப்னு ஊதி சாப்பிட்டேன். அபூர்வா கை மணம் தனி. சுதர்ஷன் கொடுத்துவச்சவன். மீனலோசனி சமையல்லேந்து தப்பிச்சான். அப்போதான் ஐடியா வந்தது.
பொடிமாஸை தாராளமா ரெண்டுகரண்டி கப்பில் எடுத்து வச்சிண்டுட்டு வாசல் ஊஞ்சலில் உக்காந்து சாபிடலாம்னு பிளான். “தேங்க்ஸ் மாமா”னுட்டு உள்ளே போனவள் வீல்னு கத்தினா. பண்ணின கறியில் பாதியைக்காணோம். இருந்தாலும் விஷயத்தை பெருசு படுத்தலை. நான் சின்ன சின்ன கவளமா பொடிமாஸை நுணி விரலால் உறுட்டி வாயில் போட்டுக்கரேன். அப்படியே கரையரது. சுதர்ஷன் கிட்டே சொல்லி மாட்டுப்பொண்ணுக்கு மோதிரம் வாங்கிக்கொடுக்கணும்.
அப்போன்னு திரிபுரசுந்தரி வாசல்லே பால் பொருக்க வந்தவ, நான் எதையோ ஒளிக்கரதை பாத்துட்டா. “தாத்தா எங்கிட்டே காமி இலைன்னா அம்மாகிட்டே சொல்லிடுவேன்”. நான் காமிக்கலை. “பாட்டி வரட்டும் போட்டுக்கொடுத்துடுவேன் காமி”. இப்போ பயம் வந்துடுத்து. “ஒண்ணுமில்லைடா கண்ணு, பொடிமாஸ் கறி”. “எனக்கும் வேணும்”. யார்கிட்டேயும் சொல்லப்பிடாதுன்னு சத்தியம் வாங்கிண்டு தந்தேன். நான் தந்ததில் ஒரு பச்சைமிளகாய் துண்டு. அவளுக்கு உறைக்க, அவள் கத்த, அபூர்வ வெளீலெ வர, “குழந்தைக்கு என்னத்தை கொடுத்தேள்”னு கேக்க, திரிபுரசுந்தரி மேட்டரை போட்டு உடச்சா.
இது நடக்கரச்சே மீனலோசனி என்ட்ரி. நன்னா திட்டு கிடெச்சது. “கண்டதை தின்னு உட்மபை கெடுத்துக்காதீங்கோ, என்னால் உங்களுக்கு செய்ய முடியாது”. “நான் செஞ்ச பொடிமாஸ் உங்களுக்கு கண்டதாப்போச்சா?” சாயங்காலம் வரைக்கும் ரெண்டு பேரும் உர்ருன்னு வீட்டை வலம் வந்தா. எனெக்கென்னமோ இது இன்னும் வீர்யமா வளர்ந்து வெடிக்கும், அதுக்கு சுதர்ஷன் ஆபீஸ்லேந்து வரட்டும்னு காத்திண்டிருக்கான்னு புரிஞ்சது. ஏதாவது செஞ்சு இதை எல்லாரும் மறந்துட பண்ணிடணும்னு, ஆனா, ஐடியாவே வரலை. நாக்கை கட்டுப்படித்திருக்கணும். செய்யலை.
ராத்திரி எல்லோருக்கும் பிசைஞ்ச சாதம்தான். வெத்தக்குழம்பு சாதம் பொடிமாஸ் தொட்டுண்டு அப்புரம் தயிர் சாதம். மாவடு தொட்டுண்டு, சுதர்ஷண்கிட்டே “உங்கப்பா அவர் ஷேரை அப்போவே சாப்டுட்டர், அவருக்கு கிடையாது”ன்னுட்டா. இவன் யாரும் பாக்காதபோது தன் இலையிலேந்து எனக்குத் தந்தான். அதை திருபுரசுந்தரி பாத்துட்டு யாருக்கும் சொல்லலைன்னு கண் அடிச்சா. சமத்து. இவள் வளர்ந்து இதுகள் மாதிரி இல்லாம ஒரு நல்ல ஆத்துக்காரியா வருவான்னு தோணித்து.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒரு நெக்ஸ்ட்ஜென் ஆத்துக்காரி உருவாரச்சே திடீர்னு எனக்கு நெஞ்சு வலி. ஹிந்து மிஷனில் சேத்து ஒரு வாரம் ரெஸ்ட்லெ, ரிபோர்ட் வரட்டும் பாக்கலாமுனுட்டா. மூக்கில் கையில்னு ஏதேதோ தொங்கித்து. என்னை பாத்துட்டு திரிபுரசுந்தரி கேட்டாளாம், தாத்தாவுக்கு என்னன்னு. கொஞ்சநாள் படுக்கையில் இருக்கணும், மாத்திரை சாப்பிடணும், ஊசி போடுவான்னு சொல்லியிருக்கா. அதுக்கு அவள் “நான் பக்கத்தில் இருந்து பாத்துக்கரேன், நான் சொன்னாத்தான் கல்யாணி தாத்தா கேப்பானு சொல்லித்தாம்.
அதுக்கேத்தாப்புலே ஒருநாள் கண்ணை தொரந்து பாக்கிரச்சே இவள் கிட்டக்கேயே நிக்கரா. தாத்தா பாக்கிரான்னு முதல்லே சத்தம் போட்டது இவள்தான். பெரியவா அங்கே இங்கேன்னு பராக்கு பாத்துண்டு ஆஸ்பத்திரி கேன்டீனில் என்ன பஜ்ஜி போட்டிருக்கான்னு யோசிக்கரச்சே, என் பேத்தி என்னையே பாத்துண்டு எப்போ கண் திறப்பேன்னு.
4 நாளில் ஆத்துக்கு அனுப்பிச்சுட்டா. நான் உடம்பு தேறி ஆத்துக்கு வந்தால் ஆத்தில் ஹோமம் செய்யரதாய் அபூர்வா வேண்டிண்டிருக்காளாம். மீனலோசனி, கூடிய சீக்கிரம் குலதைவம் கோவிலுக்கு குடும்பத்தோட வரோம், மாவிளக்கு ஏத்தன்னு வேண்டிண்டிருக்கா. நீ என்ன வேண்டிண்டாய்னு பேத்திகிட்டே கேட்டேன் அவள் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நைவேத்தியமாம்.
மனசில் உடனே அந்த பிஞ்சை எப்படியெல்லாம் கொஞ்சலாம்னு ரெண்டு ரீல் படம் ஓடித்து. எழுந்துண்டதும் முதல்ல அதை செய்யலாம்னு மனசை கஷ்டப்பட்டு அடக்கிண்டேன்.
எனக்கு உடம்புக்கு வந்தது ஒரு விஷயத்தை புரியவச்சது. நம்ம மேல ஆத்தில் இருக்கவா எத்தனை பாசம் வச்சிருக்கான்னு. இப்படி எதாவது நடந்தாத்தான் நமக்கு விளங்கரது. அதுக்காகவே சில விஷயங்களை, சந்தர்ப்பங்களை தேனுபுரீஸ்வரர் ஏற்படுத்திக்கொடுக்கரர்.
அன்னைக்கு ஆத்திலேதொ விவாதம். என் காதில் விழாம ஆனா சண்டை போட்டே தீரணும்கிராப்புலே ஏதோ!
திரிபுரசுந்தரி வரா, “என்னடீ ஹாலில் நடக்கரது?” “உங்கிட்டே சொல்லப்பிடாதுன்னு சொல்லியீருக்கா.” சுதர்ஷணை கூப்படரேன். வரான். “என்னப்பா என்ன பிராப்ளம்?” ஒண்ணுமில்லைப்பா எனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகும்போல இருக்கு, வடக்கே போய் சார்ஜ் எடுத்துக்கணும். அம்மாகிட்டே சொன்னா “உன் வேலையும் ஒரு மண்ணும் நீ செஞ்சு எதையும் சாதிக்க வேண்டாம். இங்கேயே இருங்கரா. அபூர்வா இந்த வேலையை விட்டுட்டு வேர வேலை ட்ரை பண்ணலாமேங்கிரா. திருபுரசுந்தரி, நீ போய்க்கோ நான் தாத்தாவோடவே இருக்கேங்கரா. அதான் சண்டை. எல்லோரும் என்னை ஓரம்கட்டிட்டா. எப்படி உன் பேச்சை யாரும் கேக்கரதில்லையோ அப்படியே என் நிலைமையும் ஆகிடுமோன்னு தோண்ரது. இப்போ நான் போகலைன்ன என் ப்ரொமோஷன் நின்னுடும்.”
“இந்த பொண்கள் ஆதிக்கம் தாங்கலை”ன்னு ஒண்ணு சேர்த்துண்டான்.
இங்கே உக்காருன்னு படுக்கைக்கு பக்கத்தில் இடம் காட்டினேன். “ஆத்துக்காரின்னா அகத்துக்கு அதிகாரின்னு அர்த்தம். அகம்னா ரொம்பபேர் வீட்டை, குடும்பத்தைன்னு அர்த்தம் செஞ்சுக்கரா. அது இல்லை அகம். அது அவா கல்யாணம் செஞ்சுண்ட ஆத்துக்காரரோட அகத்தை குறிக்கும் சொல். அகம்னா மனசு. பெண்களின் சுபாவம் நம் சிந்தனனைகள தன் வசம் செய்வது. அவாளோட அழகால், இல்லை சாதூர்யத்தால், இல்லை டாமினேடிங்க் குணாதஸியங்களால், இல்லை அன்பால், பாசத்தால், இது எதுவும் வொர்கவுட் ஆகலைன்னா அழுகை ஆர்ப்பாட்டம், படுக்கயில் ஸ்ட்ரைக் இப்படி நம்மை கட்டுப்படுத்தி நம்மை முழுசா ஆளணும்னு அவாளுக்குக்கொடுக்கப்பட்ட நியதிப்படி அவா நடந்துக்கரா. நாம தான் எது சரி, எது தப்புன்னு இந்த மாதிரி விஷயத்தில் முடிவு எடுக்கணும்.”
“ஒண்ணு மட்டும் மறந்துடாதே, அவா செய்யரது, உன்னை செய்யச்சொல்ரது எல்லாமே உன்மேல் உள்ள அன்பாலத்தான். அதுனாலே அவா சொல்ரதை காது கொடுத்துக்கேள். அப்புரம் உன் முடிவை அவாளுக்கு புரியும்படி சொல். அவாளை உன முடிவுக்கு ஒத்துக்க வை.”
“இதுக்கெல்லாம் யாருக்கு பொறுமை இருக்கு?” “இருக்கணும். ஆத்துக்காரி மனசை புரிஞ்சுக்கணும்”னேன்
இன்று தான் படித்தேன். ஏனெனில் இந்த வாரணமாயிரம் பதிவு லிங்க் இன்று கிடைத்தது.
ReplyDeleteமிக அழகான நடை. அருமையாக எழுதப் பட்டுள்ளது. ஆரம்ப லக்ஷ்மி நாவல்கள் இவ்வாறு இருந்த மாதிரி நினைவு. பிந்தைய நாவல்கள் சோகமாகச் செல்லும். ஆனால், இந்த ஆத்துக்காரி அழகாக, செல்கிறது. கடைசியில் பஞ்ச். 3 ஆத்துக் காரகளில் மனதில் நிற்பது திரிபுர சுந்தரி (எல்லோரும் எப்படியோ போங்கள், நான் தாத்தாவுடன் இருக்கிறேன்)
சிறிய ஆனால் திரைப்படம் எடுக்குமளவுக்கு பெரிய கதை—கைபேசியில் படிக்கும் நவீன வசதி என்பது விஞ்ஞானம் நமக்கு அளித்த கொடை. 👌