என் மனதுக்கு இனிய நண்பர்களே... வெகு நாட்களுக்குப் பிறகு இதோ உங்களிடம் அளவளாக வந்திருக்கிறேன்..... எனது அம்மாவின் மறைவுக்குப் பிறகு... மதுரைக்கு எனது முதலாவது பயணம்.... அம்மாவின் 45 வது நாள் காரியத்திற்காக....
எனது பயணத்தின் நேரலை உங்கள் கவனத்திற்கு... பயணங்கள் என்பது ஒரு நிகழ்வு.... அந்த நிகழ்வு சிறு சிறு சம்பவங்கள்... நல்லதும் கெட்டதும் நிறைந்தது... அந்த சிறுசிறு நிகழ்வினை உள்வாங்கி... அது நமக்குள் உண்டாக்கிய பாதிப்புகளை... நிகழ்வுகளை... எழுத்துக்களைக் கொண்டு ஆவணமாக்கி.... இதோ அவை உங்களுக்காக.... "காரோன" காலத்தில்... ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல... E பாஸ் அவசியமாகிறது. May 29 தேதி.... மதுரை பயணம் நிச்சயம் ஆகிய வுடன்.....28 ஆம் தேதி E pass ஆன்லைனில் விண்ணப்பித்தேன். என் முயற்சி பலமுறை மறுதலிக்கப் பட்டது... காரணம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். முயற்சி திருவினையாக்கும்... என்பதை மனதில் கொண்டு... பலமுறை பல காரணங்கள் முறையிட்டு.... கடைசியில் E பாஸ் வாங்குவதில் வெற்றி பெற்றேன். மதுரை கார்ப்பரேஷனுக்கு என் நன்றி உரித்தாகுக...
பயணத்திற்கு முன் ஏற்பாடாக..... எனது ஆருயிர் நண்பரை...(KVU 100)... ஆசை தீர குளிப்பாட்டினேன்... அவரும் அதையே விரும்பினார்... வெகுநாட்கள் உடை அணியாமல் வெயிலில் நின்றதால் ஏற்பட்ட அலுப்பு தீர.... நன்றாக ஒரு குற்றாலக் குளியல்... பிறகு அவருக்கு வயிறார சாப்பாடு....(full-tank பெட்ரோல்).... பிறகு அவருடைய காலுக்கு வழு ஏற்றுவதற்காக நைட்ரஜன் விட்டமின் (டயிருக்கு நைட்ரஜன் காற்று).... இம்முறை ஞாபகமாக... அவருடைய சின்ன வீட்டையும் (ஸ்டெப்னியை சொன்னேன்) கவனித்து... நைட்ரஜன் நிரப்பிக் கொண்டேன். சிங்கம்டா.... என்று கூறிக்கொண்டு... சின்னக் கண் சிமிட்டலோடு..... என்னை பார்த்து புன்முறுவல் பூத்தார். அந்தப் புன்முறுவல்.... அவர் அந்த (தல நான் ரெடி நீ ரெடியா?) பயணத்துக்குத் தயார் என்பதை அடையாளப்படுத்தியது... 28 ஆம் தேதி இரவு.... நன்றாக உறங்கி காலையில் காலையில் எழுந்து பயணத்தைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு...(கைப்புள்ள... காலை நீட்டி விட்டத்தை பார்த்து படுத்துறா) சுகமான ஒரு உறக்கம். காலையில் எழுந்தவுடன் பயணத்தை தொடர்கிறேன்....தொடரும் பயணம்....
சூரியக் கதிர்கள் பூமியை வந்தடையும் முன்... துயில் எழுந்தேன்... காலை மணி 5... கடிகாரம் காட்டியது... கிடைத்த செய்தியை மூளைக்கு அனுப்பியது கண்.... இருள் போர்த்திய பூமி ஜன்னல் வழியே தெரிந்தது.... சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுவதற்கு முற்பட்டேன்... நித்திரை எனும் என் காதலி என்னை விட்டு அகல மறுத்தாள்... நித்திரை காதலியை... இடக்கையால் பலமாக புறந்தள்ளிவிட்டு எழுந்தேன்.... காலைக்கடன்.... பேக்கிங் அண்ட் லோடிங்க்... என்ற பல "இத்தியாதி களை"... முடித்துக்கொண்டு... வாகனத்தில் அமரும் போது மணி 7.15 am. அருகில் துணைவியார் அமர... சில்லிட்ட ஏசியை ஓடவிட்டு... வாகனத்தின் வேகத்தை கலந்து யோசிக்கும் பொழுது... எனது KUV100... அசோக் பில்லர் வளைவினை... ரஜினி ஸ்டைலில் கடந்தது.
கார் பயணம் புதிதல்ல.... ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பயணிகளுடன்... பயணிக்கும் பொழுது ....கிடைக்கும் அனுபவங்கள் வெவ்வேறு... நண்பர்களுடன் சென்றார் சிரிப்பலைகள்...(அலப்பறைகள்)... மனைவியோடு சொல்லும்போது எனக்குத் துணையாய் வருவது... சித் ஸ்ரீராம் சினிமா பாடல்கள்...."என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்".... கண்களின் கவனம் சாலையில்... காதுகளின் கவனம் பாடலில்.... 100km வேகத்தில் சென்றாலும்... என்னை சிந்தாமல் சிதறாமல் சுமந்து செல்லும் எனது வாகனம்...8.30 am மணிக்கு என்னுடைய உத்தரவுக்கு எதிர்பாராமல்... வாகனம் பாலாஜி பவன் முன்னே நின்றது. Corona தயவால் ஒன்லி பார்சல்.... வயிற்றிலிருந்து உத்தரவு வந்தது... "இரண்டு இட்லி ஒரு வடை (இரண்டு செட்.. ) ஒரு செட் பூரி கிழங்கு.... ஒரு வெண் பொங்கல்" (இருவருக்கும் சேர்த்து)....Rs.199...card உரச பட்டவுடன்... பண்டம் கைமாறியது. சாலை ஓரத்தில் மரநிழலில் அமர்ந்து உண்ணுவது ஒரு தனி சந்தோஷம்.அந்த சந்தோசத்தை குறைக்கும் வகையில் நடந்தது என்ன?.நிழலை தேடி... தொடரும் பயணம்...
காலின் பெருவிரலால் ஆக்ஸிலரேட்டரில் கொடுத்த அழுத்தத்தினால்.... சிறுத்தை போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது வாகனம்... அவ்வப்போது ஸ்பீடா மீட்டரை கவனிக்கும் போது... வேகம் 120 km தாண்டி கொண்டிருந்தாலும் நான் வேகத்தை குறைக்கவில்லை... "கொக்கரக்கோ" "கொக்கரக்கோ"... சேவல் கூவியது... என்னுடைய மொபைலில் இருந்து வந்த caller tune... அண்ணனிடம் இருந்து phone... ப்ளூடூத் ஆன் செய்து கொண்டேன்.... "கிஷோர் எங்கே வந்துகிட்டு இருக்கே?"... அவர் குரலில் ஒரு அவசரம் தெரிந்தது. "மேல்மருவத்தூர் தாண்டி....ஒரு பத்து கிலோமீட்டர் வந்திருக்கேன்... மதியம் 3 மணிக்குள் வீடு வந்து சேர்ந்தது விடுவேன்." என்று பதிலளித்து விட்டு...
என்னுடைய கவனத்தை... சாலையோரம் வளர்ந்திருந்த மரங்களை மீது படர ஆரம்பித்தேன். "மரம்" என்பது...மூன்று எழுத்துக்கள் கொண்ட சொல் மட்டும் இல்லை.... அதற்கும் மேல்... தவம்செய்து இருந்தால்தான் ஒரு ஒரு மரத்தின் சினேகம்... அருகாமை கிடைக்கும்... மரத்தின் நிழலில் தஞ்சம் அடையும் போது.... ஒரு தாய் மடியின் சுகத்தை அனுபவிக்கலாம். என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் வாழ்ந்த இடம் "பசுமலை"... எனது வீட்டுக்கு எதிரே... அரசமரமும் வேம்பு மரமும் பிணைந்து... இணைந்து வளர்ந்திருக்கும். அதன் வேர்களில் பிள்ளையார் உறங்கிக் கொண்டிருப்பார். என்னுடைய எல்லா வேண்டுதல்களையும் அவர் நிறைவேற்றிக்கிறார்.... அந்த மரத்தின் அருகில் செல்லும் போதெல்லாம்... மனதுக்கு இதமான ஒரு சுகம் கிடைக்கும்... தாய் மகனை மடியில் கிடத்தி தலையை கோதி விடும் சுகம்... விடுமுறை நாட்களில்... விளையாட நண்பர்கள் கிடைக்காத பொழுது.... அந்த மரத்தில் ஏறி... சாய்ந்து வளர்ந்திருக்கும் தடித்த மரக்கிளைகளில்... கால நேரம் தெரியாமல்... உறங்கிய அனுபவம் எனக்கு உண்டு.
சிறிது நேரத்துக்குள்... நான் வேண்டிய வண்ணம்... ஒரு (புளியமர) தேவதை இரண்டு கைகளையும் அகல விரித்து என்னை வரவேற்றாள். என்னுடைய உத்தரவுக்காக காத்திராமல்... என்னுடைய KUV100... சாலையோரத்தில் பத்திரமாக தன்னை கிடத்திக் கொண்டது. பசி வயிற்றைக் கிள்ள...கட்டிக் கொண்டு வந்த பார்சலை மெதுவாக திறக்க ஆரம்பித்தாள் துணைவியார். அப்பொழுதுதான் தெரிந்தது "வெண்பொங்கல்" மிஸ்ஸிங்....... வெண்பொங்கல் இல்லாத பிரேக் பாஸ்ட்டா..... பார்சல் கொடுத்த ஹோட்டல் காரர் மீது எனக்கு கோபம்...... எனது கோபம் அடங்கும் முன்.."சாப்பிட ஏதாவது குடுங்க ஐயா"... கார் ஜன்னல் ஓரத்தில் ஒரு குரல். உடையில் வறட்சி இருந்தாலும் உடலில் வறட்சி மாறாத....45 வயது தக்க கையேந்தும் மனிதன்..."எனக்கே பத்தல... இவன் வேற"... என்ற என் மன ஓட்டத்தை அறிந்த மனைவி..."அவனுக்கு ஒரு 100 ரூபா குடுங்க... ஏதாவது வாங்கி சாப்பிட்டு போகட்டும்"... என்று ரெக்கமெண்ட் செய்யும் போது எனக்கு கோபம் தான் வந்தது. "இந்த ஊர்க்காரன் தாங்க.... வேலை ஏதாவது கிடைக்குமான்னு நடந்து போய்கிட்டு இருக்கேன்... பசிக்குது... காலையிலிருந்து இன்னும் சாப்பிடல"தளர்ந்த குரலில் பேசினார். சாப்பிட்ட கையை கழுவிவிட்டு... ஈவதில் என்னை விட என் மனைவி உயர்ந்து நிற்கிறாள் என்று அவளை மனதில் பாராட்டிக் கொண்டு., அவனுக்கு ஒரு ஐம்பது ரூபாயை கொடுத்தேன். ஹோட்டல்காரன் மீது இன்னும் எனக்கு கோபம் தணியவில்லை... பில்லை தேடினேன்... கிடைத்தது... அதில் உள்ள தொலைபேசி நம்பருக்கு போன் செய்தேன். இரண்டாவது முறை முயற்சித்தபோது மறுமுனை பேசியது.."பாலாஜி பவன்..என்ன வேணும் சொல்லுங்க".. பணிவான குரலில். " இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்கிட்ட நான் டிபன் வாங்கினேன்... பில்லில் வெண் பொங்கலுக்கு 53 சார்ஜ் பண்ணிட்டே... ஆனா வெண்பொங்கல் கொடுக்கலை..." என்று கோபத்தின் உச்சியில் கத்தினேன். "சாரி சார்".. குரலில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது. பசியை விட ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது. "ஒழுங்கா 53 ரூபாய் என்னுடைய பேங்க் அக்கவுண்ட்ல கிரெடிட் குடுத்துரு... வாட்ஸ் அப்பில் அக்கவுண்ட் நம்பர்..IFSC CODE டீடெயில்ஸ் அனுப்புறேன்"... என்று நான் கூறியவுடன் மறுமுனை அதை ஆமோதித்தது. சிறிது வினாடிகளில்... எனது வங்கிக் கணக்கில் 53 ரூபாய் வரவு வந்ததை... எனது மொபைல் செய்தி யாக கூறியது..... அடுத்த நிகழ்வு... இன்னும் சில தூரம் பயணித்த பிறகு .தொடரும் பயணம்......
உயிர் வாழ்தல் என்பது..... மூச்சுவிடுவது மட்டுமல்ல... சக மனிதர்களிடம் மட்டுமில்லாமல்... சகல ஜீவராசிகளுடனும் கைகோர்த்துச் செல்வது..👯♀️.. மரம்.🎄... தான் வாழ கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு... நாம் வாழ ஆக்சிஜனை தருகிறது... பிறந்த குழந்தைக்கு தொட்டிலாய்... இறந்த மனித உடலை எரிப்பதற்கு விறகாய்... உரு மாறிக் கொள்கிறது... பூச்சிகள்.. பறவைகள்.. வண்டுகள்... மகரந்த சேர்க்கைக்காக உழைக்கின்றன... மனிதன் தனித்து வாழ நினைப்பது தற்கொலைக்கு சமானம்.... வாழ்க்கை.... அனுபவங்களின் சேகரிப்பு.... சில அனுபவங்கள் நமக்கு மகிழ்வைத் தருகின்றன... சில அனுபவங்கள் நம்மை வீழ்த்திட வைத்தாலும்.... அவை நமக்கு பாடங்கலாய் அமைகின்றன... பல்கலைக் கழக பட்டத்தை விட வாழ்க்கை அனுபவ பாடம் சிறந்தது... சில நேரங்களில் வாழ்க்கை கற்றுத்தரும் பாடத்திற்கு மிகுந்த விலையினை தர வேண்டியுள்ளது... அப்படிப்பட்ட அனுபவத்தை தவிர்க்க நம் பாதையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்... ரோட்டின் நடுவில் போட்ட வெள்ளை கோட்டை... நாமும் தாண்டக் கூடாது... மற்றவர் தாண்டும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும்... உண்ட மயக்கம் தொண்டனுக்கும்... கார் ஓட்டும்போது நித்திரை உங்களை ஆரத்தழுவ உங்கள் உத்தரவுக்காக காத்திருப்பதில்லை.இமைகள் கணக்கின்ற வினாடிகளை நான் உணர்கின்றேன்... வாகனம் விழுப்புரத்தில் தாண்டிவிட்டதை.. என்னை நோக்கி வேகமாக ஓடி வந்து பின்னர் என்னை கடந்து சென்ற.... மைல் கல்கள் தெரிவித்தன... KUV 100..என்னை ஓரக்கண்ணால் பார்த்து..."தல... நான் இப்போ உன் கட்டுப்பாட்டில் இல்லை"... என்று சொல்லாமல் சொல்லியது. ஒரு நல்ல கிராமத்து டீக்கடையை பார்த்து... என் நண்பனை ஓரம் கட்டினேன்.
எனக்கும் மனைவிக்கும் ஒரு டயபெட்டிக் தேனீர்..(அரைச் சக்கரை இட்ட டி)... சூடாக உணவுக்குழாயில் இறங்கியது... நித்திரை இன்னும் முழுவதுமாக விலகவில்லை.... பாட்டிலில் இருந்த தண்ணீரில் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தேன்... பத்து நிமிடத்திற்குள் நான் ரெடி..."இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன... என்ன அவசரமோ..என்ன அவசரமோ.. கண்ணே..".. டீ கடை ரோடியோ பாடிய பாட்டைக் கேட்டுக் கொண்டே... காரின் ஸ்டார்ட்டிங் விசையை அழுத்தினேன்..."மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது.... இதை மனம் தான் உணர மறுக்கிறது...
கையில் கொஞ்சம் காசு இருந்தால்... நீதான் அதற்கு எஜமானன்😆
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு.. வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு.".. கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எஸ்பிபி குரலில்... எனது infotine மூலமாக என் காதில் தேனாய் ஒலித்தது... "பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு...
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு.. ஆசை துறந்தால் அகிலம் உனக்கு".... ஆசை துறந்தபின் அகிலம் கிடைத்து என்ன பயன்.... மனதுக்குள் பட்டி மன்றம் நடத்திக்கொண்டே எச்ச தூக்கத்தையும் தவிர்க்க முனைந்தேன்... "மியாவ் " மியாவ்"... இம்முறை அழைப்பு யாரிடமிருந்து? காத்திருங்கள் தொடர்வோம்...🚙தொடரும் பயணங்கள்...
"மியாவ்" பூனைக் குரல் caller tune இக்கு சொந்தக்காரன் என்னுடைய தம்பி. நான் எடுத்துப் பேசும் முன் பூனை குரல் நின்று விட்டது. ஆகையால் குறும் செய்தியாக.. என் பயணத்தை பற்றி அவனிடம் தெரிவித்தேன். அந்தச் செய்தியை பெற்றுக் கொண்டதன் அடையாளமாக ஒரு தம்ஸ் அப் திரும்பி வந்தது. நான் விரும்பிச் செய்கின்ற செயல்.. வாகனத்தை செலுத்துவது.. சில நேரங்களில் அதுவே ஒரு தியானம் போல்.. தவம் போல்... நிகழும். அவ்வாறு நிகழும்போது பயணங்கள் வார்த்தைகள் அற்று இருக்கும்.. நெஞ்சு கூட்டில் .... ஈசானி மூலையில்.. சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்... நினைவுகள்... மனதில் கரை ஒதுங்கும்...அவற்றில் சிலவற்றை சுவாசித்துக் கொண்டு நெடுந்தூரப் பயணம் நொடிப்பொழுதில் முடிந்து விடும்.
எனது கட்டுரையைப் படித்த எனது நண்பர்.."சோணமுத்தா... சாலையோரத்தில் நின்று டீ குடித்ததை ஒரு இதிகாசமாக நீட்டி முழக்கி எழுத உன்னால் மட்டும் தான் முடியும்" என்று வஞ்சப்புகழ்ச்சி மொழியில் கூறியிருந்தார். சக தோழா "சக கால.. எழுத்தாளனிடம் நான் போட்டி போட முடியாது என்றாலும் ...அவர்களின் வரிசையில்... கடைசியில் நிற்க என்னை தகுதியாக்கிக் கொள்ள எழுத்துப் பயிற்சி பெறுகிறேன்" என்கின்ற என்னுடைய பதிலை இங்கே பதிவு செய்கிறேன். கண்ணில் தெரிந்த திருச்சி மலைக்கோட்டை.நான் திருச்சி ஊரைக் கடந்து கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லியது... இன்னும் சில மைல்கள் தான்..நான் பிறந்து வளர்ந்து படித்த ஊரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மகிழ்வை கொடுத்தது. ரயில் ஒன்று... எனக்குப் போட்டியாக... என்னை விட வேகமாக.. என்னை முந்திச்செல்ல எத்தனித்தது.... மனதை தூர் வாரத் தொடங்கினேன்.... இதே ரயிலில்...ஒரு மழைக்காலத்தில்... என் சினேகிதி... என் காதலை... நிராகரித்த பொழுது(பயணக் கதையின் சுவாரசியத்திற்காக).. என் நெஞ்சில்... இடியுடன் கூடிய மழை.. கண்களின் வழியே வழிந்தோடியது... அதை இன்று நினைத்தாலும்.. விழி ஓரத்தில் ஒரு நீர்த்துளி...(கைப்புள்ள... சொந்த காசுல சூனியம் வச்சிக்கிற... ஜாக்கிரதை)...தொடரும் பயணம்....
திருச்சியை தாண்டும் பொழுது.... என் கைக்கடிகாரம் 12.45 pm⌚ காட்டியது..."வெண்பொங்கல்"காலையில் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்தில் இருந்த எனது வயிறு.... என்னை கிள்ளியது. இடது புறத்தில் "ஹோட்டல் ஆர்யா" என்னை கடப்பதற்குள்... சுதாரித்துக் கொண்டு....வலது காலால் பிரேக்கை மிதித்து இடது காலால் கிளட்சை மிதித்து... இடது கையால் கியறை மாற்றி... 100இல் இருந்து வேகத்தை 20க்கு குறைத்து....(எல்லாம் சில நொடி க்குள் முடிந்தது) என்னுடைய வரவை ஹோட்டல் வாசலில் பதிவு செய்தேன். "ஒன்லி கலந்தசாதம் கிடைக்கும்"... என்ற அறிவிப்பினை சுமந்த பலகையை என் கண் விழித்து பார்த்தது...(சோணமுத்தா... லஞ்சுக்கு நண்பன் சிவனாத் கூவிக் கூவி அழைத்தான்.. அவன் வீட்டுக்கு சென்று இருந்தால்... ஒரு கம்ப்ளீட் லஞ்ச் கிடைத்திருக்கும்... மிஸ் பண்ணிட்டே சோணமுத்தா.....உள்ளுணர்வு கேட்ட கேள்விக்கு என்னுடைய பதிலை தயாராக வைத்திருந்தேன்... ஊரெல்லாம் கோரோன பரவி கிடக்கும் இந்த வேளையில்... நண்பனை தொந்தரவு செய்வது நல்லதல்ல... என்ற ஒரே காரணத்திற்காக.. கலந்த சாதத்தை ஏற்க மனதும் வயிறும் ஒத்துக் கொண்டது.
சாம்பார் சாதம்.... தயிர் சாதம்... ஃப்ரைட் ரைஸ்.... உருளை ப்ரை.... எல்லாம் ஒரு சின்ன கரண்டி அளவுக்கு... சோத்து பருக்கையை எண்ணியெண்ணி (1..2...3... என்று எண்ணி) சாப்பிட்டாலும் கூட.. அதை உண்பதற்கு ஒரு நிமிடம் போதும்...பசி ருசி அறியாது.... நான் தயிர் சாதத்தையும் சாம்பார் சாதத்தையும் சாப்பிடும் உற்சாகத்தை (விரல் சப்பி... நக்கி நக்கி.... சாப்பிட்டு விட்டேனோ) பார்த்து முறைத்தாள் மனைவி. 'வீட்டில இதைச் செஞ்சா சாப்பிடவே மாட்டீங்க...இதப் போய் காசு கொடுத்து வாங்கி நக்கி நக்கி சாப்பிடுறீங்க.... நான் சமைக்கும் போது இப்படி மட்டும் சாப்பிடாமல் இருங்க.. உங்கள வச்சிக்கிறேன்"... மனைவி பார்வையிலே கோபப்பட்டார். அவள்...எங்கே கோபத்தில்.. மதுரையை எரித்து விடுவாளோ என்று பயந்து... மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தேன். காரின் வேக முள் ...120 தாண்டி....130 தொட கெஞ்சியது... ஓரக்கண்ணால் மனைவியை பார்த்தேன்.... கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்தாள்.... இதுதான் சமயமென்று அறிந்து.... வேகத்தைக் கூட்டி...2.45 pm மணிக்கு மதுரையில் உள்ள அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இப்படியாக மதுரைப் பயணம் முடிந்தது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment