🚩மகாபாரதம் பகுதி-58
(துரோணர்க்கும் அர்ஜுனனுக்கும் போர்..!
துரோணர் தன்னருகில் வந்ததும் அர்ஜுனன் தேரில் இருந்து கீழே குதித்தான். அவர் அருகில் சென்று, குருநாதா! தங்கள் நல்லாசியுடன் வனவாசத்தையும், அஞ்ஞான வாசத்தையும் சற்று முன்பு தான் வெற்றிகரமாக முடித்தோம். நான் வெளியில் வந்தவுடனையே துரியோதனனுடன் போர் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கிறேன். துரியோதனனுக்கும் எனக்கும் ஜென்ம பகை இருக்கிறது. அதனால் நான் அவனுடன் மட்டுமே போரிடுவேன். அவனோ புறமுதுகிட்டு ஓடிவிட்டான். அவனது நண்பன் கர்ணனும் போய்விட்டான். ஆனால், தாங்கள் என் முன்னால் நிற்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. உங்களுடன் சண்டையிடும் தைரியமும் எனக்கில்லை. ஒரு குரு நாதனை மாணவன் ஒருவன் எதிர்க்கிறான் என்றால், உலகம் அவனை பழிக்கு மல்லவா? நான் தங்களுடனோ, தங்கள் மகன் அஸ்வத்தாமனுடனோ நிச்சயமாக போரிட மாட்டேன். தாங்கள் தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும், என்றான்.
சீடனின் பணிவான வார்த்தைகளை கேட்டு துரோணாச்சாரியார் அகமகிழ்ந்தார். இருப்பினும் துரியோதனனுக்காக போரிடுவதின் அவசியத்தை உணர்ந்த அவர், அர்ஜுனா! உன் பணிவை நான் பாராட்டுகிறேன். அதேநேரம் நான் துரியோதனனிடம் பணி செய்பவன். அவன் தரும் உணவை உண்பவன். எனவே அவனைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது. மாணவன் குரு என்ற உறவு ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நீ என்னுடன் போராடு. அதற்குரிய அனுமதியை நானே உனக்கு தருகிறேன், என்றார். இதுகேட்ட அர்ஜுனன் குருவின் பெருந்தன்மையை மனதிற்குள் எண்ணி வியந்தான். உடனடியாக போருக்கு தயாரானான். மாணவனும் குருவும் மோதினர். ஒரு கட்டத்தில் குருவை மிஞ்சி விட்டான் மாணவன். அர்ஜுனனிடம் பாடம் படிக்க வேண்டிய அவசியம் குருநாதருக்கு ஏற்பட்டுவிட்டது. அந்தளவுக்கு அர்ஜுனன் மிகத்திறமையாக குருவுடன் போரிட்டான். எல்லா அம்புகளையும் இழந்து ஏதும் செய்ய இயலாமல் நின்றார் துரோணர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, அர்ஜுனன் அம்பு மழை பொழிந்தான். துரோணரின் தேர் சாரதி அம்பு பாய்ந்து இறந்தான். குதிரைகள் கொல்லப்பட்டன. தேரின் உச்சியில் கட்டப்பட்டிருந்த வேதக்கொடி சாய்ந்தது. துரோணர் தோற்று ஓடினார்.
இதைப்பார்த்த அவரது மகன் அஸ்வத்தாமன் கடும் கோபம் கொண்டான். அவன் அர்ஜுனனைப் போலவே மிகப்பெரிய வீரன். தனது பாணப்பிரயோகத்தால் அவனை கலங்க வைத்தான். அர்ஜுனனின் வில் நாண் அறுந்து போனது. உடனே அர்ஜுனன் அவன் மீது பாசுபதாஸ்திரத்தை எய்வதற்கு முயன்றான். அதைத்தடுக்கும் சக்தி அஸ்வத்தாமனுக்கு இல்லை. எனவே, அவனும் ஓடிவிட்டான். கிருபாச்சாரியாரால் அர்ஜுனன் முன்னால் நிற்கவே முடியவில்லை. இப்படியாக அனைவரையும் தோற்கடித்த பிறகு அவர்கள் விராட தேசம் திரும்பினர். விராடராஜன் மிகவும் மகிழ்ந்தான். தன் மகன் உத்தரகுமாரன் தனித்து நின்று கவுரவப் படைகளை வீழ்த்தியதாக அவன் நினைத்து கொண்டான். அப்போது கங்கமுனிவர் இடத்திலிருந்த தர்மர், விராடனா! நீ உன் மகனை நினைத்து சந்தோஷப்படாதே. இந்த வெற்றிக்கு காரணம் அவன் அல்ல. அவனோடு சென்ற பிருகந்நளை என்ற பேடிதான் அவன் ஜெயிக்க உதவி செய்தான் என்றார். இது கேட்ட விராடராஜனுக்கு கோபம் வந்து விட்டது.
முனிவரே! நீர் என்னை அவமானப்படுத்துகிறீர். என் மகனை இழிவுசெய்கிறீர். ஒரு அரவாணியால் எப்படி கவுரவ கூட்டத்தை அடக்க முடியும். நீர் சொல்வது சரியல்ல என்றான். முனிவரோ தன் -- வலுவாக நின்றார். இதைக் கண்டு ஆத்திரப்பட்ட விராடன் அவர் மீது பகடைக்காய் ஒன்றை தூக்கி வீசினான். அது முனிவரின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. அப்போது விரதசாரிணி என்ற பெயரில் அங்கிருந்த திரவுபதி மனம் பொறுக்காமல் ஓடி வந்து, கணவனின் நெற்றியில் வடிந்த ரத்தத்தை துடைத்தாள். தர்மர் ஏதும் சொல்லாமல் பொறுமையாக இருந்தார். காயை தூக்கி எறிந்தும், கங்க முனிவர் பொறுமையாக இருந்தது கண்ட விராடராஜன் வெட்கி போனான். அலங்காரபெண்ணின் செய்கை அவன் மனதை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதற்குள் அரண்மனை திரும்பிய உத்தரகுமாரன், கங்க முனிவரின் நெற்றியில் ரத்தம் வழிவது கண்டு அதிர்ச்சியடைந்தான். போர் முடிந்து திரும்பும் வழியிலேயே தான் அர்ஜுனன் என்பதையும் கங்க முனிவர் தர்மர் என்பதையும் இன்னும் மற்றவர்களைப்பற்றியும் அர்ஜுனன் விபரமாக உத்தரகுமாரனுக்கு எடுத்து சொல்லி விட்டான்.
தந்தையின் செய்கையை கண்டித்தான். அங்கே வந்திருப்பவர்கள் பாண்டவர்கள் என்பதையும், அலங்காரப் பெண்ணாக தங்களிடம் பணிசெய்தது திரவுபதி என்பதையும் எடுத்து கூறினான். தன் தங்கை உத்தரையை அர்ஜுனனுக்கே மணமுடித்து கொடுப்பதென தான் முடிவு செய்திருப்பதாக எடுத்து சொன்னான். இது கேட்டு விராடராஜன் மகிழ்ந்தான். தர்மரிடம் தனது செய்கைக்காக மன்னிப்பு கேட்டான். உத்தரையை திருமணம் செய்து கொள்ளும்படி அர்ஜுனனிடம் வேண்டினான். அர்ஜுனன் விராடராஜனிடம், மன்னா! உமது மகள் வயதில் மிகவும் இளையவள். அவளை நான் மனைவியாக ஏற்க இயலாது. என் மகன் அபிமன்யுவுக்கு அவளை திருமணம் செய்து வைக்கிறேன், என்றான். விராடராஜனுக்கு எல்லையில்லா இன்பம் ஏற்பட்டது. பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தை முடித்த செய்தி பகவான் கிருஷ்ணரை எட்டியது. அவர் தனது சகோதரி சுபத்திரை, அவளது மகன் அபிமன்யு ஆகியோருடன் விராடநாடு வந்து சேர்ந்தார். அவர்களுடன் இன்னொரு இளைஞனும் வந்தான். அவனைப்பற்றி விராடராஜனிடம் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த தகவல் ஒன்றை சொன்னார் கிருஷ்ணபரமாத்மா. அந்த இளைஞனின் பெயர் ஸ்வேதன்...!
கிருஷ்ணர் ஸ்வேதன் பற்றி என்ன சொல்கிறார் என்பதை நாளை பார்ப்போம்..!
ஶ்ரீராம ஜெயம்🙏
தொடரும்...
No comments:
Post a Comment